சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

நாளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை நிலைவரம் தொடர்பாக விவாதம்

parliament-uk.jpgஇலங்கையில் மோதல் பகுதியில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச நாடுகளில் கடும் கவலை தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைவரம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, யுத்தநிறுத்த அழைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் இலங்கை அரசாங்கம் பதிலளிக்காவிடின் பொது நலவாயத்திலிருந்து இலங்கையை இடைநிறுத்துவதற்கான அழைப்பை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் விடுக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி.ஜோயன் ரியான் தெரிவித்திருப்பதாக பிரிட்டிஷ் பத்திரிகையான “சண்டேரைம்ஸ்’ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

வருண்தான் வேட்பாளர் – பாஜக

20-varun-ganthi.jpgபிலிபித் தொகுதியில் வருண் காந்திதான் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பபீர் புஞ்ச் கூறுகையில், வருண் காந்தியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அவர்தான் பாஜக சார்பில் பிலிபித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கும், சோனியா காந்திக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள்தான், வருண் காந்தி மீது தேர்தல் ஆணையம் பாரபட்சமாக முடிவெடுக்க காரணமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வேட்பாளரை மாற்றுங்கள் என்று கூற தேர்தல் ஆணையத்திற்கு யார் அதிகாரம் தந்தது என்று தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையை நாங்கள் நிராகரித்து விட்டோம்.

சஞ்சய் தத் போன்ற தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நபர் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தர வேண்டும். வருண் காந்திதான் எங்களது மதிப்புக்குரிய வேட்பாளர். இதுகுறித்து பாஜக தலைமை முறைப்படி அறிக்கை ஒன்றை வெளியிடும். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து கோர்ட்டுக்குப் போகும் உத்தேசத்தில் வருண் காந்தி இல்லை என்று கூறப்படுகிறது.

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து சம்பியன்!

cricket_women_worldcup_.jpg மகளிருக்கான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி சம்பியனாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்டுக்களால் வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து மகளிர் அணி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

மகளிருக்கான உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி கைப்பறியிருப்பது இது மூன்றாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1973 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணி மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தற்போது 16 ஆண்டுகளின் பின்னர் அவ்வணி மீண்டும் உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 47.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதற்குப் பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 167 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. 
 

வருண் கீதையை சரியாக படிக்க முயற்சிக்க வேண்டும் – பிரியங்கா

23-priyanka.jpgவருண் காந்தி பேசிய பேச்சு வருத்தம் தருகிறது. அவர் முதலில் பகவத் கீதைய சரியாக படித்துப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்திரா குடும்பத்தின் பாரம்பரியத்தை சிதைப்பது போல உள்ளது வருணின் பேச்சு என்று வருணின் பெரியம்மா சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தனது தாயார் போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார் பிரியங்கா. அங்கு தொகுதி மக்களை சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பக்கத்தில் இருக்கும் தம்பி ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிக்கும் பிரியங்கா செல்கிறார்.

ரேபரேலி வந்த பிரியங்காவிடம், வருண் காந்தி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பிரியங்கா, வருண் காந்தி பேசியது நிச்சயம் இந்திரா குடும்பத்தின் கொள்கைகளுக்கும், பாரம்பரியத்திற்கும் உகந்ததல்ல, அவற்றுக்கு முரணானது. வருண் இப்படிப் பேசியிருப்பதைப் பார்த்து நான் வருத்தமடைந்தேன்.

வருண் பகவத் கீதைய முழுமையாக படித்து, அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நான் அட்வைஸ் செய்கிறேன் என்றார் பிரியங்கா.

பிக் பிரதர் புகழ் ஜேட் கூடி புற்றுநோய்க்கு பலி

_jadebigbro.jpgபிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார்.  அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.

ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.

ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை: உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு கொழும்பு வருகை. இன்று மாத்தறை விஜயம்

vaccina.jpgருபெல்லா தடுப்பு மருந்து ஒவ்வாமை குறித்து கண்டறி வதற்காக இருவர் கொண்ட உலக சுகாதார ஸ்தாபன மருத்துவர் குழு நேற்று மாலை கொழும்புக்கு வந்து சேர்ந்தது.

இவர்கள் இன்று (23) மாத்தறைக்குச் சென்று ருபெல்லா தடுப்பூசியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள தாக சுகாதார போசாக்கு அமைச்சு தெரிவித்தது.

ருபெல்லா (ஜேர்மன் சின்னமுத்து) தடுப்பு மருந்து ஒவ்வாமையினால் பாடசாலை மாணவி ஒருவர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கு குழுவொன்றை அனுப்புமாறு சுகாதார அமைச்சு சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தை கோரியிருந்தது.

அமைச்சின் அழைப்பின் பேரில் உலக சுகாதார ஸ்தாபன குழு நேற்று இலங்கை வந்ததோடு இந்தக் குழு இன்று (23) காலை சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வாவுடன் பேச்சு நடத்தவுள்ளது. அதன் பின்னர் மாத்தறைக்குச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளது.

விசாரணை முழுமையாக பூர்த்தி செய்யும் வரை உலக சுகாதார ஸ்தாபன குழு இலங்கையில் தங்கியிருக்கும். இதேவேளை சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு என்பனவும் தனியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உலக சுகாதார ஸ்தாபனம் பரிசோதனை தொடர்பாக சுகாதார அமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி மருந்து ஒவ்வாமையினால் மேலும்27 மாணவிகள் நோய்வாய்ப்பட்டு மாத்தறை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு தற்பொழுது 3 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களில் 7 மாணவிகள் வீடுகளுக்குத் திரும்ப அச்சம் தெரிவித்து வருவதாக மாத்தறை பெரியாஸ்பத்திரி பணிப்பாளர் அருண ஜெயசேகர கூறினார். இதேவேளை மற்றொரு சிறுமி நோய்வாய்ப்பட்டு நேற்று முன்தினம் (21) ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என அறிவிக்கப்படுகிறது.

இதேவேளை ருபெல்லா தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக இறந்த மாணவி பேசளா ஹன்சனி (13) யின் இறுதிக் கிரியைகள் நேற்று மாத்தறையில் நடைபெற்றன. அவர் கல்வி பயிலும் மாத்தறை சென். தோமஸ் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பொது மக்கள் உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

சீனாவில் வன்செயல்; திபெத்திய பிக்குகள் கைது

_china_tibet_.gifசீனாவின் வடமேற்கே குயிங்கை மாகாணத்தில் இடம்பெற்ற வன்செயல்களை அடுத்து, திபெத்திய பிக்குகள் 6 பேரை தாம் கைதுசெய்துள்ளதாகவும், வேறு 90க்கும் அதிகமானோரின் சரணடைவதற்கான கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சீனா கூறியுள்ளது.

பொலிஸ் காவலில் இருந்து திபெத்திய பிரிவினை ஆதரவளர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் தப்பித்ததை அடுத்து, சனிக்கிழமையன்று குறைந்தது 100 பேர் பொலிஸ் நிலையம் ஒன்றை தாக்கியதாக சீன சின்குவா அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அந்த நபரின் நிலைமை குறித்த வெளியான தவறான வதந்திகளால் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாந்து விட்டார்கள் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.ஆனால், ஒரு திபெத்திய பிக்குவான, அந்த நபர் ஒரு ஆற்றில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள திபெத்தியர்களால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்று கூறுகிறது.

மெளலவி ஆசிரியர் நியமனம்: போட்டிப் பரீட்சை முடிவு அடுத்தவாரம்

susil-premaja.jpgமெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் கொழும்பு, பொரல்லை நகரோதய மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 200 பேர் மெளலவி ஆசிரியர்களாக சேர்த்துக்கொள்ளப்ப டுவர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நன்மை கருதி மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந் நடவடிக்கை கடந்த இருபது வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது.

கடந்த கால ஆட்சியாளர்கள் மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நலன்கள் கருதி மூன்று கட்டங்களில் 640 மெளலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா செல்வதற்கு ‘தடை’

_dalailama.jpgதிபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார். நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.

தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றில் காவி உடை அனுமதிக்கப்படும்போது பாடசாலைகளில் பர்தாவுக்கு தடைவிதிப்பது நியாயமா?

sri-lanka-muslim-students.jpgபாராளு மன்றத்தில் காவி உடைக்கு அனுமதி வழங்கப்படும் போது பாடசாலைகளில் பர்தா உடைக்கு தடைவிதிப்பது நியாயமா என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாராளுமன்றத்தில் அம்ஜான் உம்மா பர்தா உடையுடன் வருகிறார். கண்ணியமிக்க தேரர்கள் காவி உடையுடன் வருகின்றார்கள். அறிவாளிகளை உருவாக்கும் பள்ளியில் மட்டும் பர்தா உடைக்கு அனுமதி மறுக்கப்படுவது சரிதானா என்று விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

முஸ்லிம் மாணவிகளின் இஸ்லாமியச் சீருடைக்கு மேல்மாகாணத்தில் மட்டுமின்றி திருமலை மாவட்டத்திலும் தடைவிதிப்பு தொடர்கிறது. அன்று பதுளையில் ஆரம்பித்த இந்தத்தடைவிதிப்பு இன்று கொழும்பு திருமலை வரை சென்று விட்டது. அன்று யாரோ, எதற்கோ துகிலுரிந்தார்கள் என்பது வரலாறு. இன்று பள்ளி முதல்வர்களின் பணிப்பில் முஸ்லிம் மாணவிகளின் பர்தா ஆடைகள் களையப்படுகின்றன. அன்றும் இன்றும் முஸ்லிம் பாடசாலைகளில் தமிழ், சிங்கள மாணவர்கள் தம் வழக்கமான ஆடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்த நிலையில் பாடசாலைவருவதைத் தடுக்கும் அதிபர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது ஆறுதலைத் தந்தாலும், ஆங்காங்கே காணப்படும் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படும் போதே கல்வி அமைச்சரின் அறிவிப்பு பயனுள்ளதாய் அமையும் என்பது சங்கத்தின் கருத்தாகும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.