சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்க அதிபர் விஜயம்

usa-sa.jpgஅமெரிக் காவுக்கும் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்களுக்கும் இடையே ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கும் நம்பிக்கையுடன் , அமெரிக்க அதிபர் ஒபாமா மத்தியக்கிழக்குப் பகுதி நாடுகளுக்கு விஜயம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுடன், தலைநகர் ரியாத் அருகே ஒபாமா பேச்சு வார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

வியாழக்கிழமை அவர் எகிப்துக்கு சென்று, முஸ்லீம் நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள உறவை மறுபடி வரையறுக்கும் நோக்கிலான ஒரு உரையை ஆற்றுவார்.

ஒபாமா சௌதி அரேபியாவுக்கு வருகை தந்த அதே நேரத்தில், அல் கயீதா அமைப்பின் தலைவர் ஒஸாமா பின் லாடன், அவர் வெறுப்பின் விதைகளை விதைப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிபர் ஒபாமா அவருக்கு முன்பிருந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் அடிச்சுவட்டிலேயே செல்வதாகவும், அமெரிக்கர்கள் இதன் பின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும், அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்த ஒரு ஒலிநாடா மூலம் ஒசாமா பின் லாடன் கூறினார்.

“டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்’

mosquito_preventionss.jpgமக்கள் ஒத்துழைப்பில்லாமல் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியாது. சூழலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அக்குறணை வைத்தியசாலை வளாகத்தில் சுகாதாரக்குறைவு காணப்படுவதுடன் வைத்தியர்களுக்கும் இதனால் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது என்று மத்திய மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் எழுத்துமூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் அக்குறணை மாவட்ட வைத்தியசாலையில் நிர்வாக சீர்கேடுகள் நிலவுகிறது. இங்கு விடுதிகளில் எந்தவொரு வைத்தியரும் தங்குவதில்லை. இதனால், அவரசிகிச்சை பிரிவு இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஞாயிற்றுக்கிழமையில் வெளிநோயாளர் பிரிவில் காலையிலும் மாலையிலும் ஒரு வைத்தியர் மட்டும் சேவையிலுள்ளதால் 50 வீத நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாது மீண்டும் திரும்பிச் செல்கின்றனர். முறையற்ற சேவைமாற்று முறைகளை முறையாக்க பணிப்பாளரினால் சேவைமாற்று பட்டியல் ஒன்று தயாரித்து அனுப்பப்படவேண்டும்.தற்போது சேவைமாற்று முறைப்படி வெளிநோயாளர் பிரிவிற்கான வைத்தியர்கள் அதற்காக கலந்துகொள்வதில்லை.

சிலர் மேலதிக சேவைக்கொடுப்பனவினை முறையாக கடமைசெய்யாது பெற்றுக்கொள்கின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற எழுத்துமூல கேள்வியினை மாகாணசபை உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாகாண சுகாதார அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தனவிடம் கேட்டிருந்தார்.

இதற்கு தொடர்ந்தும் அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன பதிலளிக்கையில்; வைத்தியர் சேவை செய்வது போதாது என கூறமுடியாது. மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.இங்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் அக்குறணை தெலும்புஹாவத்த பகுதியே டெங்குமூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பாடசாலையில் 378 மாணவர்களில் 150 மாணவர்களே வருகை தருகிறார்கள். இங்கு சரியான குடிநீர் வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஆர்.பி. சமரகோன் தும்பனை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு எனக்கு அறிவித்தல்கள் அனுப்பப்படுவதில்லை.இதுபற்றி நான் விசாரித்தேன். ஒரு அமைச்சரின் உத்தரவுக்கு அமையவே அழைப்புகள் அனுப்புவதில்லை என்றனர்.இது எனது உரிமை மீறப்பட்ட செயலாகும் என்றார். இதுபற்றி தும்பனை பிரதேச செயலாளருக்கு அறிவிப்பதாக சபைக்குத் தலைமைதாங்கிய எம்.யசமான தெரிவித்தார்.

பாடசாலைகளின் டெங்கு ஒழிப்பு வாரம் 8-15 வரை அமைச்சர் சுசில் பிரகடனம்

mosquito_preventionss.jpg“பாடசா லைகளில் டெங்கு ஒழிப்பு வாரம்” ஒன்றை கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த பிரகடனப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை “பாடசாலைகள் டெங்கு ஒழிப்பு வாரம்” அனுஷ்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். டெங்குக் காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பான வேலைத் திட்டங்களையும், விழிப்புணர்வுகளையும் வேகமாக முன்னெடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அமைச்சர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சகல பாடசாலைகளிலும் அதன் சுற்றுப் புறச் சூழல்களில் டெங்கு ஒழிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பாடசாலை மாண வர்களைக் கொண்டே டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைகளை செய்யுமாறும் அமைச்சர் சகல மாகாண, வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெங்கு ஒழிப்பு வாரத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் காலை 7.30 மணி முதல் 8.00 மணிவரை பாடசாலை சுற்றுப்புற சூழலில் டெங்கு ஒழிப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சகல பாடசாலை அதிபர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

500 வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அடிப்படை உரிமை மீறலாகும் -உயர் நீதிமன்றம்

02supreme.jpgஅம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தீகவாவியை அண்மித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீடமைப்புத் திட்ட வீடுகளை புதிதாக விண்ணப்பங்கள் கோரி சட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்பாறை அரசாங்க அதிபர் உட்பட பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் தீகவாவியை அண்மித்த பகுதியில் 500 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வீடுகள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவிருந்த வேளையில் பௌத்த அமைப்புகளினால் அந்நேரம் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரோ இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அம்பாறை அரசாங்க அதிபர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ,வீடமைப்பு அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட இம்மனு மீதான தீர்ப்பை நேற்று பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தலைமையிலான நீதியரசர்கள் வழங்கினர்.

தீகவாவியை அண்மித்த பகுதியில் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை குடியேற்றும் எண்ணத்துடன் 500 சுனாமி வீடுகளை பகிர்ந்தளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த தீர்ப்பில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

228 பயணிகளுடன் விமானம் மாயம்

01-air-france.jpgபிரான்ஸ் நாட்டின் ஏர் பிரான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அட்லான்டிக் பெருங்கடல் மீது பறந்தபோது திடீரென மாயமாகி விட்டது. அது விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 228 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.

அந்த விமானத்தில் 216 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்ததாக ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கிளம்பிய இந்த விமானம் இன்று முற்பகல் பாரீஸ் வருவதாக இருந்தது.

ஆனால் வழியில் அட்லான்டிக் கடல் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென ரேடார் பார்வையிலிருந்து அது மறைந்து விட்டது. இதையடுத்து பிரேசில் விமானப்படை உடனடியாக தேடுதல் பணியில் முடுக்கி விடப்பட்டது.

ஆனால் விமானம் குறித்த தகவல் இல்லை அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி கவலையும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்.

ஹஜ் கடமைக்குச் செல்வோர் சர்வதேச நாடுகளுக்கான கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும்.

hajj.jpgஇந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள்  பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒக்ஸ்போர்ட் விஜயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரத்து

university-of-oxford.jpgஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் விவாத சங்கத்தின் நிகழ்ச்சியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பங்குபற்றவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.

முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் அணியின் முகாமையாளர் பிரண்டன் குறுப்பு ஆகியோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்யவிருந்தனர். எனினும் பிரிட்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் நேற்று முன்பக்கச் செய்தியொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சூழலில் இவ்விஜயம் ரத்துச்செய்ப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் யூனியன் நேற்று வெளியிட்ட அறிக்கை யொன்றில் “டைம்ஸ் பத்திரிகையின் இன்றைய முன் பக்கச் செய்தியினால் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக மேற்படி விஜயத்தை ரத்துச்செய்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்கள் எமக்குத் தெரிவித்தனர். இது எமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைத்தல், போதைவஸ்து பாவனை: 6342 பேர் கைது; 3,716 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

may-31.jpgபுகைத் தலினால் தெற்காசியாவில் மாத்திரம் வருடாந்தம் 1.2 மில்லியன் பேர் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் நாடளாவிய ரீதியில் பொது இடங்களில் புகைத்தல் மற்றும் போதைவஸ்து பாவனை தொடர்பாக 6342 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3, 716 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட் டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக புகைத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் சுகாதார நலன்புரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே இத் தகவல்கள் வெளியிடப்பட்டன.

தேசிய பாடசாலைகளுக்கு நாளை 860 பட்டதாரி ஆசிரியர் நியமனம்

teacher.jpgநாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசா லைகளுக்கு நாளை (01) 860 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து, காலை 9 மணிக்கு இந்த நியமனங்களை வழங்குவதாக பிரதி கல்வி அமைச்சர் மு. சச்சிதானந்தன் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதிலுமுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 1500 பட்டதாரிகளை நியமிக்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 1000 பேருக்கு நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை 860 பேருக்கு நியமனம் வழங்குவதுடன், எஞ்சியோருக்குக் காலக்கிரமத்தில் வழங்கப்படுமென பிரதி கல்வி அமைச்சர் தெரிவித்தார். இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கே இந்நியமனம் வழங்கப்படுகின்றது.

இந்த நியமனம் வழங்குவதுடன், ஊவா, மத்திய, சபரகமுவ மாகாணங்களின் தேசிய பாடசாலைகளில் நிலவிய ஆசிரிய பற்றாக்குறை பிரச்சினை தீர்த்து வைக்கப்படுவதாக பிரதியமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிபுரைக்கு அமைய, கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவின் வழிகாட்டலின் கீழும் பிரதியமைச்சர் சச்சிதானந்தனின் ஒத்துழைப்புடனும் இந்நியமனம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

27-saniamirza.jpgடென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர். இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.
 
டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.  சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
 
சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சானியா மிர்சா  சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.
 
நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர். சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.