ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தின் விவாத சங்கத்தின் நிகழ்ச்சியொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் பங்குபற்றவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்விஜயம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் அணியின் முகாமையாளர் பிரண்டன் குறுப்பு ஆகியோர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திற்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்யவிருந்தனர். எனினும் பிரிட்டனிலிருந்து வெளிவரும் த டைம்ஸ் பத்திரிகையின் நேற்று முன்பக்கச் செய்தியொன்றில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் கடைசி மாதங்களில் 20 ஆயிரம் தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியான சூழலில் இவ்விஜயம் ரத்துச்செய்ப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஒக்ஸ்போர்ட் யூனியன் நேற்று வெளியிட்ட அறிக்கை யொன்றில் “டைம்ஸ் பத்திரிகையின் இன்றைய முன் பக்கச் செய்தியினால் எழுந்துள்ள அச்சுறுத்தல் காரணமாக மேற்படி விஜயத்தை ரத்துச்செய்வதாக இலங்கைக் கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகர்கள் எமக்குத் தெரிவித்தனர். இது எமக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.