சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

strauss.jpg 75 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது. திங்களன்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி எத்தரப்புக்கும் வெற்றியின்றி முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து இந்தத் தொடரில் 1-0 என்கிற நிலையில் முன்னணி பெறுகிறது. இந்த ஆஷஸ் தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து அணியின் ஆண்ட்ரூ பிளிண்டாஃப், ஆஸி அணியின் இரண்டாவது இன்னிங்க்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியமை இந்தப் போட்டியில் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தலைவரான ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மற்றும் ஆஸி அணியின் மைக்கெல் கிளார்க் சதமடித்ததும் இதர சிறப்புகளாகும்..இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு

chaminda-vass.jpgஇலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.பாகிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் வாஸ்.

இதுகுறித்து 35 வயதாகும் வாஸ் கூறுகையில், பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறைப்படி ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்.

110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸ், 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் 1994ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்தான் வாஸின் முதல் டெஸ்ட் போட்டி. 12 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2 முறை பத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

100 டெஸ்ட்களுக்கு மேல் ஆடியுள்ள 3வது இலங்கை வீரர் வாஸ். மற்ற இருவர்- முரளிதரன், ஜெயசூர்யா.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் முஸ்லிம் பிரிவு அமைக்க நடவடிக்கை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் அப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் தேவை கருதி முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முன்பு இயங்கி வந்த முஸ்லிம் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் முஸ்லிம் கல்விப் பிரிவு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மாகாண கல்விப் பணிமனையில் இயங்க ஆரம்பிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முரளிதரன் பங்கேற்பார் – இலங்கை அணியின் வைத்தியர் நம்பிக்கை

muralitharan-sri-lankas.jpg

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பங்கேற்கவுள்ளதாக அணியின் வைத்திய அதிகாரியான டேவிட் யங் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் விளையாடுவதற்குரிய போதிய உடற்தகுதியைக் கொண்டிருப்பதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியுமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ள முரளிதரன் தனது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இலங்கை அணியின் உதவித் தலைவராக முரளிதரன் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் விளையாடும் முதலாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டி.கே.பட்டம்மாளின் உடல் மைலாப்பூரில் தகனம்

pattammal.jpgசென்னையில் நேற்றுக் காலமான பிரபல கர்நாடக இசை மேதை  டி.கே.பட்டம்மாளின் உடல் நேற்று மாலை மைலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. பெருந்திரளான மக்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். மரணச்செய்தி கேட்டதும் இசை உலகைச் சோந்த பலர் டி.கே.பட்டம்மாளின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பால முரளி கிருஷ்ணா,  நடிகை வைஜயந்திமாலா,  கவிஞர் வாலி,  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்,  பிரபல வீணை இசைக் கலைஞர் வித்தியா சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவு குறித்து அ..தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை தனது நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் பாடி தமது தேச பக்தியை வெளியிட்டவர் டி.கே.பட்டம்மாள் என அந்த அனுதாபச் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சூரிய கிரகணத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

tsunami111.jpgசூரிய கிரகணம் காரணமாக எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை சுனாமி தாக்கும் அபாயமுள்ளதாக வெளியாகும் செய்தியை அனர்த்த முகாமைத்துவ நிலையம் முழுமையாக மறுத்துள்ளது. சுனாமி பேரலைகள் ஏற்படுவதை பல நாட்களுக்கு முன்னர் அறிவிக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான முறைமைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் பிரிகேடியர் என். பி. வேரகம தெரிவித்தார்.

எதிர்வரும் 22ஆம் திகதி சுனாமிப் பேரலைகள் உருவாகலாம் என பரவியுள்ள செய்தி காரணமாக மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. சுனாமி குறித்தோ அதனுடன் தொடர்புடைய நிலநடுக்கம் குறித்தோ பல நாட்களுக்கு முன் அறிவிக்க முடியாது.

அவ்வாறான வதந்திகளில் எதுவித உண்மையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை ஜப்பானை அண்மித்த பகுதிகளில் உருவாகும் நிலநடுக்கம் காரணமாக ஏற்படும் சுனாமியினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என கருதமுடியாது எனவும் அவர் கூறினார்.

சூரியக்கிரகணம் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு சக்தியினால் நிலநடுக்கம் ஏற்படும் எனவும் அந்த நில நடுக்கம் ஜுலை மாதத்தில் 22 ஆம் திகதி தான் ஏற்படும் எனவும் விஞ்ஞான ரீதியில் அறிவிக்க முடியாது. அதனால் மக்கள் சுனாமி குறித்து அஞ்சத் தேவையில்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 22 ஆம் திகதி சுனாமி ஏற்படும் என இந்தியா உட்பட பல நாடுகளில் எதிர்வு கூறப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தெரிந்ததே.

கதிர்காமத்துக்கு ரயில் – பஸ் இணைப்புச் சேவை

bus_ctb_logos.jpgகதிர் காமத்தில் இம்மாதம் நடைபெறும் வருடாந்த எஸல பெரகரவில் கலந்துகொள்ளச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி பஸ் – ரயில் இணைப்புச் சேவையொன்றை நடாத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இம்மாதம் 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் இந்த இணைப்புச் சேவையை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கரையோர ரயில் சேவையைப் பயன்படுத்துவோருக்கு மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து கதிர்காமம் வரையில் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக ரயில் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கதிர்காமம் செல்வதற்கான விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

pattammal.jpgசுமார் 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்த பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் தமது 90 ஆவது வயதில் இன்று சென்னையில் காலமானார் இவர் சிறிது காலம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன் உட்பட உலக நாடுகள் பலவற்றில் கச்சேரிகள் நடத்தியுள்ளார். பல திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். கமலஹாஸனின் ‘ஹே ராம்’ படத்தில் வைஷ்ணவ ஜனதோ பாடலை பாடியவர் இவரே.

இவரது சம கால கலைஞர்களான எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆகியோருக்கு மிகச்சிறந்த போட்டியாளராக இவர் திகழ்ந்தார். இந்திய அரசின் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளையும், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத சாகர ரத்னா விருது மற்றும் சங்கீத கலாநிதி விருதினையும் இவர் பெற்றார்; என்பது குறிப்பிடத்தக்கது

கடல்கோள் ஏற்படுமென அஞ்சத் தேவையில்லை

tsunami111.jpgஎதிர் வரும் 22 ஆம் திகதி கடல்கோள் ஏற்படுமென மக்கள் மத்தியில் பரவி வரும் செய்தியில் உண்மையில்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அத்துடன், கடல்கோள் அல்லது பூகம்பம் குறித்து பல நாட்களுக்கு முன்னரே அறிவிக்கும் முறை செயன்முறையில் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இவ்வாறு பரவிவரும் செய்திகளில் விஞ்ஞான ரீதியிலான உண்மை கிடையாதென கடற்கோள் முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஜப்பானுக்கு அருகில் ஏற்படும் பூகம்பத்தால் இலங்கைக்கு நேரடித் தாக்கமெதுவும் கிடையாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வதந்திகளால் மக்கள் பதற்றமடைய வேண்டாமெனவும் அரச நிறுவனங்களின் எச்சரிக்கைகளையே நம்புமாறும் கடற்கோள் எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் வீரர்களுக்கு அபராதம்

16-07-2009.jpgமேற் கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்த பங்களாதேஷ் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை முடிவடைந்த பங்களாதேஷ்மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பங்களாதேஷ் அணித்தலைவராக செயல்பட்ட ஷகீப் அல் ஹஸன் மற்றும் ஷஹ்தாத் ஹொஸை ஆகியோர் போட்டி நடுவரிடம் அளவுக்கு அதிகமாக முறையீடு செய்தனர்.

இது ஐ.சி.சி. ஒழுக்க விதியை மீறும் செயல் என ஐ.சி.சி. போட்டி மத்தியஸ்தர் அன்டி பைக்ரொப்ட் தெரிவித்துள்ளார். இதற்காக ஷகீப் அல் ஹஸனுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10 வீதமும் ஷஹ்தாத் ஹொஸைனுக்கு 5 வீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதே குற்றத்திற்காக பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இம்ருல் கைஸுக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்துள்ளது.