உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முக்கிய சுற்று இன்று 2 ஆம் திகதி தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் காலிறுதிப் போட்டிகளில் வெல்லும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் உருகுவேயும் கானாவும் மோதுகின்றன. அடுத்த போட்டியில் பிரேசிலும் நெதர்லாந்தும் மோதுகின்றன. நாளை நடைபெறும் போட்டிகளில் ஆர்ஜென்ரீனா ஜேர்மனி ஒரு போட்டியிலும் ஸ்பெயின் பராகுவே இன்னொரு போட்டியிலும் மோதவுள்ளன.
இந்த அணிகளில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவை ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவைதான். இவை எப்படியும் வென்று விடுமென்ற பொதுவான எதிர்பார்ப்புள்ளது.
இருப்பினும் ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் மோதுவதால் ரசிகர்களிடையே பரபரப்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. யார் வென்றாலும் கால்பந்து ரசிகர்களுக்கு ஜாலிதான். ஆனாலும் ஒரு வலுவான அணி வெளியேறுகிறதே என்ற வருத்தமும் கூடவே இருக்கும்.அதேபோல பிரேசில், நெதர்லாந்து போட்டியும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து இந்தத் தொடரில் அசத்தி விட்டது. எனவே, இந்த முறை பிரேசிலுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அணியும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. பராகுவேயும் சும்மா இல்லை. எனவே இந்த அணிகளின் மோதலும் தீப்பறக்கும்.முக்கியமாக சொல்ல வேண்டிய அணி கானா. இந்தக் குட்டி அணி சுற்றுப் போட்டிகளிலும் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அசத்திவிட்டது. எனவே உருகுவேயையும் கானா வென்று புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு பெரிதும் உள்ளது.
காலிறுதிக்கு வந்துள்ள அணிகளில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரே அணி கானா மட்டுமே. ஐரோப்பாவைச் சேர்ந்த அணிகள் ஸ்பெயின், நெதர்லாந்து, ஜேர்மனி ஆகியவை. மற்ற நான்கு அணிகளும் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும். காலிறுதிப் போட்டிகளுக்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.