தென்னாப் பிரிக்காவில் நடைபெற்றுவரும் 19 ஆவது உலகக் கோப்பை கால்பந்து அரையிறுதிப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன.மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் முக்கிய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா அணிகள் தோல்வியடைந்து வெளியேறி விட்டன. அரை இறுதிக்கு ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, நெதர்லாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
கேப்டவுனில் இன்று நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் உருகுவே அணியும் நெதர்லாந்து அணியும் மோதுகின்றன.
உருகுவே அணி உலகக்கோப்பையில் 10 முறை பங்கேற்று 1930 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. நெதர்லாந்து அணி 1974 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்துள்ளது.
கானா அணியுடனான காலிறுதிப் போட்டியின் போது உருகுவே நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ், கோல் நோக்கி வந்த பந்தை கையால் தடுத்ததால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால் அவர் இந்த அரையிறுதிப் போட்டியில் விளையாடமுடியாமல் போனது உருகுவே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. நெதர்லாந்து, உருகுவே என இருஅணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இருப்பதால் இன்று நடைபெறும் அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.