டெஸ்ட் போட்டிகளிலிருந்து முரளிதரன் ஓய்வு

muralitharan.jpgஇலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்துள்ளார். ஜுலை 18ம் திகதி காலியில் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக கூறியுள்ளார்.

முத்தையா முரளிதரனின் இந்த முடிவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத் துறை அமைச்சர் சி. பி. ரத்நாயக்க மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

38 வயது நிரம்பிய சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதுவரையில் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 792 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரன், 337 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 515 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது- 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாட முரளிதரன் விருப்பம் தெரிவித் திருந்தார்.

எனினும் காயம் மற்றும் வயது காரணமாக அண்மைக்கால போட்டிகளில் அவர் பிரகாசிக்கவில்லை. ஐ. பி. எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக விளையாடியுள்ள முரளிதரன் ஐ. பி. எல். உடன்பாட்டின்படி அடுத்த வருடமும் சென்னை அணிக்காக விளையாட முடியும்.

எனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் வரை அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • itam
    itam

    உலக கோப்பை: டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், வரும் 2011ல் இந்திய துணை கண்டத்தில் நடக்கும் உலக கோப்பை(50) தொடரில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளார் முரளிதரன். இது பற்றி இவரது மானேஜர் குஷில் குணசேகரா கூறுகையில்,””இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அவசரமாக அறிவிக்கப்பட்டதால், ஓய்வு பெற முடிவு செய்தார். இவருக்கு மாற்றாக, சிறந்த வீரர்கள் யாரும் கிடைக்காத பட்சத்தில் 2011, உலக கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டும் என தேர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்,”என்றார்.

    18 ஆண்டுகள்: கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வரும் முரளிதரன், டெஸ்டில் ஆயிரம் விக்கெட் வீழ்த்த வேண்டும் என எண்ணி இருந்தார். இதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. டெஸ்ட் மட்டும் அல்ல அனைத்து வகையான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து சமீபத்தில் இவர் கூறுகையில்,””தற்போது 38 வயதாகி விட்டது. டெஸ்ட் போட்டிகளில் முன்பு போல் பந்துவீச முடிவதில்லை. 15 முதல் 16 ஓவர்கள் வீசினால் மிகுந்த களைப்படைந்து விடுகிறேன். ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர் வீசினால் போதும் என்பதால், பிரச்னை இல்லை. இதிலும் சிரமம் ஏற்பட்டால், உலக கோப்பை போட்டிக்கு முன்பாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவேன்,”என்றார்.

    மும்மூர்த்திகள்: டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் கும்ளே(619 விக்.,), ஆஸ்திரேலியாவின் வார்ன்(708 விக்.,) மற்றும் முரளிதரன் ஆகியோர் “சுழல்’ ஜாலம் காட்டினர். கும்ளே, வார்ன் ஓய்வு பெற்று விட்ட நிலையில், இவர்களுக்கு நிகரான வீரர்களை இன்று வரை கண்டறிய முடியவில்லை. தற்போது முரளிதரனும் ஓய்வு பெற உள்ளதால், டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரும் வெற்றிடம் ஏற்படும்.

    Reply