சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மனிக்பாம்’ பாடசாலை இன்று ஆரம்பம்

school2701.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்களின் பிள்ளைகளுக்கு இன்று இரு தற்காலிக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்கள் இங்கு மீண்டும் தமது கல்வியை தொடர உள்ளனர்.

மனிக்பாமில் இரு தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்குத் தேவையான பாடநூல்கள், சீருடைத் துணிகள், பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதோடு பாடசாலைகளுக்கு தேவையான தளபா டங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் மேலும் கூறினார்.

இரு பாடசாலைகளும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களை பயன்படுத்த வவுனியா கல்வி வலயம் திட்ட மிட்டுள்ளது.

இதே வேளை வன்னியில் இருந்து வரும் மாணவர்கள் கல்வி கற்பதற்கென புதிய பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக அரச அதிபர் கூறினார். எதிர்வரும் தினங்களில் வன்னியில் இருந்து வவுனியாவுக்கு வர உள்ள மாணவர்களுக்கும் மனிக்பாம் பகுதியில் கல்வி கற்க வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளன.

வன்னியில் இருந்து மேலும் 85 ஆயிரம் மாணவர்களும் 2500 ஆசிரியர்களும் வவுனியாவுக்கு வருவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

சுதந்திர தின பிரதான விழா காலி முகத்திடலில் 4 ஆம் திகதி

flag_logo_sl.jpg61வது சுதந்திர தின விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் 4ஆம் திகதி காலை காலி முகத்திடலில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளது.  ‘சமாதானத்தினூடாக சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலை 8.30 மணிக்கு காலி முகத்திடலுக்கு வருகை தரவுள்ளதோடு பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பெருந்திரளானோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். ஜனாதிபதியினால் தேசிய கொடி ஏற்றப்படுவதோடு விழா ஆரம்பமாகும். முப்படையினரால் மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன.

சுதந்திர தின விழாவில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை ‘பேண்ட்’ வாத்தியங்கள் என்பனவும் இடம்பெற உள்ளதோடு விமானப் படை மற்றும் கடற்படையினரின் கண்காட்சிகளும் இடம்பெறவுள்ளன. 3 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸாரும் முப்படையினரும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு காலி முகத்திடலுக்கு செல்லும் வீதிகள் 30 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

சுதந்திர தின விழா மற்றும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி என்பனவற்றை முன்னிட்டு கொழும்பிலுள்ள 20 பாடசாலைகள் 28 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன. இதேவேளை ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சி 4 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. தினமும் காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் முதல் நாள் பாதுகாப்பு தினமாகவும் இரண்டாவது நாள் கலாசார தினமாகவும் மூன்றாவது நாள் நலன்புரி தினமாகவும் நான்காவது நாள் அபிவிருத்தி தினமாகவும் இறுதிநாள் ஊடகவியலாளர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்று நள்ளிரவு முதல் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபபகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

நடிகர் நாகேஷ் உடல் தகனம்

nagesh.jpgசென்னையில் நேற்று காலமான நடிகர் நாகேஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்தினர். உடல்நலக் குறைவால் அவதிபட்டு வந்த பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் சென்னையில் நேற்று மாரடைப்பால் காலமானார்.

நாகேஷின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல், சோ, கே.ஆர்.விஜயா, சச்சு, பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உட்பட பலர் நாகேஷின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் காலை 10.30 மணியளவில் நாகேஷ் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. சுமார் 11 மணியளவில் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மயானத்தை சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடந்தன.  இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தேர்தல் வன்முறை 32 ஆக அதிகரிப்பு

paffre.jpgவேட்பு மனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தலை கண்காணிப்பதற்கான “பவ்ரல்’ அமைப்பு தெரிவித்துள்ளதுடன் மக்கள் தேர்தல் தொடர்பில் ஆர்வத்துடன் செயற்படுவதாக தெரியவில்லையெனவும் கூறியுள்ளது. இது குறித்து அவ்வமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில்;

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் திகதி அறிவிக்கப்பட்டது முதல் (வெள்ளிக்கிழமை) வரை 32 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அதிகூடிய தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் மத்திய மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன. வடமேல் மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் முறையே 11,2 இடம்பெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளோம் . அதுபோல் மத்திய மாகாணத்தில் கண்டியில் 13 உம், மாத்தளையில் 5 உம் நுவரெலியாவில் ஒரு தேர்தல் வன்முறையும் இடம்பெற்றுள்ளதாகவும் பதிவு செய்துள்ளோம்.

இம்முறை தேர்தலில் மக்கள் ஆர்வம் கொண்டவர்களாக காணப்படவில்லை. புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டத்தில் ஓரளவு மக்கள் பங்குபற்றுகின்றபோதும் மத்திய மாகாணத்தில் இதனைக் காணமுடியவில்லை. எதிர்வரும் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் வாக்காளர் அட்டைகளைப் பெறாதவர்கள் கிராமசேவகருடன் தொடர்பு கொண்டோ தபால் அலுவலகங்களில் தொடர்பு கொண்டோ பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மத்திய மாகாண தோட்டப்புற மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை பாவிப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார்.

வடக்கு மோதல் குறித்த செய்திகளை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்குக!

reporters.jpgஇலங் கையின் வடபகுதியில் இடம்பெறும் படை மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்ள தடையை இலங்கை அரசு நீக்க வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மோதல்கள் குறித்து சுதந்திரமாக செய்தி வெளியிடுவதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்குமாறு அந்த அமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் சுதந்திர ஊடகங்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருமாறும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் காஸா விடயத்தில் செயற்படுவதுபோல,  ஊடகங்களும், மனிதாபிமான அமைப்புகளும் சுதந்திரமாக செயற்படுவதைத் தடுப்பதற்கு கொழும்பு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமானத் துயரம் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் எனச்  செய்திகள் வெளியாகும் தருணத்தில் இலங்கை அதிகாரிகள் ஊடகங்களை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதி மறுக்கின்றனர் என்றும் ஊடக அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும், வதந்திகளைப் பரப்ப வழிவகுக்கும் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!

nagesh.jpgநகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன

சார்க் மின்வலு அமைச்சர்களின் தலைவராக ஜோன் செனவிரட்ன

senaviratn.jpgசார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர் குழுவின் தலைவராக அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். சார்க் நாடுகளின் மின்வலு எரிசக்தி அமைச்சர்களின் மூன்றாவது மாநாடு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது. சார்க் நாடுகளின் அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இம்மாநாட்டின்போதே அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கு இத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரத் துறையில் சார்க் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நெருக்கடிகள் தொடர்பாக நேற்றைய இம் மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அதனை நிவர்த்திக்கும் வகையிலான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

2008ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மின்சாரத்துறை சம்பந்தமாக எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் நேற்றும் விரிவாக ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாகவும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன. நேற்றைய இம்மாநாட்டில் பூட்டான் பொருளாதாரத்துறை அமைச்சர் லியன்யோ காண்டுவெஞ்சுக், இந்திய மின்வலுத்துறை அமைச்சர் சுசில் குமார் சிண்டே, மாலைதீவு வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றாடல் அமைச்சர் மொகமட் அஸ்லாம், நேபாள நீர்வ ளத்துறை அமைச்சர் பிஷ்ணு பிரசாத்பாவுடே, ஆப்கானிஸ்தான் மின்வலு, நீர்வளத்துறை பிரதியமைச்சர் அஹமட் வலி ஷெர்ஷாய், பங்களாதேஷ் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ஹசன் மஹ்மூத், பாகிஸ்தான் பெற்றோலியத்துறை அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜீ. ஏ. ஷப்ரி, சார்க் செயலாளர் நாயகம் கெண்ட் சர்மா, சார்க் செயலகப் பணிப்பாளர் ஹிலால் ரசாவில் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இரு தசாப்த கால அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முற்றுப்புள்ளி – அமைச்சர் றிஷாட் பதியுதீன்

risard.jpgஇரு தசாப்த அகதி வாழ்க்கைக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் முற்றுப் புள்ளி வைக்கும் காலம் அண்மித்துவிட்டதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மன்னாரில் தெரிவித்தார். மன்னார் முருங்கன் பரியாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஒரு கோடி 30 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக்கான இரு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர் சந்தியாகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது; சமூகத்திற்கான விடுதலைக்கு போராடுவதாகக் கூறிக்கொண்டு தனது இனத்தைச் சார்ந்தவர்களை அழித்துவந்த வரலாற்றை நாம் ஒரு போதும் மறந்துவிட முடியாது. இந்த காரணத்தால் இன்று சுமார் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக நாட்டைவிட்டு இந்தியாவில் அகதி முகாமில் அவலம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க நேரிட்டுள்ளது. அதேபோல் எத்தனை உயிர்களை எமது சகோதரர்கள் இழந்துள்ளனர்.

உரிமைகளுக்காகக் குரல் எழுப்பிய நாங்கள் இன்று சலுகைகளை பெற்றுக்கொள்வதற்கு கூட பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வடக்கு மக்கள் எனக்களித்த வாக்குப் பலத்தால் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு நாட்டு மக்களுக்கும் வடக்கில் வாழும் எமது மக்களுக்குமான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நிக்கிலஸ் பிள்ளை, கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல், அமைச்சின் இணைப்பு செயலாளர் அலிகான் ஸரிப் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

tna.jpgவன்னியில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  வடக்கு, கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;

வன்னி நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாய மடைந்தவர்களுக்குக் கூட போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் கடமைகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை கூட மரணச் சடங்குகள் செய்ய முடியாமல் தொடர்ச்சியான விமான, ஷெல் தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூர்ந்தும் தாக்குதலைக் கண்டித்தும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பக் கோரியும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஷெல் வீச்சுகளை நிறுத்தக் கோரியும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தமிழர் தாயம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தினத்தில் பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாயகத்தில் உள்ளவர்கள் ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.  கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.

வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.  போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.