சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இந்தியாவிற்கு அல்-கய்டா எச்சரிக்கை

al-qaeda-yazid.jpgபாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவை பின் லேடன் தலைமை‌யிலான அல்-கய்டா பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல்-கய்டா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் இவ்வாறு விடுத்துள்ள எச்சரிக்கை அடங்கிய வீடியோவை பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்த 20 நிமிட வீடியோவில் யாஸீத் அரபு மொழியில் கூறியது: “நாங்கள் முஸ்லிம் நாடுகள் எங்கும் உள்ள முஜாஹிதீனையும், தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகளையும் உங்களை எதிர்கொள்ள அழைத்து வருவோம். உங்கள் பொருளாதார மையங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அவற்றை மண்ணோடு மண்ணாக்குவர்” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில் அவர் கூறிய போது, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவை கொலை செய்ய அல்-கய்டா தலைவர் ஐமான் அல்-ஸவாஹிரி என்பவர் முடிவெடுத்தார் என்றார்.

பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்திற்கு‌ம் யாஸீத் கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஒளிபரப்பினால் பாகிஸ்தான் முன்பு வெ‌ளி‌யி‌ட்ட செய்தி ஒன்றும் பொய் என்று தெரியவந்துள்ளது. அதாவது தற்போது இந்த மிரட்டலை வெளியிட்டுள்ள அபு யாஸீத் என்பவர் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் வெளியுலகிற்கு அனுப்பிய செய்தி பொய்யாகியுள்ளது.

அல் – காய்தா மிரட்டலை சந்திக்க தயார் : ஏ.கே.அந்தோணி

மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் – காய்தா மிரட்டல் விடுத்துள்ள நிலையில், எத்தகைய மிரட்டலையும் சந்திக்க இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் மும்பையில் நடத்தப்பட்டதை போன்ற தாக்குதல் மீண்டும் நடத்தப்படும் என இந்தியாவுக்கு என இந்தியாவிற்கு ஆப்கானிஸ்தான் ம‌ற்று‌ம் பாகிஸ்தானில் செயல்படும் அல் – காய்தா பயங்கரவாத அமைப்பின் முஸ்தஃபா அபு யாஸீத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில்  செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியிதம் இந்த மிரட்டல் குறித்து கேட்டபோது,” அல் – காய்தா அமைப்பு இந்தியாவுக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை.இருப்பினும் எந்தப் பகுதியிலிருந்தும் நாட்டுக்கு விடுக்கப்படும் பாதுகாப்பு மிரட்டலை சந்திக்க இந்தியா சந்திக்க தயாராக இருப்பதாகவும், அதை சமாளிக்கும் திறமையும் நம்மிடம் உண்டு ” என்று பதிலளித்தார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்புச் சபையில் வரவிருந்த பிரேரணையை ரஷ்யா தடுத்தது

uno.gifஇலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த பிரேரணையினை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;

இலங்கையின் தற்போதைய நிலமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் மெக்சிக்கோ கொண்டுவர இருந்த தீர்மானத்தை ரஷ்யா தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இணைந்துள்ள மெக்சிக்கோ கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டுமென்ற திட்டத்தை முன்வைத்திருந்தது. எனினும் ரஷ்யா அதனை எதிர்த்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கூட்ட நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவது தேவையற்றது எனவும் தெரிவித்திருந்ததாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மெக்சிக்கோவின் தீர்மானம் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதனால் அது அதிக முக்கியத்துவமற்றது. இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வரப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்குமென இலங்கை வெளிவிவகார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ஜி.எஸ்.பலிகக்கரா மெக்சிக்கோ பிரதிநிதிகளை சந்தித்து இலங்கை நிலை தொடர்பாக விளக்குவார். எனவே, இந்த விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வராது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபைக்கு வருவதை ரஷ்யா மட்டும் எதிர்க்கவில்லை. பிரித்தானியாவும் எதிர்த்து நிற்பதாக சபையின் இந்த மாதத்தின் தலைவரான யுகியோ ரகாசு தெரிவித்தார். சூடானின் டாபர் பிராந்தியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளும், இலங்கையில் தோன்றியுள்ள பிரச்சினைகளும் ஒரே மாதிரியானையல்ல என பிரித்தானியாவின் தூதுவர் ஜோன் சாவெர் தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமானதொரு உறவை தொடர விரும்புவதாக ஹிலாரி தெரிவிப்பு

world-news.jpgரஷ்யா வுடன் ஆக்கபூர்வமானதொரு உறவைத் தொடர விரும்புவதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணு நிகழ்ச்சித் திட்டம் போன்ற விவகாரங்களில் மொஸ்கோவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஹிலாரி குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஈரானின் முதலாவது அணுசக்தி ஆலையை 2009 இற்குள் அமைக்கும் நடவடிக்கைகளைத் தான் ஆரம்பிக்கப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளமை குறித்து ஹிலாரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதே வெளியுறவு அமைச்சராக ஹிலாரியின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் ஆசியாவுக்கானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஜப்பான், இந்தோனேசியா, தென்கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் மேற்கொள்வாரெனத் தெரிவித்துள்ளது. மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசத்தை அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் மற்றும் ஜோர்ஜியா மீதான ரஷ்யாவின் படை நடவடிக்கை போன்ற விவகாரங்கள் தொடர்பில் அண்மைய வருடங்களாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான உறவு விரிசலடைந்திருந்தது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஹலாரி; ஈரானின் அணுவாயுத விவகாரம் தொடர்பில் எமது பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் சர்வதேச சமூகத்துடன் ஒரு சிறந்த இராஜதந்திர அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்கிறோம். இதனால் ரஷ்யாவுடன் ஆக்கபூர்வமான உறவினைத் தொடர விரும்புவதன் மூலம் இவ் விடயத்தில் ரஷ்யாவையும் ஒரு கூட்டாளியாக இணைக்க விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் ஆசியாவுக்கான தனது முதலாவது சுற்றுப்பயணத்தை ஹிலாரிஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அழகாக பேசவும், மக்களை தூண்டிவிடவும் ஜே.வி.பி.யினரால் மாத்திரமே முடியும்- சமல் ராஜபக்ஷ

எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் பயங்கரவாதிகளுடன் யுத்தம் செய்தல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடல் மற்றும் “நாட்டைக்காட்டிக்கொடுக்கும் கைங்கரியங்களில் ஈடுபடுதல் போன்ற காரணங்களுக்காக முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன’என்று நீர்ப்பாசனம், துறைமுகம் மற்றும் விமான தேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாவுலவேமெடில்ல குளத்தின் நீர்ப்பாசன திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததாவது;

பயங்கரவாதிகள் மாவில் ஆற்று நீரை மூடிக் கொண்டிருந்ததுபோல இந்த வேமெடில்ல குளத்து நீரை விவசாயிகளுக்குத் திறந்து விடாமல் மூடிக்கொண்டிருக்க அனுமதிக்க முடியாது. இக்குளத்தின் நிர்மாணப் பணிகள் 2001 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதல் தமது நிலங்கள், வீடு வாசல்களை இழந்த வேவெல தம்புள்ள மற்றும் நாவுல பிரதேச செயலகப்பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மாற்று நிலங்களும், இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 225 குடும்பங்களுக்கும் 582 காணித்துண்டுகள் விரைவில் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.மதிப்பீட்டுத் திணைக்களப்பிரிவில் ஏறுபட்டுள்ள கால தாமதத்தினால் உரிய நேரத்தில் காணிகளையோ இழப்பீட்டுத் தொகைகளையோ வழங்க முடியாமல் போயுள்ளது.

எவருக்கும் எவ்வித குற்றங் குறைகளை செய்வதற்கோ, தீங்குகள் செய்வதற்கோ மகிந்த ராஜபக்ஷ ஒருபோதும் ஆயத்தமில்லை. அதனால்தான் அவர் பதவிக்கு வந்ததும் தன்மீதுதாக்குதல்களை மேற்கொண்ட தமது கடமைகளுக்கு செய்தவர்களையும் அனைத்துக் குழுக்களையும் இடையூறு ஒன்றிணைத்து புதிய ஸ்ரீலங்காவை கட்டயெழுப்புவதற்கு ரணில் விக்கிரமசிங்கஹ உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதில் ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார். ஏனைய கட்சிகள் இன்று பிளவுபட்டு சிதைந்துபோயுள்ளன. வேமெடில்ல நீர்த்தேக்கத்திற்கு இன்று முதல் “ரீ.பீ,தென்னக்கோன் குளம்’ எனப் பெயரிடப்படுகிறது.

காலஞ்சென்ற ரீ.பீ.தென்னக்கோன் தம்புள்ள தொகுதி மக்களுக்கு செய்த தேவையை நினைவு கூரும் முகமாக இப்பெயரில் இக்குளம் இன்று முதல் அழைக்கப்படும். இக்குளத்து நீரின் மூலம் 6650 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதில் நாம் பெருமை அடைகிறோம். பயங்கரவாதிகளிடமிருந்து எமது நாட்டை இன்னும் சில தினங்களில் மீட்டுக்கொள்வோம். கிழக்கை நாம் விடுவித்த கையோடு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகமொன்றை அமைக்கும் பணிகளை ஆரம்பித்தோம். கொழும்புத் துறைமுகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக வருடக்கணக்கில் பேச்சுவார்த்தைகளை அப்போது அதிகாரத்திலிருந்தவர்கள் நடத்தினார்கள். வருடாந்தம் திட்டங்களை வகுத்தனர். செயல்வடிவம் பெறவில்லை. ஆனால், ஜனாதிபதியின் ஆலோசனையின்பேரில் கொழும்புத் துறைமுகத்தை விரிவு படுத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யுத்தம் செய்வதுடன் அபிவிருத்திப் பணிகளையும் அரசாங்கம் முன்னெடுத்துச்செல்கிறது என்பதை நீங்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். பிரபாகரனால் நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதைகளில் எமது விமானங்கள் தரித்து நிற்கும் நாள் வெகு தொலைவிலில்லை’ என்று கூறினார்

பதிவு செய்யப்படாத மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சங்கம் கோரிக்கை

நாடு முழுவதும் பதிவு செய்யப்படாது இயங்கிவரும் மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கிராமப் புறங்களில் இயங்கி வரும் இவ்வாறான மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற் கொண்ட ஆய்வில், 1981 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்டத்திற்கிணங்க, மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கீழ், 2300 மருந்து விற்பனை நிலையங்கள் மாத்திரம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய தகைமைகளைக் கொண்டிராத மருந்துக் கலவையாளர்கள் பணிபுரியும் மருந்து விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள மருந்து விற்பனை நிலையங்களில், உரிய தகைமைகளை கொண்ட மருந்துக் கலவையாளர் ஒருவராவது மருந்து விற்பனையின் போது பணிபுரிவது கட்டாய மெனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் மருந்து விற்பனைக்கான உரிய தொழிற்தகைமைகளை கொண்டுள்ள 6800 மருந்தாளர்கள் இலங்கையில் உள்ளனர். உரிய அனுபவம், தகைமைகளைக் கொண்டிராத மருந்தாளர்கள் தவறான மருந்துகளை விநியோகிப்பதால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நோயாளர்கள் இதனால் மரணத்தையும் எதிர் நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்தியது.

tamil_news_bulletin_.jpgஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு (09) இடை நிறுத்தப்படுகிறது என்பதை பிபிசி தமிழோசை நேற்று அறிவித்தது

அந்த அறிவித்தல் வருமாறு:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது. கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று, நிகழ்ச்சியின் ஒரு பகுதியை அல்லது பகுதிகளை இடையில் வெட்டுவது என்பது, பிபிசியின் நிகழ்ச்சிகளின் சுயாதீனத் தன்மையை பாதிப்பதாக அமைகிறது என்பதை பிபிசி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தெளிவாக்கியது. பிபிசியின் இந்த முயற்சிகளுக்குப் பின்னரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், பிபிசி நிகழ்ச்சிகளை வெட்டிய சம்பவங்கள் கடந்த வாரத்தில் நடந்தன.

இந்த ஒலிபரப்பு இடை நிறுத்தம் குறித்து கருத்துக் கூறிய பிபிசியின் இயக்குநர் நைஜல் சாப்மன், தொடர்ந்து வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டபோதும், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இந்த வெட்டும் நடவடிக்கைகள் தொடர்வது ஏமாற்றமளிப்பதாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிபிசி நிகழ்ச்சிகள் மீது ஏதும் புகார்கள், குறைபாடுகள் குறிப்பாக இருந்தால் அது குறித்து பிபிசி விசாரிக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் நைஜல் சாப்மன், ஆனால் இது வரை இந்த மாதிரி எந்தப் புகாரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை நேயர்கள் நாளையிலிருந்து (10) (இன்றிலிருந்து) எமது நிகழ்ச்சியை சிற்றலை ஒலிபரப்பு மீட்டர் பேண்டுகள், 31ல் 9540 கிலோஹேர்ட்ஸ், 41ல் 7205 கிலோஹெர்ட்ஸ் மற்றும் 49ல் 6135 கிலோஹெர்ட்ஸ் ஆகியவற்றில் கேட்கலாம். எனவும் அறிவித்திருந்தது.

மாத்தளை மாவட்டத்தில் தற்காலிக அடையாள அட்டையை பெற “பவ்ரல்’ கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை

paffre.jpgமாத்தளை மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்கள் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இல 261/6 பிரதான வீதி, மாத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ள நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலிற்கான மக்கள் அமைப்பான “பவ்ரலின்’ மாத்தளை கிளைக் காரியாலயத்துடன் தொடர்பு கொண்டால் வாக்களிப்பதற்கான தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலை வழங்க முடியுமென மேற்படி அமைப்பின் மாத்தளை கிளை இணைப்பாளர்களான காமினி ஜயதிஸ்ஸ, பெ.வடிவேலன் ஆகியோர் தெரிவித்தனர். அண்மையில் மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் முன் இதனைத் தெரிவித்த அவர்கள் மேலும் கூறியதாவது;

வேட்பு மனுத் தாக்கல் செய்த தினம்முதல் ஜனவரி மாதம் இறுதி வரையிலான காலப் பகுதிக்குள் மாத்தளை மாவட்டத்தில் 5 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. 2 தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாரதூரமான சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை. கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை மிகக் குறைவான தேர்தல் வன்முறைச் சம்பவங்களே இடம்பெற்றுள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான ஐ.தே.கட்சி, ஐ.ம.சு.மு., ஜே.வி.பி. ஆகிய 3 கட்சிகளினதும் முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இம்முறை மொத்தமாக 8 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிட்ட போதும் இவை தொடர்பான எந்தவித முறைப்பாடும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. தேர்தல் வன்முறைகளும் சம்பவங்களும் குறைந்துள்ள போதும் தேர்தல் சட்டத்திட்டதிற்கு முரணான செயற்பாடுகள் நாளாந்தம் அதுகரித்து வருகிறது. ஆளுங் கட்சியினரே பெருமளவில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு அரச அதிகாரமும் அரச பௌதிக வளங்களும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

நாம் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதற்கென 200 இளைஞர், யுவதிகளை வாக்களிப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவுள்ளோம். இவர்கள் 295 வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இவர்களைத் தவிர, இவர்களின் கடமைகளை மேற்பார்வை செய்ய தொகுதி மட்டத்தில் நான்கு தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மஞ்சள் நிற தொப்பியும், கைப்பட்டியும், சீருடையும் அணிந்த வண்ணம் சேவையில் ஈடுபடுவர். அன்றைய தினம் மாத்தளை மாவட்டத்தின் முழுமையான நடவடிக்கைகளை கண்காணிக்க 4 வாகனங்களிலும் 7 மோட்டார் சைக்கிள்களிலும் எமது ஊழியர்கள் கடமையில் ஈடுபட உள்ளனர். சென்ற தேர்தல்களில் போன்று இம்முறையும் வாக்குப் பெட்டிகளை களவாடுதல், வாக்களிப்பை தடைசெய்தல், வாக்காளர்களை அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. நாம் இயன்றளவு இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும் அதேசமயம், எமது சக்தியையும் மீறி தேர்தல் முறைகேடான சம்பவங்களும் இடம்பெறலாம்.

அவ்வாறு நடந்தால் உடனுக்குடன் தேர்தல் ஆணையாளருக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் மாத்தளை மாவட்ட தேர்தல் ஆணையாளருக்கும் அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள் முறையாக பயன்படுத்தப்படுவதையும், அவர்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்போம் என தெரிவித்தார். இவர்கள் தமது அமைப்பின் செயற்பாடுகளை நீதியாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் தலைவர்கள், அரச அதிகாரிகள் ஆகியோர் தமக்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

கடல் புலிகளின் வளங்கள் மீது விமானத் தாக்குதல்

jet-1301.jpgஇலங்கை விமானப் படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் -27 தாக்குதல் விமானங்கள் மூலம் கடற்புலிகளின் வளங்களை இலக்கு வைத்து இன்று(பெப்:09) காலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் விடயமாக விமானப் படைப்பேச்சாளர்  தகவல் தருகையில் தொடர்சியாக கடற்புலிகளின் நடமாட்டத்தை அவதானித்து இன்று காலை 7.00 மணியளவில் இத்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். முல்லைத்தீவுக்கு வடக்காக அமைந்துள்ள வெள்ளமுள்ளவாய்கல் பகுதியில் கடற்புலிகளின் படகுகள் ரெய்லர்கள் ரெக்டர்கள் என்பன வானிலிருந்து அவதானிப்பதற்க்கு முடியாத வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களையே இத்தாக்குதல் இலக்காகும் என விமானப்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

2009ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

இந்த ஆண்டின் முதலா வது சந்திர கிரகணம் இன்று (9ம் திகதி) தோன்றுகின்ற போதிலும், அதனை இலங் கை உட்பட உலகின் பெரும் பாலான நாடுகளில் பார்க்க முடியாது என்று கொழும்பு பல்கலைக்கழக பெளதீகவி யல் துறை சிரேஷ்ட விரிவு ரையாளரும், வானியல் குறித்த நவீன தொழில்நுட்பத்திற் கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

பூமியின் இருள் பகுதிக்குள் சந்திரன் பிரவேசிப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று மாலை 6.07 மணிக்கு ஆரம்பமாகும் சந்திர கிரகணம் இரவு 10.10 மணி வரை இருக்கும் எனவும் அவர் கூறினார். இம்முறை சந்திரன் சாதாரண இருள் பகுதியால் பயணிப்பதால் தான் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாத நிலை ஏற்படுகின்றது. என்றாலும் இக்காலப் பகுதியில் சந்திரன் மங்கலாகத் தென்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வருடம் நான்கு சந்திர கிரகணங்கள் தோன்றவிருக்கின்றன. அவற்றில் முதலாவது சந்திர கிரகணமே இன்று தோன்றவிருக்கிறது. எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதியும், ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் என்றபடி இச்சந்திர கிரகணங்கள் தோன்றும் என்றும் அவர் கூறினார்.

ரயில்வே அதிகாரிகள் இன்று இரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

train.jpgரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர்  இன்று  இரவு 9 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்  இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி தொடக்கம் சுமார் 48 மணிநோம் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கான கொடுப்பனவு மற்றும் பதவியுயர்வு என்பவற்றை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.