சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

சிஐஏவின் இயக்குநராக பனீட்டா நியமனம்

leon-panetta.jpgஅமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் புதிய இயக்குநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லியோன் பனீட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சியின்போது வெள்ளை மாளிகை பணியாளர் குழுத் தலைவராக இருந்தவர் பனீட்டா.

இந்த நிலையில் இவரை புதிய சிஐஏ இயக்குநராக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.

இந்த நியமனத்தை செனட் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்துள்ளது. பனீட்டாவுக்கு புலனாய்வுப் பணியில் நேரடி அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் விசேட பிரதிநிதி நியமனத்தை ஏற்க இலங்கை அரசு மறுப்பு!

rohitha-bogollagama.jpgஇலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக  பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் நியமித்த விசேட பிரதிநிதியின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது.

இலங்கைக்கான பிரிட்டனின் விசேட பிரதிநிதியின் நியமனம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. ஒரு தலைப்பட்சமாக இடம்பெற்ற இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென அதில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நியமனம் சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானதென்றும் இவரது நியமனத்தில் முறையான இராஜதந்திர ஒழுங்குமுறைகள் பேணப்படவில்லையென்றும் அமைச்சரவையில் சுட்டிக்காட்டப்பட்டதாகவும் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் கடத்தல், விற்பனைகளில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பு

baby-01.jpgஅண்மைக் காலங்களில் நாட்டில் இடம்பெற்றுவருகின்ற குழந்தைகள் விற்பனை மற்றும் கடத்தல்கள் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவற்ற தெரிவித்துள்ளார். சில ஆஸ்பத்திரிகளில் அதிகாரிகள், சிற்ழியர்கள் மற்றும் பதிவாளர்களுக்கும் இதில் தொடர்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குழந்தைகள் விற்பனை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து செல்வதற்கும் சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அதில் தலையிட்டு அதனைத் தடுப்பதற்கு முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். குழந்தைகளை விற்பனை செய்யும் சம்பவங்கள் தற்போது பகிரங்கமாக நடைபெறும் அளவுக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் குழந்தை ஒன்று 25 ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்ட போது பொலிஸார் மடக்கிப்பிடித்தனர்.  இங்கு ஏலவிற்பனையாக குழந்தைகள் விற்கப்படுவது தெரியவந்தது. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் ஒரு பிறந்த குழந்தை கடத்தப்பட்டது. பின்னர் கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.

கடத்திய பெண் பின்னர் கைது செய்யப்பட்ட போது அவர் குழந்தையைக் கடத்தி விற்பவர் என்பது தெரியவந்தது. வெளிநாட்டு தம்பதியருக்கு விற்கப்பட்ட குழந்தை ஒன்று பின்னர் மீட்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

பதவி துறக்க மஹேல முடிவு

mahela1102.jpgஇலங்கைக் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்தே தனது கப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக மஹேல ஜெயவர்தன கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தனாவே கப்டனாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தொடருக்கு இலங்கை அணி புறப்படவிருக்கும் நிலையில் தனது கப்டன் பதவியிலிருந்து விலக மஹேல முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மஹேலவின் துடுப்பாட்டம் மிகமோசமாக இருந்து வந்ததால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுமிருந்தார். இந்த நிலையிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கப்டன் பதவிகளைத் துறக்க அவர் முன்வந்துள்ளார்.

3 இலங்கையருக்கு 11 வருட சிறை

drugs.jpgஹெரோயின் கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 11 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையிலுள்ள வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஹெரோயின் கடத்தப்படுவதாக  தகவல் கிடைத்தது. இதையடுத்து கீழ்ப்பாக்கத்திலுள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 20 கிலோ எடையுள்ள ஹெரோயின் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த ரியாஸ் ஃபரூக், சுபேர் முபாரக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொழும்பில் இருந்து திருவனந்தபுரம் வழியாகச் சென்னைக்கு ஹெரோயின் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சஜித் நிஷாந்தா என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

அவசர நோயாளிகளுக்கான அம்புலன்ஸ் சேவை குடாநாட்டில் இன்று முதல்

ambulance.jpgயாழ் .மாவட்டத்தில் அவசர நிலைகளின் போது நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கான அவசர அம்புலன்ஸ் சேவை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படுகின்றது.  24 மணிநேரமும் செயற்படவுள்ள இந்த அம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கேட்டுள்ளார்.

இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

இன்று ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அவசர அம்புலன்ஸ் சேவையை யாழ்.மாவட்டச் சுகாதார திணைக்களம் ஒருங்கிணைக்கும். அவசர நிலைகளில் இச் சேவையைப் பெற விரும்புபவர்கள் 110 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும். கையடக்கத் தொலைபேசி மூலம் 110 என்ற தொலைபேசியூடாக இச்சேவையைப் பெற்றுக்கொள்ள சில நாட்கள் தாமதமேற்படும் என்பதால் அவர்கள் 0212224444 என்ற இலக்கம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

அவசர அழைப்புகளை ஒருங்கிணைப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள நிலையம் 24 மணிநேரமும் செயற்படும். இங்கிருந்து அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள அம்புலன்ஸ்களுக்கு தகவல்கள் வழங்கப்படும்.

இச்சேவையின் மூலம் யாழ்.மாநகராட்சிப் பகுதியிலும் அதனை அண்டிய வலிகாமம் பகுதிகளிலும் உள்ள நோயாளர்கள் நேரடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.  ஏனைய பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவர். தேவையேற்படின் அவசர சிகிச்சைகளுக்குப் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுவர்.

இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக பருத்தித்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி, சங்கானை மற்றும் ஊர்காவற்றுறை போன்ற வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு அவசர முதலுதவிச் சிகிச்சைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு, அம்புலன்ஸ் சாரதிகளுக்கும் பணிப்பாளர்களுக்கும் அவசர முதலுதவிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து ஏனைய வைத்தியசாலைகளின் அம்புலன்ஸ்களுக்கு மருத்துவ உபகரணங்களும் சாரதிகளுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படும்.  யாழ்.மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக சுகாதார ஸ்தாபனமும் சர்வதேச மருத்துவக் குழுவும் உதவியளித்து வருகின்றன. ஆனால், சுகாதாரத் திணைக்களமே இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

மத்திய, வடமேல் மாகாண பாடசாலைகள் தேர்தலை முன்னிட்டு வெள்ளி மூடப்படும் – கல்வியமைச்சு

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் நாளை வெள்ளிக்கிழமை மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலுமுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படுமென கல்வி யமைச்சு தெரிவித்திருக்கிறது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 14 ஆம் திகதி (சனிக்கிழமை) நடைபெற விருக்கிறது.

இதற்கான வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பாடசாலைகளிலேயே அமைக்கப்பட விருப்பதாலும் ஏனைய தேர்தல் கடமைகளின் பொருட்டுமே தேர்தலுக்கு முன்தினமான 13 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரு மாகாணங்களினதும் அனைத்து அரச பாடசாலைகளும் மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் பதில் செயலாளரான எஸ்.யூ.விஜேரட்ன தெரிவித்தார்.

இதேநேரம், விடுமுறை வழங்கப்பட்ட இந்த பாடசாலை தினம் பின்னர் வசதியான பிறிதொரு தினத்தில் வைக்கப்படும் என்றும் விஜேரட்ன மேலும் கூறினார். தேர்தல்கள் செயலகத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்கவே மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் அரச பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

வாகனம் நீரினுள் பாய்ந்து விபத்து; இரு வெளிநாட்டு பிரஜைகள் கிண்ணியாவில் மரணம்

திருகோணமலை – மூதூர் கரையோரப் பாதையிலுள்ள கெங்கை துறையில் இடம்பெற்ற விபத்தொன்றில் அரசசார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த இரு வெளிநாட்டவர்கள் மரணமடைந்துள்ளனர்.

நேற்றுக்காலை 10.30 மணியளவில் கெங்கை துறையை கடப்பதற்காக மிதவைப் படகில் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தற்செயலாக கடலில் பாய்ந்ததில் ஜெய்க்கா நிறுவனத்தின் ஜப்பான் நாட்டவரான குஜிவாரா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவரான ஆனோல்வலதே ஆகிய இருவருமே இறந்தவர்களாவர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

சாரதி மற்றும் இலங்கை பொறியியலாளர் உட்பட நால்வர் வாகனத்தில் பயணம் செய்துள்ளனர். மூதூருக்கும், கிண்ணியாவிற்கும் இடையிலுள்ள கெங்கை துறை மிதவை படகு பாதையில் வாகனத்தை ஏற்றிய பின் சாரதியும், பொறியியலாளரும் கீழே இறங்கி நின்றபோது, வாகனம் திடீரென கடலினுள் சரிந்துள்ளது.

இதனால் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். வெளிநாட்டவர்களான இருவரினதும் சடலம் வாகனத்துடன் அரைமணி நேரத்தின் பின் பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளது. சடலம் தற்போது (நேற்று 1.30 வரை) கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு உறவுகளில் புதிய கொள்கையை பின்பற்றப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

hillary.jpgஉலக நாடுகளுடனான உறவில் புதிய கொள்கையொன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அண்மைய வருடங்களாக விரிசலடைந்திருந்த ரஷ்யாவுடனான உறவை மீண்டும் புதுப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ள பைடன் ஈரானுடன் பேச்சுகளை ஆரம்பிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல விவகாரங்களை சாதகமான அணுகுமுறையினூடாக கையாள்வதற்கு அமெரிக்கா தயாராகவுள்ள அதேவேளை நட்பு நாடுகளும் இவ்வாறான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தானை தவிர்த்து ஆப்கானிஸ்தானில் எந்தவொரு தந்திரோபாய வெற்றியையும் அடைய முடியாதென எச்சரித்துள்ள பைடன் இப்பிராந்தியத்தின் நிலைமை மோசமடைந்து வருவது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்குமே பாதுகாப்பு அச்சுறுத்தலை தோற்றுவிக்குமென தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் சர்வதேச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் உரையாற்றிய பைடனின் உரையில் ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை, காலநிலை மாற்றம் மற்றும் உலக பொருளாதார நெருக்கடி போன்ற முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

உலக நாடுகளுடனான உறவில் புதிய அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பதென்ற புதிய நிர்வாகத்தின் தீர்மானத்துடன் நான் ஐரோப்பாவுக்கு வந்துள்ளேன். உலக நாடுகளின் விவகாரங்களை உள்வாங்கி அதனை அவதானித்து இது தொடர்பில் ஆலோசனை நடத்துவோம். அமெரிக்காவுக்கு உலகம் தேவை. உலகத்திற்கு அமெரிக்கா தேவையென கருதுகிறேன். எமது அரசாங்கம் மிக உயர்ந்த இலக்குகளைக் கொண்டுள்ளது. எமது நாட்டுக்கு வெளியில் படைப்பலத்தை பிரயோகிக்காமல் ஜனநாயக ரீதியில் விவகாரங்களைக் கையாள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் அதனுடனான உறவை மீள சீரமைக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புகிறார். பல விவகாரங்கள் தொடர்பில் எம்மால் இணைந்து பணியாற்ற முடியும். ஆனால், ஒவ்வொரு விடயத்திலும் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து செயற்படுவது சாத்தியமற்றது. சில விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆனால், பொதுவாக எமக்கிடையில் இணக்கம் ஏற்படும் விடயங்களில் நாம் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

மத்திய ஐரோப்பாவில் ஏவுகணைப் பாதுகாப்பு கவசத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுக்கும். இதேவேளை, ஈரானின் நடவடிக்கைகளுக்கேற்ப அந்நாட்டுடனான தொடர்புகள் பேணப்படும். நேட்டோ கூட்டமைப்பு மற்றும் ரஷ்யாவுடன் நாம் அதிகளவான ஆலோசனைகளை நடத்தும் அதேவேளை எமது நட்பு நாடுகளிடமிருந்து அமெரிக்கா உதவிகளை எதிர்பார்க்கும். உதாரணத்திற்கு குவாண்டனாமோ தடுப்பு முகாம் மூடப்படும்போது அங்கிருக்கும் கைதிகளை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வது போன்ற விடயங்களில் நாம் ஏனைய நாடுகளுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவதுடன் அவற்றிடமிருந்து உதவிகளையும் எதிர்பார்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டம் – மக்களவை நாளை கூடுகிறது

lok-saba.jpgஇந்திய பொதுத் தேர்தலுக்கு முந்தைய மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்து வருவதால் இந்த கூட்டத் தொடரில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவையின் பதவிக் காலம் மே மாதம் முடிகிறது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், 14வது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுகிறார்.

வழக்கமாக பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தேர்தல் நடக்க உள்ளதால், புதிய அரசு அமைந்த பிறகே முழுமையான பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும். அது வரை அரசின் செலவுக்காக 16ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 14வது மக்களவையின் கடைசிக் கூட்டம் என்பதாலும் தேர்தலுக்கு முந்தைய கூட்டத் தொடர் என்பதாலும் மக்களின் கவனத்தை கவர, முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச்சினையும் எடுத்துக் கொள்ளப்படலாமென கருத்துக்கள் தெரிவிக்கின்றன. 

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 26ம் தேதி வரை நடக்கிறது. இதில் விடுமுறை போக, 10 நாட்களுக்கு நாடாளுமன்றம் செயல்படும்.

இப்போதைய மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடர் என்பதால் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பற்றிய மதிப்பீடுகளையும் கூற  உறுப்பினர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படும். கூட்டத்  தொடரை அமைதியாக நடத்த எல்லா எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.