சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மஹேல ஜயவர்தனவின் இறுதி எதிர்பர்ப்பு

mahela1102.jpgஇலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டித் தொடர் ஒன்றில் விளையாடுவதற்காக நேற்று பாக்கிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன பங்குபற்றும் இறுதி டெஸ்ட் போட்டியாக இது அமைகிறது. இந்த போட்டித் தொடரை வெற்றிகொள்வது தமது ஒரே குறிக்கோள் என மஹேல தெரிவிக்கின்றார்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
பாக்கிஸ்தானுடனான போட்டித் தொடரை இந்தியா இரத்து செய்ததையடுத்து அந்தப் போட்டித்தொடரில் விளையாட பாக்கிஸ்தான் இலங்கைக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தானின் அழைப்பை இலங்கை ஏற்றுக்கொணடதற்கு ஏற்ப இந்த போட்டித்தொடர் நடத்தப்படுகிறது.

இந்த போட்டித்தொடர் ஒரு நாள் போட்டிகளையும் டெஸ்ட் போட்டிகளையும் கொண்டதாக உள்ள போதிலும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி ஒரு நாள் போட்டித் தொடர் முன்னர் நடத்தப்பட்டதுடன் அதில் இலங்கை அணி வெற்றிபெற்றது. பாக்கிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணியில் புது ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பரன வித்தான மற்றும் வேகப் பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் ஆகிய இரு புதுமுகங்களும் இடம்பெறுகின்றனர்.

மஹேல தலைமயிலான அணியில் குமார் சங்கக்கார, திலக்கரத்ன டில்ஷான், திலான் சமரவீர, பிரசன்ன ஜயவர்தன, மாலிந்த வர்ணபுர,  தரங்க பரன வித்தான,  சமிந்த வாஸ், முத்தையா முரளீதரன், அஜந்த மெண்டிஸ், சாமர கப்புகெதர,பர்வீஸ் மஹரூப், தில்ஹார பெர்னான்டோ, திலான் துஷார, சுரங்க லக்மால் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

இலங்கை நிலைவரம் அமெரிக்க செனட் குழு – பெப். 24 இல் விசாரணை

u-s-a-flag.jpgஇலங் கையின் அண்மைய நிலைவரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுகளுக்கான செனட் குழு எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கூடி விசாரணை நடத்தவுள்ளது. டேர்க்சென் செனட் கட்டிடத்தில் இந்த விசாரணை இடம்பெறுமென குழுவின் இணையத்தளம் தெரிவித்துள்ளது. வெளியுறவுக் குழுவின் தலைவர் செனட்டர் கெரி இந்த விசாரணைக்கு தலைமை தாங்கவுள்ளார். இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜெவ்ரி ஜே.லன்ஸ்ரட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அன்னா நெய்ஸ்ரட், பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழுவின் பொப்டியற்ஸ் ஆகியோர் இந்த விசாரணையின் போது சாட்சியமளிக்கவுள்ளனர். 1989 இன் பின்னர் கொழும்பில் அமெரிக்கத் தூதுவர்களாகப் பணியாற்றிய லன்ஸ்ரட் உட்பட முன்னாள் இராஜதந்திரிகள் இலங்கையில் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆழ்ந்த கவலையை தெரிவித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தனர். “சண்டே லீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க படுகொலை தொடர்பாகவும் முன்னாள் தூதுவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர 

விபரங்களை பதிவு செய்யாத தொலை பேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை.

cdma-t-p.jpgஉரிய விபரங்கள் சமர்ப்பிக்கப்படாத சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் விபரங்களை திரட்டுவதற்காக இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஏப்பிரல் 30ம் திகதிக்கு முன்னர் தகவல்களை பதிவு செய்து கொள்ளாத தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.ஆர்.சி. வழித்துணையுடன் வன்னிக்கு கடல் வழியாக உணவுப் பொருட்களை அனுப்புவது குறித்து ஆராய்வு

ship.jpgவன்னிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. வன்னிக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கடந்த மாதம் 16 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் ஒரு மாதமாக கொண்டு செல்லப்படாததால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கக் கூடிய பாதுகாப்பான இடங்கள் இல்லையெனவும் அரசு தரப்பு கூறிவந்தது. இதனால் சுமார் ஒரு மாதமாக உணவுப் பொருட்கள் எதுவும் அங்கு அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்பகுதியிலிருந்து யுத்தத்தால் படுகாயமடைந்த சுமார் 700 பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதனையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல்மார்க்கமாக வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பது பற்றி அரச உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. திருமலை துறைமுகத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க கொடியினை தாங்கிய கப்பலில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு புதுமாத்தளன் கடல் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இறக்கி கரைக்கு கொண்டு செல்வதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியும் கோரப்படவுள்ளது.

வவுனியாவில் உள்ள உலக உணவுத்தாபனத்தின் களஞ்சியத்தில் வன்னிக்கு அனுப்புவதற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் உள்ள பகுதிக்கு செல்ல வவுனியாவிலிருந்து 80 கிலோ மீற்றர் தூரத்தை கடக்கவேண்டியுள்ளது. புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளிலேயே அதிகளவான பொதுமக்கள் உள்ளனர். தரை வழியாக அங்கு லொறிகளில் உணவுப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்ணிவெடிகள் வீதிகளில் புதைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஆபத்தான பிரதேசமாகவுள்ளது. நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களுடைய பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்படுகின்றது. எனவே தான் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓமான், துபாய், கலிபோர்னியாவில் ஆயிரம் தாதியர்களுக்கு தொழில் வாய்ப்பு

sri-lanka-nurses.jpgஓமான்,  கலிபோர்னியா, டுபாய் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் ஆயிரம் தாதியர்களை இவ்வருடத்தில் அனுப்புவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவர்கள் அந்நாடுகளில் நான்கு இலட்சம் ரூபாவை சம்பளமாகப் பெறுவதுடன் தமது குடும்பங்களையும் அங்கு தங்க வைத்துப் பராமரிக்க முடியுமெனவும் சம்பளத்துடன் இதர சகல சலுகைகளையும் அந்தந்த நாடுகள் வழங்குமெனவும் சுகாதார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத்திட்டத்த்தின் கீழ் ஏற்கனவே 19 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இதன் இரண்டாம் கட்டமாக அடுத்த வாரம் மேலும் 30 தாதியர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ள னர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் உட்பட்ட ஆவணங்கள் நேற்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவினால் கொழும்பில் வைத்துக் கையளிக்கப்பட்டன. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் அடுத்த மாதத்தில் மேலும் 60 பேர் ஓமானுக்கு அனுப்பப்படவுள்ளதுடன் இவ்வருடத்தில் மொத்தமாக ஆயிரம் தாதியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே சுகாதார அமைச்சின் நோக்கமெனவும் தெரிவித்தார்.இவ்வாறு அனுப்பப்படுபவர்கள் இரண்டு வருட காலத்திற்கு அந்நாடுகளில் கடமை புரிவர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக ‘இன்ஃபோசிஸ்’ நாராயண மூர்த்தி

mahi-narayanasuwami.jpgஇலங்கை ஜனாதிபதி மாளிகையில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இன்போஸிஸ் நாராயணமூர்த்தி  தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில்பேசிய இலங்கை ஜனாதிபதி  ராஜபக்சே நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுடபத்துறை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாராயணமூர்த்தியை இந்தப் புதிய பொறுப்பில் அமர்த்துவதாகவும், அதற்கான நியமனக் கடிதம் இந்த விழாவிலேயே தரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசின் சர்வதேச தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை நாராயணமூர்த்தி ஏற்றுக்கொண்டதாகவும் இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹோனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிராமப்புற வேலைவாய்ப்பில் இந்தியாவின் மாடல் திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயலாக்கினோம் என்பது குறித்து தான் விளக்கியது ராஜபக்சேவுக்குப் பிடித்துவிட்டதால், அதை இலங்கையிலும் செயல்படுத்த விரும்புகிறார். அதற்காகவே என்னை இந்தப் பதவியில் நியமித்துள்ளார் என்றார் நாராயணமூர்த்தி.

2009 ஆங்கில, தகவல் தொழில்நுட்ப ஆண்டு

net.jpg2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார். 2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் ‘நாட்டின் சகல பிள்ளைகளுக்கும் ஆங்கிலக்கல்வி’ என ஜனாதிபதி அறிவித்ததை தற்போது நடைமுறைப் படுத்தியுள்ளார் என தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இதற்கு இந்தியப் பேரறிஞர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

2009ம் ஆண்டை தகவல் தொழில்நுட்ப மற்றும் ஆங்கிலமொழி ஆண்டாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து, இதனை ஊடகவியலாளர்களுக்குத் தெளிவுபடுத்தும் செய்தியாளர் மாநாடொன்று நேற்று முன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதியின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழில்நுட்பக் கல்வியின் பிதா என வர்ணிக்கப்படும் இந்தியப் பேரறிஞர் நாராயணமூர்த்தி, ஐதராபாத் ஆங்கிலமொழிப் பல்கலைக்கழக உபவேந்தர் எபெயுன் மயூரியா, ஆங்கில மொழிப் பயிற்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் சுனிமல் பெர்னாண்டோ, செயலணியின் இனைப்புச்செயலாளர் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,

வரலாற்றில் முதல் தடவையாக ஆங்கில மொழிப் பயிற்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. நாட்டின் பிரதான செயற்திட்டமான மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது. ஆங்கில மொழிப் பயிற்சி என்பது நாட்டின் கிராமியப் பகுதி பிள்ளைகளை இலக்காகக் கொண்டே ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு ஜனாதிபதி செயலகம் உட்பட பல்வேறு நிறுவனங்களும் பங்களிப்பினையும் உந்துதலையும் வழங்குகின்றன எனவும் தெரிவித்தார்.

இம்மாநாட்டில் உரையாற்றிய ஐதராபாத் பல்கலைக் கழக பேராசிரியர் எபெயும் மயூரியா;இலங்கையும் இந்தியாவும் வரலாற்று நட்பு பேணும் நாடுகள்.இலங்கை அரசாங்கம் ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்ப ஆண்டாக இவ்வருடத்தைப் பிரகடனப்படுத்தியுள்ள இத்தருணத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. இத்திட்டம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் 99 வீதமான பெண்கள் தமது கணவன் மூலமாகவே பாதிப்பு -சுகாதார அமைச்சு தகவல்

h-i-v-aids.jpgஇலங்கையில் 1059 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளான நிலையில், இவர்களில் 186 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.  எச்.ஐ.வி. தொற்றுக்கு இலக்கானவர்களில் 615 பேர் பெண்கள் என தெரிய வந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான 289 பேரில் 200 பேர் பெண்கள் எனவும் இப் பெண்களில் 99 வீதமானோர் தமது கணவர் மூலமே எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அத்துடன், கடந்த வருடத்தில் 30 எயிட்ஸ் நோயாளிகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, இந் நோய்த் தொற்றுக்கு உள்ளான 14 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதனிடையே, அமைச்சு மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், 72 வீதமான பாடசாலை மாணவர்கள் பல்வேறு பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் 29 வீதமானோர் ஆபாசப் படங்களை பார்வையிடுவதாகவும் மேலும், 18 வீதத்தினர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

தலவாக்கலை தோட்டத்தில் தீ: 6 லயன் வீடுகள் எரிந்து நாசம் – பாதிக்கப்பட்டோர் கோயில்களில் தஞ்சம்

sri-lanka-upcountry-01.jpgதலவாக் கலை கிரேட்வெஸ்ட் தோட்டத்தில் ஆறுலயன் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளதுடன் இதில் உயிர்ச்சேதமெதுவும் ஏற்படவில்லையெனவும் தோட்ட மக்கள் மேற்கொண்ட நடவடிக்கையினால் தீ மேலும் லயன் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீடுகளின் கூரைகள் முழுவதும் சேதமடைந்துள்ளதுடன் இவ்வீடுகளில் குடியிருந்தோரை தோட்டக் கோயிலில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட 65 பேருக்கு சமைத்த உணவுகளை வழங்கவும் கிரேட் வெஸ்ட் தோட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசு தேர்தல் பிரசாரம் – சாடுகிறது ஜே.வி.பி.

jvp-net.jpgமக்கள் பிரச்சினையை தேர்தல் தொனிப்பொருளாக முன்வைக்காது யுத்தத்தை முன்னிறுத்தி பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி, மாகாண சபைகளுக்கு அமைச்சர்களின் உறவினர்களையும் சமூக விரோதிகளையும் அனுப்ப முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.

இத்தகைய கும்பலிடம் மாகாண சபைகள் சிக்கிவிடாது பாதுகாப்பதற்கு மக்கள் தமது வாக்குகளை நாட்டின் பிரிவினைக்கு இடமளிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படும் ஜே.வி.பி.க்கே வாக்குகளை அளித்து சக்தியளிக்க வேண்டுமென அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் ரில்வின் சில்லா கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்துகின்றது. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்வதுடன் தேர்தல் சட்ட விதிகளை மீறுவது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதென அனைத்தையும் மேற்கொள்கின்றது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அரசாங்கமே அதிகளவான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதைக் காணலாம். அச்சுறுத்துவது முதல் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் தேர்தல் சட்டவிதிகளை மீறுவது என அனைத்திலுமே பெரியளவில் ஈடுபட்டதனையும் அவதானிக்கலாம்.

அரச கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதுடன், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றது. சட்ட விதிகளின் படி ஒரு வேட்பாளர் ஒரு ஒலிபெருக்கி வாகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியுமென்ற நிலையில் அரச தரப்பு தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி, வரம்புக்கு மிறிய வகையில் ஒலி பெருக்கியின் சத்தங்களையும் கூட்டியும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் ஒலி மாசடைதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் தனது வெற்றிக்காக இது மட்டுமன்றி, மக்களின் வாக்குகளை பிரித்தெடுத்து வெற்றிபெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பேசாது இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து பெற்றுவரும் வெற்றிகளை பொய்களைக் கூறி தனது வெற்றியாக காட்ட முனைகின்றது.

இவ்வாறு செய்து வெற்றி பெற்று மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றுவதற்கு காரணம். அங்கும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கேயாகும். இரு மாகாண சபை வேட்பாளர்களை பார்க்கின்ற போது அமைச்சர்களின் சகோதரர்களாகவும் மாமன், மருமகன் போன்ற உறவு முறையை நாம் காணலாம். அது போல் மாகாண சபையை அதிகாரத்துடன் கொண்டு நடத்த குண்டர்கள் பாதாள உலகத்தினர் குடுகாரர்கள் போன்ற சமூக விரோதிகளையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

இவர்களின் வெற்றிக்காக அரச ஊடகங்களை பயன்படுத்துகின்றது. இவர்களுக்காக பிரசாரம் செய்யும் ஊடகங்கள் அரச ஊடகங்கள் அல்ல. அது மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகமாகும். தனது வெற்றிக்காக அரசாங்கம் யுத்த வெற்றியையும் சகல பலத்தினையும் பாவித்து மக்களை ஏமாற்றுவோரை நிராகரித்து உங்கள் வாக்குரிமையை பாதுகாக்குமாறு கோருகின்றோம் என்றார்.