சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

முல்லைத்தீவிலிருந்து திருமலை வந்தவர்கள் இதுவரை 1,610 பேர்

trincomali.jpgநேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் திருகோணமலைக்கு 398 பொதுமக்கள் கூட்டிவரப்பட்டனர். அவர்களையும் சேர்த்து பெப்ரவரி 11 ஆம் திகதியிலிருந்து முல்லைத்தீவிலிருந்து கூட்டிவரப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,610 ஆக அதிகரித்துள்ளது நேற்று சனிக் கிழமை நண்பகல் 12 மணியில் உள்ள நிலைவரத்தின் படி 911 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியே அனுப்பிவைக்கப்பட்டனர். வெளிமாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் வருமாறு;
கந்தளாய்160, தம்பலகாமம்65, பொலன்னறுவ183, கொழும்பு மற்றும் கண்டி86, வவுனியா ஆஸ்பத்திரி23, திருகோணமலையில் திருமலை ஆஸ்பத்திரியில் 646, திருமலை மெதடிஸ்த மகளிர்கல்லூரி 53 பேரும் ஆக 699 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 441.

முல்லைத்தீவில் இருந்து கொண்டுவரப்பட்ட காயமடைந்தவர்களில் 528 பேருக்கு பெப்ரவரி 11 இருந்து பெப்ரவரி 20 வரை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈழத்துத் தமிழ் பெண்ணுக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை:ஸ்லம்டாக் மில்லியனர்

mia.jpgசமீபத்தில் வெளியாகி ஆஸ்கார் வரை சென்றுள்ள திரைப்படமான “ஸ்லம்டாக் மில்லியனர்” (Slumdog Millionaire) திரைப்படத்தில் வரும் ‘ஓ சயா’ என்ற பாடலை எழுதி பாடியவர் MIA.  இவருக்கு ஆஸ்கார் விருது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் தமிழனின் வேதனை உணர்த்த தக்க சமயத்தில் MIA என்ற தமிழ் பாடகிக்கு ஆஸ்கார் மற்றும் மிகவும் உயர்ந்த பாடகர்  விருதான கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் வ‌சிக்கும் ஈழ‌த்து த‌மிழ்பெண் ‘MIA’ மாத‌ங்கி அருள்பிர‌காச‌ம் இவ‌ர் இங்கிலாந்தில் புக‌ழ் பெற்ற‌ பாட‌ல் ஆசிரிய‌ர், ராப் பாட‌க‌ர். த‌மிழ் ஈழ‌த்தில் 17 ஜுலை 1977-ல் க‌லா ம‌ற்றும் அருட்பிர‌காச‌ம் த‌ம்ப‌தியின‌ருக்கு பிற‌ந்த‌வ‌ர். இவ‌ர‌து த‌ந்தை அருட்பிர‌காச‌ம் தீவிர‌ ஈழ ஆத‌ர‌வாள‌ர் ம‌ற்றும் அப்போதையை த‌மிழ் ஈழ‌ மீட்பு போர்ப்ப‌டை (த‌ற்போது த.ஈ.வி.புலிக‌ள்) ப‌ணியாற்றிய‌வ‌ர். முத‌லாம் உள்நாட்டு போரில் சிங்க‌ளப்‌ப‌டைக‌ள் த‌மிழ‌ர்க‌ளை குடும்ப‌ம் குடும்ப‌மான‌ கொலை செய்த‌போது த‌ன‌து தாயுட‌ன உயிர் பிழைத்து சென்னைக்கு வ‌ந்தார். சென்னையில் த‌ங்கிருந்த‌ இவ‌ர் சில‌ வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து மீண்டும் த‌ன‌து த‌ந்தையைக் காண‌ யாழ்ப்பாண‌ம் சென்றார்.

அங்கு த‌ன‌து வீடு ம‌ற்றும் ப‌டித்த‌ ப‌ள்ளிக்கூட‌ம் முழுவ‌தும் இல‌ங்கை இராணுவ‌த்தின‌ரால் சூரையாட‌ப்ப‌ட்டு கொண்டிருந்த‌து. அவ‌ர‌து த‌ந்தையும் இல‌ங்கை இராணுவ‌த்துட‌ன் போராடிக்கொண்டிருந்த‌ கார‌ண‌த்தால் இராணுவ‌ம் இவ‌ரையும் இவ‌ர‌து தாய் ம‌ற்றும் இவ‌ர‌து இர‌ண்டு ச‌கோத‌ர‌ர்க‌ளையும் தேடிக்கொண்டிருந்த‌து. உயிருக்கு ப‌ய‌ந்து மீண்டும் த‌மிழ‌க‌ம் வ‌ந்த‌ இவ‌ர்க‌ள் உற‌வின‌ர் இருவ‌ரின் ஆத‌ர‌வால் ல‌ண்ட‌ன் நோக்கி ப‌ய‌ண‌ம் ஆனார்கள். MIAவிற்கு வ‌ய‌து 11 ல‌ண்ட‌னில் அக‌தியாக‌ த‌ன‌து வாழ்க்கையை தொட‌ங்கிய‌வ‌ர். ல‌ண்ட‌னில் உள்ள‌ சென்ட்ர‌ல் செயிண்ட் மார்சியல் ஆர்ட் அகேடமியில் த‌ன‌து க‌லைப் ப‌ட்டப்‌ப‌டிப்பை முடித்தார். ப‌ட்டப்‌ப‌டிப்பு முடிந்ததும் இவ‌ர் த‌னி இசைப்பாட‌ல்க‌ள் இய‌ற்றுவ‌தும் தானாக‌வே ஆல்ப‌ங்க‌ள் த‌யாரிக்கும் ப‌ணியில் ஈடுப‌ட்டார். இவ‌ர‌து பாட‌ல்க‌ள் இங்கிலாந்து ம‌ட்டுமின்றி அமெரிக்க‌ நாடுக‌ளிலும் பிர‌ப‌ல‌மான‌து. த‌னி இசை ஆல்ப‌ம் இங்கிலாந்தில் மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌து. 2005-ஆம் ஆண்டில் ‘ஆல்ப‌ம் ஆப் த‌ இய‌ர்’ என்ற‌ விருதை பெற்றுத்த‌ந்த‌து. இந்த‌ வ‌ருட‌ம் பேப்ப‌ர் ப்ளேன்ஸ் (Paper Planes-2008), சகா லைக் அஸ் என்ற‌ இர‌ண்டு ஆல்ப‌ங்க‌ளுக்கு மிக‌ உய‌ரிய‌ விருதான‌ கிராமிவிருது இவ‌ருக்கு ப‌ரிந்துரை செய்ய‌ப‌ட்டுள்ள‌து.

ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தீக்குளித்த திமுக தொண்டர் மரணம்

united-people.jpgஇலங் கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் திமுக இளைஞர் அணி நடத்திய மனித சங்கிலியின்போது தரமணியைச் சேர்ந்த தொண்டர் தீக்குளித்தார். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவர் உயிரிழந்தார். சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(55). மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து 1999ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.

இவருக்கு நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.நேற்று திமுக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் சிவப்பிரகாசமும் கலந்து கொண்டார். அப்போது திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீயைக் கொளுத்தி வைத்துக் கொண்டார். சிவப்பிரகாசம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க. பகுதி பிரதிநிதியாகவும், டாக்டர் கலைஞர் மன்ற செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பிரகாசம் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிதியுதவி அளிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மலையக மக்களின் அடையாள அட்டை பிரச்சினையை நிறைவேற்றதிகார ஜனாதிபதியே தீர்க்க வேண்டும் – அரவிந்குமார்

identity-card-sri-lanka.jpg“மலை யகத்தில் இலட்சக்கணக்கானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லாதிருப்பதனால், அவர்கள் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். காலாகாலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இது விடயத்தில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கூடிய கவனம் எடுத்து, தீர்வினை ஏற்படுத்துவதே இப்பிரச்சினையின் தீர்விற்கான வழியாகும்.

இவ்வாறு, ஊவா மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் மாகாணப் பொறுப்பாளருமான அ. அரவிந்குமார், முன்னணியின் பதுளைப் பணிமனையில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஊவா மாகாண சபை உறுப்பினர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

மலையக மக்களுக்கு காணி உரிமை, வீட்டுரிமை, சமஉரிமை வேண்டுமென்று எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் கோஷங்களை, சிறிது காலத்திற்கு ஒத்திவைத்துவிட்டு, மலையக மக்களின் ஆளடையாளத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள அத்தியாவசியமான தேசிய அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் வேண்டுமென்ற கோஷத்தையே முதலில் எழுப்ப வேண்டும். இதுவே, தற்போது மிக அவசியமானதாக இருந்து வருகின்றது. தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியம் தேவைப்படும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களே, மலையக மக்களிடம் இல்லாதுள்ளன. பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லாது எந்த வகையிலும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆகையினால், மலையக மக்களின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேசிய அடையாள அட்டை என்ற ஆவணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளையே, எமது தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஆளடையாள ஆவணம் கிடைக்கப் பெற்றதும் ஏனைய உரிமைகளை பெறுவதற்கான செயல்பாடுகளை முன்னெடுக்கலாம்.

மத்திய மாகாண சபை தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்ற எமது மக்களில் பெரும்பாலானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றதை, காணக் கூடியதாக இருந்தது. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் டி.எம். ஜயரட்ணவுக்கே, தேசிய அடையாள அட்டை இல்லாததால் வாக்களிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர், அவர் வீடு சென்று தேசிய அடையாள அட்டையைக் கொண்டுவந்து காட்டிய பிறகு தான், வாக்களிப்பதற்கு அனுமதி கிடைத்தது.

தேசிய அடையாள அட்டையின் முக்கியத்துவம் அந்தளவில் இருக்கும்போது, அந்த ஆவணத்தை எம்மவர்கள் பெற்றுக்கொண்டே ஆக வேண்டுமென்ற நிலையும் அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இது விடயத்தில், ஜனாதிபதியே நேரடியாக தலையிட்டு, தமது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைப் பிரச்சினைக்கு தீர்வினை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.

வழக்கறிஞர்கள் காவல்துறை மோதல்: தமிழ்நாட்டில் நீதிமன்றங்களுக்கு விடுமுறை

justice.jpgசென்னை யில் வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடந்த வியாழன் நடந்த மோதலை அடுத்து, பதற்றம் தொடரும் நிலையில், தமிழ்நாட்டில் மேலும் இரு தினங்களுக்கு நீதிமன்றங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் முகோபாத்யாய தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.  வழக்கறிஞர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே நடந்த மோதலின்போது, நீதிமன்றச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. அதைச் சீரமைக்க அதிகாரிகளுக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையிலும், பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும், வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த இரு தினங்களும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டிருக்கும். தமிழகத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.

இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்’ இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி

Srithunga_Jeyasuriyaஇலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்தது.

வடபகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருவதாக ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுடன் 21/2 இலட்சம் தமிழ் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன் முழு அளவிலான தாக்குதலை இலங்கைப் படையினர் மேற்கொண்டால் படுகொலை இடம்பெறும் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இப்பிரச்சினை தமிழர் விவகாரம் மட்டும் அல்ல, இது அதிகளவிலான மனித உரிமைகள் விவகாரமாகும். இதற்கு தீர்வு காண நாம் யாவரும் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசிய மன்றத்தின் பொதுச் செயலாளர் தபான் போஸ் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பெண்கள் அமைப்பு, ஊடகங்கள், சமூக ஆராய்ச்சிக்கான ஜோஷி அதிகாரி நிறுவனம், சட்டப் போராட்டம், இன்சாவ், ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளருக்கான தேசிய போராட்டக்குழு, நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கம் ஆகியவையும் இக்கூட்டத்தில் பங்குபற்றின

புதிய அரசியல் அமைப்பு அனைத்துச் சமூகத்தினரையும் திருத்திப்படுத்துவதாக அமையவேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல

lakshman_kiriella.jpgஅரசாங்கம் தயாரிக்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து சமூகத்தினையும் திருத்திப்படுத்துவதாக அமையும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (19.02.2009) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைத் தீர்விற்காக புதிய அரசியல் அமைப்பொன்றினை கொண்டுவரப்போவதாக அமைச்சர் மைதிரிபாலசிறிசேன தெரிவித்து வருகின்றார். அவ்வாறு ஒன்று கொண்டுவரப்படும்போது அதனை எதிர்க்கட்சி உட்பட்ட ஏனைய அரசியல் கட்சிகளினதும் பரிசீலணைக்கு விடப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்க குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்

non-political-organization.jpgநாட்டிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அக்குழுவின் தலைவராக சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜேசிங்க செயற்படுவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களினால் வடக்கு, கிழக்கு மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு செலவிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து இந்தக் குழுவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் நாடுகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும், வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக பெருமளவிலான நிதியை பெற்றுக்கொடுத்துள்ளன. கிளிநொச்சி பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதே இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியுதவிகள் அபிவிருத்திப்பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த விடயங்களை கருத்தில் கொண்டே,இக் கண்காணிப்புக் குழுவை அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் அதனை அபிவிருத்திப் பணிகளை கண்காணிப்பதுடன், அவற்றின் வினைத்திறன் குறித்து ஆராயும் எனவும் எதிர்காலத்தில் முறைகேடுகள் இடம்பெறாதிருக்க குழுவின் பரிந்துரைகள் உதவும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தவிர கடந்த காலங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள் இலங்கை எவ்வாறு செயற்பட்டன என்பதை கண்டறியும் அதிகாரமும் இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் தொகுதி நாயக்கர்சேனை தமிழ் வித்தியாலயத்தில் இன்று மீள் வாக்குபதிவு

sri-lanka-election.jpgபுத்தளம் தொகுதி கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட நாயக்கர்சேனை கிராமத்திலுள்ள தமிழ் வித்தியாலயத்தில் இன்று தேர்தல் மீள்வாக்குப்பதிவு இடம்பெறுகிறது. குறிப்பிட்ட பாடசாலையில் இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை வாக்குப்பதிவு இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனையிட்டு அனைவரது கவனமும் இந்தக் கிராமத்தின் மீது திரும்பியுள்ளது. நாயக்கர்சேனை பாடசாலையில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் நேரகாலத்தோடு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 14ம் திகதி வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் நடந்தது. இதன்போது புத்தளம் மாவட்டத்தில் மேற்படி தமிழ் வித்தியாலய வாக்குச் சாவடியில் மோசடிகள் இடம்பெற்றிருப்பது நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தச் சாவடியின் வாக்குகளை தேர்தல்கள் ஆணையாளர் ரத்துச் செய்திருந்தார். இதனையொட்டியே இவ்வாக்குச் சாவடியில் இன்று வாக்குப்பதிவு இடம்பெறுகிறது.

இன்று நடைபெறும் இந்தகுட்டித் தேர்தலையிட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயக் கிராமமான நாயக்கர் சேனையில் 1195 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இதுவரையும் வெளியிடப்படவில்லை. இரத்துச் செய்யப்பட்ட நாயக்கர்சேனை சாவடியைத் தவிர்த்து கிடைக்கப்பெற்ற உத்தியோகப் பற்றற்ற முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 11 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 5 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது. நாயக்கர் சேனை முடிவுகள் அறிவிக்கப்பட்டால் இந்த முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்கு முன்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் செல்லமுடியாதவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிக்கல்லூரிகள் அமைக்கப்படும் -உயர்கல்வி அமைச்சர்

உயர் கல்விக்கு பிரவேசிக்க முடியாத மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சிக்கல்லூரிகளை அமைத்து தொழில் நுட்பப் பயிற்சிகளை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வவர்ணபால தெரிவித்துள்ளார்.  கேகாலையில் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியை திறந்து வைத்துப் பேசுகையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், இன்று உலக நாடுகளில் தொழில்நுட்பத்துறை நவீன முறையில் வளர்ச்சி பெற்று வருகின்றது. கணினி மற்றும் ஆங்கில மொழி அறிவு இன்று மாணவர்களுக்கு அவசியம் தேவை. எந்தத் துறையிலும் கணினி முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவேதான் பாடசாலைகளில் உயர் கல்வி கற்றுவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சி அளிப்பது காலத்தின் தேவையாகும்.

வருடாந்தம் க.பொ.த.உயர்தர கல்வி கற்று பரீட்சையில் திறமையாக சித்தி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களில் சிறு தொகையினரே பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இந்த நிலைமையால்தான் அரசு பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு இவ்வாறான தொழில் நுட்பப் பயிற்சிக்கல்லூரிகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கும் பிள்ளைகள் நாட்டின் அபிவிருத்திக்கு பங்கு பற்றுவதற்கேற்ற கல்வி முறையே நாட்டுக்குத் தேவையாகும்.

பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் கிடைப்பதில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் தமக்கு வேலைதருமாறு வீதிகளில் ஊர்வலம் செய்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் பட்டதாரிகள் எவருமே இவ்வாறு ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்துவதில்லை என்றார்.