இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்தது.
வடபகுதியில் இலங்கைப் படையினர் மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவி வருவதாக ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார். விடுதலைப்புலிகளுடன் 21/2 இலட்சம் தமிழ் பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன் முழு அளவிலான தாக்குதலை இலங்கைப் படையினர் மேற்கொண்டால் படுகொலை இடம்பெறும் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இப்பிரச்சினை தமிழர் விவகாரம் மட்டும் அல்ல, இது அதிகளவிலான மனித உரிமைகள் விவகாரமாகும். இதற்கு தீர்வு காண நாம் யாவரும் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான தெற்காசிய மன்றத்தின் பொதுச் செயலாளர் தபான் போஸ் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு பெண்கள் அமைப்பு, ஊடகங்கள், சமூக ஆராய்ச்சிக்கான ஜோஷி அதிகாரி நிறுவனம், சட்டப் போராட்டம், இன்சாவ், ஒழுங்குபடுத்தப்படாத தொழிலாளருக்கான தேசிய போராட்டக்குழு, நிர்மான் மஸ்தூர் பஞ்சாயத்து சங்கம் ஆகியவையும் இக்கூட்டத்தில் பங்குபற்றின