::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பலர் வவுனியாவுக்கு வருவர் -அமைச்சர் ரிசாட் கூறுகிறார்

_mullai_1.jpg
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் பெருமளவு பொதுமக்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்களென எதிர்பார்ப்பதாகவும் இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்டதூரம் நடந்து வந்து இராணுவத்திடம் சரணடைந்துள்ளார்கள். பலர் தாடியுடன் நீண்ட நாட்கள் குளிக்காதவர்கள் போல் காணப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இடைத்தங்கல் முகாம்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயும் இந்தக் கூட்டத்தில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம் தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட உயர் அதிகாரிகள், கிராமசேவையாளர்கள், முகாம் பொறுப்பதிகாரிகள் , மாவட்ட அரச அதிபர் , படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சில பிரச்சினைகள் குறித்து இங்கு முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் காணப்பட்டது. குறிப்பாக நீர் வழங்கல், நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் சேவைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லையென முகாம் பொறுப்பதிகாரிகள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். வவுனியாவிற்குள் சுமார் 40 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் வந்துள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் சகல பொதுமக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல

khegeliya_rampukhala.jpgமுன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப. நடேசன் விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

புலிகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்க வேண்டுமாயின் புலிகள் தங்களின் பிடியிலுள்ள சகல பொது மக்களையும் முதலில் விடுவிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப. நடேசன் லண்டனிலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கியிருந்த பேட்டி தொடர்பாக வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தகவல் தருகையில்:-

புலிகள் ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றோ சரணடைய வேண்டும் என்றோ இம்முறை நாங்கள் கேட்கப்போவதில்லை. ஏனெனில் அதைப் பற்றி எமக்கு கவலையில்லை.

நாம் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்று எமக்குத் தெரியும் நாம் பின்னர் அதனை பார்த்துக்கொள்வோம் என்றும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

புலிகளின் ஆட்பதிவுத் திணைக்களம் படையினர் வசம்

wanni_pic.jpgகடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் இரணைப்பளை பிரதேசத்தை கைப்பற்றிய படையினர் அங்கு புலிகளின் தலைவரினால் திறந்து வைக்கப்பட்ட தமிழீழ ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலமைக் காரியாலயத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆட்பதிவுதிணைக்களத்தை திறந்து வைத்த பிரபாகரன் முதலாவது அடையாள அட்டையை தானே உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கைப்ற்றப்பட்டுள்ள தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து வன்னி குடியிருப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் படையினர் பெற்றுள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி முதல் 50 ஆயிரம் சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை!

_mullai_1.jpgகடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த சனிக்கிழமை வரையில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இருந்து 50,000 சிவிலியன்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்து 1164 பொது மக்களோடு மொத்தம் 50 ஆயிரம் பொது மக்கள் கடந்த ஜனவரி முதல் வந்து சோந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவும் வைத்திய சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வருவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறினார். 

புதுமாத்தளன் பிரதேசத்தில் காயமுற்ற 494 பேர் நேற்று புல்மோட்டைக்கு அழைத்து வரப்பட்டனர்

navy_rescue_civil.jpgமுல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் இருதரப்பினரதும் தாக்குதலால் காயமடைந்த 494 பேர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் புல்மோட்டை இந்திய வைத்தியர்களின் சிகிச்சை முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சுமார் 4000க்கும் மேற்பட்டோர் புல்மோட்டைக்கும் திருகோணமலைக்கும் ஏற்கனவே அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் வவுனியா மெனிக்பாம் நலன்புரி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மூலம் 13 ஆவது முறையாக ஏற்றிவரப்பட்ட இக்குழுவில் 152 ஆண்களும் 216 பெண்களும் 126 சிறுவர்களும் அடங்கியிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் – “சண்டே ரைம்ஸ்’

pullmottaiindiadoctors1.jpgஇலங் கையின் வட, கிழக்கு கடற்கரையில் (முல்லைத்தீவு) காப்பாற்றப்படுவதற்காக காயமடைந்தோர் மத்தியில் ஆயிரக்கணக்கான அவயவங்களை இழந்தோர் காத்திருப்பதாக உதவி வழங்கும் அமைப்புகளை மேற்கோள் காட்டி “சண்டே ரைம்ஸ்’ சனிக்கிழமை தெரிவித்திருக்கிறது.  இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் குடும்பங்கள் ஷெல் தாக்குதல்களுக்கு  அஞ்சி புதுமாத்தளன் கடற்கரையில் வெளியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

அப்பகுதியிலிருந்து கடந்தவாரம் காயமடைந்த 460 பேரையும் அவர்களின் குடும்பத்தவர்களையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியேற்றியுள்ளது. இந்த நடவடிக்கைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசன்’ கப்பலுக்கு உள்ளூர் மீனவர்களின் மர டிங்கிப்படகுகள் மூலம் காயமடைந்தவர்கள் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டனர். காயமடைந்தவர்களை ஏற்றி வருவதற்காக சனிக்கிழமை இரவு மீண்டும் கப்பல் அப்பகுதிக்கு திரும்பிச் செல்லவிருந்தது.

“நிலமை மிகவும் கவலைக்கிடமானது. தேவையிலும் பார்க்க மிக குறைந்த மட்டத்திலேயே ஆட்களை வெளியே அப்புறப் படுத்தக் கூடியதாக உள்ளது. யார் அதிகளவு காயமடைந்தவர்கள், எவர் சிறியளவு காயமடைந்திருக்கிறார்கள் என்றும் நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது’ என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதி சோபி ரோமனன்ஸ் கூறியள்ளார்.

ஷெல், விமானத் தாக்குதல்களாலும் அல்லது மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் அல்லது உணவு, தண்ணீர் இல்லாமலும் பொதுமக்கள் பலியாவதாக உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன. அப்பகுதியிலிருந்த இறுதியான ஆஸ்பத்திரியும் மூடப்பட்டுவிட்டது.

புதுமாத்தளனில் ஒரேயொரு மருந்தகத்தில் மட்டுமே சிகிச்சையளிக்கப்படுகிறது. அங்கு காயமடைந்தவர்கள் தடித்த போர்வைகளில் கிடத்தப்பட்டுள்ளனர். மரக்கிளைகளில் கட்டப்பட்டு மருந்து ஏற்றப்படுகிறது. கடற்கரை வழியாக வெளியேற முயற்சிப்போர் தொகை கடந்த வாரம் அதிகரித்திருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

மோதல் பகுதியிலிருந்து வெளியேறிய பொதுமக்களில் சிலர் வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஹியூகஸ் ரொ போர்ட்ஸே அங்குள்ள ஒரேயொரு வெளிநாட்டு மருத்துவ நிபுணராவார். 960 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் ஷெல், நிலக்கண்ணி, துவக்குச்சூடு என்பவற்றால் காயமடைந்தவர்கள் என்றும் அவர் சண்டே ரைம்ஸுக்கு கூறியுள்ளார். மூன்று வயது பிள்ளை முதல் ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்து சிகிச்சையளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரணைப்பாலை முழுவதும் படையினரின் கட்டுப்பாட்டில்

army-s-l.jpgபுலிகளின் முக்கிய தளமாக விளங்கிய புதுக்குடியிருப்பு இரணைப்பாலை முழுவதையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார். இரணைப்பாலை கைப்பற்றப்பட்டதன் மூலம் புலிகளின் புலனாய்வுத்துறை தலைவரின் முக்கிய தளம், அந்தப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது இறுதி பிரதான நடவடிக்கைத் தலைமையகத்தையும் படையினர் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள பிரதேசத்தை முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது அவர்களை 25 சதுர கிலோ மீற்றர் பரப்புக்குள் வெற்றிகரமாக முடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பு ஏ-35 வீதியின் ஒன்றரை கிலோ மீற்றருக்கு மேற்பட்ட பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ள பாதுகாப்புப் படையினர் தற்பொழுது ஏ-35 பிரதான வீதியூடாகவும் எஞ்சியுள்ள பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மான், கடற் புலிகளின் தலைவர் சூசை ஆகியோர் உட்பட முக்கிய தலைவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டிருந்த அதி சொகுசுகளைக் கொண்ட வீடுகள், உட்பட பாதுகாப்பு அரண்களையும் படையினர் இங்கு கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் புலிகள் தங்களது அதி உயர்பாதுகாப்பு வலயங்களில் நன்றாக பயன்படுத்திவந்துள்ளதற்கான சகல தடயங்களும் காணப்படுவதாக வன்னி கள முனையிலுள்ள படை வீரர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசத்திலிருந்து செய்மதி தொலைத்தொடர்பு கருவிகள், அதி நவீன தொலைத் தொடர்பு உபகரணங்கள் உட்பட பல முக்கிய பொருட் களும், அதி சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ள படையினர் உழவு இயந்திரம், வான், கப் வண்டி உட்பட ஏழு வாகனங்களை படையினர் இந்த நடவடிக்கையின் போது நிர்மூழமாக்கியுள்ளனர்.

இரணைப்பாலை பிரதேசம் முழுவதையும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பலமுனைகளில் நடத்திய தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான புலிகள் கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.

புலிகளிடம் எஞ்சியுள்ள சிறிய பிரதேசத்தை முற்றாக விடுவிக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கைகளில் இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா ஆகியோர் தலைமையிலான மூன்று படைப் பிரிவுகளும் இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி கேர்ணல் ரவிப்பிரிய தலைமையிலான படையினரும் ஈடுபட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

ஆனந்த குமார சுவாமி நிவாரண கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பம்

_mullai_.jpgவன்னி யிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்கென வவுனியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிவாரணக் கிராமமான ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 849 குடும்பங்களைச் சேர்ந்த 3215 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். இக்கிராமத்துக்கு நேற்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி துரிதமாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

வவுனியாவுக்கு இதுவரை 40 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளதோடு அவர்கள் தாங்களாகவே சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நடவடிக்கை புதன் கிழமைக்கு முன் பூர்த்தி செய்யப்பட உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் புதன்கிழமை முதல் தாங்களாகவே சமைக்க உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா வந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது.

வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் அதிகளவான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்கள் என நாம் அறிகின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களில் மட்டும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை நான் சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்ட தூரம் நடைபவனியாக வந்து இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த உயர்மட்ட மகாநாட்டில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம், தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆனந்த குமார சுவாமி கிராமத்தில் உள்ள சில நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க தேவையேற்படின் அவர்களை மன்னார் வைத்திய சாலைக்கு உடன் அனுப்பு வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை அங்கவீனமுற்ற வர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என்பனவற்றை யும் அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மக்களுக்கு இதன்போது குடிநீர் வசதி அளிப்பதற்கென 2 பவுசர்கள் வழங்க அரச சார்பற்ற நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மூன்றாவது நிவாரணக் கிராமம் அமைப் பதற்கான பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதோடு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் புதுக்குடியிருப்பு விரைவு

sb_diwarathnass.jpgபுதுக் குடியிருப்பு, புது மாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கென 44 வகையான விசேட மருந்துப் பொருட்களுடன் கிறீன்ஓஷியன் கப்பல் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

எம்பிசிலின் போன்ற என்டி பயோடிக் (நோய் முறிப்பு) மருந்துப் பொருட்கள் அடங்கிய பொதிகளுடன் நேற்று புறப்பட்டுச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மருந்துப் பொருட்களை புதுமாத்தளன் பகுதியில் இறக்கிய பின்னர் திரும்பிவரும் கிறீன்ஓஷியன் கப்பல் மீண்டும் அடுத்தவாரம் சுமார் 2000 லக்டோஜன் குழந்தைகள் பால்மா, 2000 என்கர் பிளஸ் வன் குழந்தைகள் பால்மா என்பவற்றுடன் மீண்டும் புதுமாத்தளன் பகுதிக்கு கப்பல் புறப்பட்டுச் செல்லும் என்றும் அத்தியாவ சிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண கூறினார்.

அத்துடன் ஏ-9வீதியூடாக 20 லொறிகளில் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் வியாழக்கிழமையன்று கொழும்பு வெலி சரை களஞ்சியசாலையிலிருந்து 20 லொறிகளும் புறப்படவுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லாத கோழித்தீன், மாட்டுத்தீவனம், அடங்கலான சுமார் 300 மெற்றிக் தொன் பொருட்கள் 20 லொறிகளில் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்தமுறை போன்றே யாழ். குடாநாட்டிலிருந்து இறால், கருவாடு, வெங்காயம் போன்ற பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளன. இவை யாழ். நாவற்குழி களஞ்சிய சாலையிலிருந்து கொண்டு வரப்படும்.

ஏ-9 வீதியூடாக யாழ். குடாநாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லல் மற்றும் யாழ். உற்பத்திப் பொருட்களை கொண்டுவருதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளமையையிட்டு யாழ். வர்த்தகர் சங்கம் வெகுவாக பாராட்டியுள்ளதுடன் தொடர்ந்தும் தமது சங்கம் அரசுக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளதாகவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

மகன் சார்லஸ் அந்தோணியுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரன்!

lankadisplaced.jpgஇலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் உள்ள முல்லைத்தீவு பகுதியை கைப்பற்ற சிங்கள ராணுவம் பல முனைகளிலும் தாக்குதல் நடத்தி முன்னேறியது. அங்குள்ள புதுக்குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது விட்டதாக ராணுவம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையே, விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இருப்பிடம் குறித்து அவ்வப்போது மாறுபட்ட தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், பிரபாகரன் புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பதாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது.

புதுக்குடியிருப்பு பகுதியில் பிரபாகரனையும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியையும் பார்த்ததாக, அங்கிருந்து வெளியேறி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ள மக்கள் தெரிவித்ததாக இலங்கை ராணுவம் கூறி உள்ளது