::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 90 முறைப்பாடுகள்

election_ballot_cast.jpgமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக  இதுவரை  90 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார். பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பாகவே கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் அடங்குகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து கடந்த 5 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் குறைந்தளவு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே பொலிஸ் தேர்தல் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இவை குறித்த துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றிருப்பதால் தேர்தல் தினத்திலும் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்

india-elc-2009.jpgஇந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 5 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மொத்தம் 124 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 5 வது கட்டமாக மே 13 ந்தேதி ஒரே நாளில் ஓட்டுப்பதிவு நடை பெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசிநாள். 25ஆம் தேதி மனுக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலை 3 மணி வரை மனுக்களை திரும்ப பெறலாம். அதன் பிறகு வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

5வது கட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு: தமிழ்நாடு 39, உத்தரபிரதேசம் 14 ,மேற்குவங்காளம் 11, பஞ்சாப் 9, உத்தரகாண்ட் 5, இமாச்சலபிரதேசம் 4, காஷ்மீர் 2, புதுச்சேரி 1, சண்டிகார் 1, மொத்தம் 86

வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்- 17 பேர் பலி

india-election.jpgஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை 77 வன்முறைச் சம்பவங்கள் பதிவு இனிவரும் தினங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை

caffe.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 77 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தலை கண்காணிப்பதற்கான கபே அமைப்பு தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

நாம் தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகளை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை 15 ஆம் திகதிவரை பதிந்தும் அவதானித்தும் வருகின்றோம். மொத்தமாக 77 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். இதில் கம்பஹா மாவட்டத்திலே அதிகூடியதான 32 முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டம் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நாம் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

இந்த 77 முறைப்பாட்டில் தாக்குதல் சம்பவங்கள் 54 ஆகவுள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் 3 இனையும் பதிவு செய்துள்ளோம். நாம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகமென அதிகளவான தகவலை பெற்றபோதும் எம்மால் இவ்விரண்டு தொடர்பில் முறையே 10 முறைப்பாடுகளையே எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.

தேர்தல் தொடர்பிலான பெரியளவான வன்முறைகள் 50% மானவைக்கு இரு பிரதான கட்சிகளே காரணமாகும். இந்நிலையில் இரு பிரதான கட்சித் தலைவர்களிடம் தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கபே கேட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் முதல்கட்ட வாக்களிப்பு இன்று

india-election.jpgபாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.

நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

முதல்கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் -பிரசாரம் இன்று ஓய்கிறது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு

india-election.jpgமக்களவை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடக்கும்  124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்த இடங்களில் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  ஏப்ரல் 16 முதல் மே 13ம் தேதி வரையில் ஐந்து கட்டமாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 124 தொகுதிகளில் 16ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மொத்தம் 1,715 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 122 பேர் பெண்கள். இந்த தொகுதிகளில்  தலைவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.  முதல் கட்டமாக, ஆந்திராவில் 22 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.சட்டீஸ்கரில் 11 தொகுதிகளிலும் ஒரிசாவில் 10, ஜார்கண்ட் 6, அசாமில் 3 தொகுதிகளிலும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதேபோல், மேகாலயாவில் 2 தொகுதிகளிலும் ஜம்மு&காஷ்மீர், அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒரு  தொகுதியிலும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   17 மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குபதிவு நடக்க உள்ள  124 தொகுதிகளில்  இன்று மாலை 5 மணியுடன்  பிரசாரம் முடிவடைகிறது.

ரணில் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மையானால் அவருடன் விவாதத்திற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் -ஐ.தே.க.

போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு நாட்டை காட்டிக் கொடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மீது ஜனாதிபதி சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் சவாலை மகிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டேயாக வேண்டுமென மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தான் தெரிவித்த குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் ஜனாதிபதி தயக்கம் காட்டாமல் மேல்மாகாண சபைத் தேர்தல் நடக்கவிருக்கும் இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் பகிரங்க விவாதத்திற்குரிய திகதியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவரின் சவாலை ஜனாதிபதி தைரியமிருந்தால் ஏற்று விவாதத்துக்கு முன்வரவேண்டுமென்று வலியுறுத்தினர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முதலில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க கூறியதாவது;

கடந்த வியாழக்கிழமை மத்திய கொழும்பில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில்; தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வாய்ப்பை ஜனாதிபதிக்குப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் அவர் போதிய ஆதாரங்களுடன் தன்னுடன் பகிரங்கமான விவாதத்துக்கு வரவேண்டுமென்று சவால் விடுத்தார். தனது சுயநல அரசியலை நோக்கமாகக் கொண்டு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி மக்களை தவறாக வழிநடத்தவே அரசும் ஜனாதிபதியும் முனைப்புக் காட்டி வருகின்றது.

தனியார் ஊடகங்கள் மௌனியாக்கப்பட்டிருப்பதோடு அரச ஊடகங்கள் 24 மணி நேரமும் ஐக்கிய தேசியக்கட்சி மீதும் ரணில் மீதும் சேறு பூசுவதையே பணியாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் வைத்தே பகிரங்க விவாதத்துக்கு ரணில் சவால் விடுத்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 47 இலட்சம் வாக்குகளை பெற்றவர் ரணில். நாட்டின் பிரதமராக பதவிவகித்தவர். இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றார். நாட்டின் மாற்றுத் தலைவராக காணப்படுகின்றார். சர்வதேசம் ஏற்றுக் கொண்ட தலைவராகக் கூடக் காணப்படுகின்றார். இத்தனை தகைமையும் கொண்டவருடன் பகிரங்க விவாதத்துக்கு வரமுடியாது என்று ஜனாதிபதி கூறுவாரானால் அது இயலாமையையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல் பொய்க்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்பதையே காட்டுகின்றது எனக் கேட்டுக் கொண்டார்.

விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு

election_ballot_cast.jpgமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பான விளம்பரப்பலகை மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் கடும் உத்தரவு பிறப்பித்து பொலிஸாருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில் :

சிறியளவிலான சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ள நிலையில் ஏனையவற்றை அகற்றுமாறும் அவர் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை கண்காணிப்பதற்கான மற்றுமொரு அமைப்பான தேசிய வாக்களிப்பு நிலையம் தேர்தல் வன்முறை தொடர்பில் 72 முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார். இவ்வாறான சம்பவங்களில் ஜே.வி.பி ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் கடத்தல் சம்பவங்கள் உள்ளடங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளுர் அதிகார சபைகள் சட்டமூலம் சிறுபான்மை மக்களுக்குப் பாதிப்பு

election_ballot_cast.jpgமாகாண சபைக்கான அதிகாரங்களை மேலும் குறைத்து சிறுபான்மை மக்களின் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்; அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளுர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலமானது தமிழ்ப் பேசும் மக்ளிடையே இன்றைய அரசு தொடர்பான நம்பிக்கையீனத்தை மேலும் வலுப்படுத்தும். அத்துடன்  இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பாராமுகத்தன்மை குறித்து சர்வதேசமும் சந்தேகக் கண்ணோடு நோக்கக் கூடிய ஒரு வாய்ப்பினை இந்தச் சட்ட மூலம் வழங்குமென புளொட் இயக்கத் தலைவர் ரீ. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ளதாவது, இன்றைய நெருக்கடியான கட்டத்திலும் இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பாக சர்வதேசம் உன்னிப்பாகத் தமது கவனத்தைச் செலுத்திக் கொணடிருக்கும் போதும் இலங்கை அரசாங்கம் இவ்வாறனதொரு சட்ட மூலத்தின் வாயிலாகக் தமிழ்பேசும் மக்களின் உள்ளுராட்சி பிரதிநிதித்துவத்தில் கைவைப்பது ஒரு காலோசிதமான செயலல்ல. அத்துடன் இன்று இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்து வரும் நிலையில் குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரங்களிலிருந்து மேலும் சிலவற்றைப் பிடிங்கியெடுப்பதானது அதிகாரப் பரவலாக்கத்தையே கேள்விக்குட்படுத்தி விடும். எதிர்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களை புதிய சட்ட மூலத்துக்கு அமைவாகவே அரசு நடத்தப் பார்க்கிறது.

இந்த அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்படுமானால் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் வாழக் கூடிய தமிழ் பேசும் மக்கள் தமது பிரதிநிதித்துவத்தில் அதிகளவில் இழப்புகளை எதிர்நோக்குவர். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களில் பெருன்பான்மை இன மக்களின் பிரதேசங்களை எல்லைப் புறமாகக் கொண்ட தமிழ்ப்பேசும் மக்களின் பிரதேசங்களும் அதே போன்று வவுனியா மாவட்டமும் பாதிக்கப்படுவதுடன் மலையகம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலுள்ள தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களின் உள்ளுராட்சி சபைகளில் சிறுபான்மை இனமக்கள் பிரதிநிதித்துவத்தில் பாரிய இழப்பை ஏற்படுத்துமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கம்பஹா, களுத்துறையில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகம்

caffe.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்காக கம்ஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :

மேல் மாகாண சபைத்தேர்தல் வன்முறை தொடர்பாக நாம் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் சனிக்கிழமை வரை நாம் மொத்தமாக 69 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் 54 சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்களாகும்.  தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக முறையே 10 முறைப்பாடுகளைப் பெற்ற அதேவேளை அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்றும் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் பெயர், விலாசம், என்பன மாற்றப்பட்டு பல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எவ்வளவு தொகை இவ்வாறு மேலதிக வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயவுள்ளோம் என்றார்.