ஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.
சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.
கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.
அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.
நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.