::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

தமிழர் பிரச்சினை குறித்து வாய் திறக்காத ஜெனரல் சரத் பொன்சேகாவின் கொள்கை பிரகடனம்

sarath-fonseka-election-poll.jpg2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று காலை 11.30 மணிக்கு கண்டி ஸ்ரீ புஷ்பாதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு என்பது பற்றியோ எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் வருமாறு

*இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. எனவேஇ முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடையச் செய்வதற்கு 17ஆவது திருத்த சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்று, 
* சுயாதீன தேர்தல் ஆணைக்குழு 
* சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு 
* சுயாதீன நீதிமன்ற ஆணைக்குழு 
* சுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்.

*நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர், அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக, கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கிப் பொதுத் தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

*ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6 மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன்.

*நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர், மக்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றக் கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தோடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.

*யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்து, மீள்குடியேற்றம் செய்து, தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வழிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன். அதேபோன்று பயங்கரவாத சந்தேக நபர்களாகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி, அவர்களுக்குப் புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

*முப்பது வருட யுத்த முடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவர்களைக் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.

*ஜனநாயக நாடொன்றில் அவசியமாகவுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன். பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து, நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாசாரத்தைக் கட்டியெழுப்பப் பாடுபடுவேன்.

* ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், நீதியானதும் நியாயமானதுமான தேர்தலைக் கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவன செய்வேன். தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.

* நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.

*கடந்த காலங்களிலிருந்து ஊழல், லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில், அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்.

இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன் வாசித்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியில் உப தலைவர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுண ரணதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டி – இலங்கை முற்போக்கு முன்னணியின் மனு நிராகரிப்பு

sri_election.jpgஇலங்கை யின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக ஜனவரி 26 இல் நடைபெறும் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 23 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதும் ஒருவருடைய வேட்பு மனு, தேர்தல்கள் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து 22 பேரே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நேற்று அறிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுக்காலை கொழும்பு இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது. நேற்றுக்காலை 9.00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட 18 கட்சிகள் மற்றும் 05 சுயாதீனக் கட்சிகளின் 23 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவின் முன்னிலையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

நேற்றுக்காலை 9.00 மணிக்கு ஆரம்பமான வேட்பு மனுத்தாக்கல் 11.00 மணிக்கு நிறைவடைந்ததையடுத்து 11.00 மணியிலிருந்து 11.30 மணிவரை வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைக்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆட்சேபனை சமர்ப்பிப்பு முடிவடைந்ததும் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் வெளியிட்டார். இதற்கிணங்க மூன்று வேட்பு மனுக்களுக்கெதிராக ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதிலொரு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஏனைய இரண்டு வேட்பு மனுக்களுக்கான ஆட்சேபனை மனு நிராகரிக்கப்பட்டது.

எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் வேட்பு மனு தொடர்பாக ஆட்சேப மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.  மேற்படி மனுக்களை சமர்ப்பித்தவர்களும் சரத் பொன்சேகா அமெரிக்கப் பிரஜையெனவும் இலங்கை பிரஜையல்லாத ஒருவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள க்கூடாதெனவும் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க மனுதாரர்கள் விரும்பினால் நீதிமன்றத்தில் இதனைத் தாக்கல் செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.

 இலங்கை முற்போக்கு முன்னணியின் வேட்பாளர் பீற்றர் நெல்சன் பெரேராவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கான காரணத்தைத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், ஒரு கட்சிக்கு இருவர் உரிமை கோரியுள்ளதாகவும் எனினும் அவ்விருவருமே அக்கட்சிக்கு உரித்துடையவர்களல்லர் எனவும் தெரிவித்தார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும்.

சிறிதுங்க ஜயசூரிய (ஐக்கிய சோசலிசக் கட்சி)
எம்.பி.தெமினிமுல்ல (ஒக்கொம வெஸியோ ஒக்கொம ரஜவரு அமைப்பு)
சரத் மனமேந்திர (நவ சிஹல உறுமய)
அச்சல அசோக்க சுரவீர (ஜாதிக சங்வர்தன பெரமுன)
புனாகொட தொன் பிரின்ஸ் சொலமன்
அநுர லியனகே (ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி)
பத்தரமுல்லே சீலரதன தேரர் (ஜனசெத பெரமுன)
ராஜபக்ஷ பேர்சி மஹிந்த (ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி)
விக்ரமபாஹு கருணாரத்ன (இடதுசாரி முன்னணி)
ஐ.எம்.இல்யாஸ் (சுயேச்சை)
விஜே டயஸ் (சோசலிச சமத்துவக் கட்சி)
கார்திஹேவா சரத் சந்திரலால் பொன்சேகா (புதிய ஜனநாயக முன்னணி)
சரத் கோன்கஹகே (ஐக்கிய தேசிய மாற்று முன்னணி)
கே.ஜீ.ஆர்.எல்.பெரேரா (எமது தேசிய முன்னணி)
மீரா மொஹிதீன் மொஹமட் முஸ்தபா (சுயேச்சை)
கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (சுயேச்சை)
டபிள்யூ.எம்.யூ.பி. விஜேகோன் (சுயேச்சை)
எம்.சீ.எம்.இஸ்மயில் (ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி)
ஹித்தக ஒஸ்வல்ட் அருண த சொய்ஸா (ருஹுணு ஜனதா பக்ஷய)
சனத் பின்னதுவ (தேசிய மக்கள் கட்சி)
எதுருகே சேனாரத்ன சில்வா (தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி)
சன்ன ஜானக சுகத்சிறி கமகே (ஐக்கிய இலங்கைஜனநாயக முன்னணி)
வேகட வித்தாரணகே மஹிமன் ரஞ்சித் (சுயேச்சை)

குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகள் இரத்து – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை

dayananda_disanayake.jpgநடைபெற வுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது குழப்பம் நிகழும் வாக்களிப்பு நிலையங்களின் வாக்குகளை இரத்து செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று கலை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவந்தத் தகவலை வெளியிட்டார்.

இரத்து செய்ய நேரிட்டால் மீண்டும் தேர்தல் நடத்த நேரிடும் என்றும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படுமாயின் பெறுபேறுகள் தாமதமடையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை விருப்பு வாக்குகளைத் தெரிவிப்பதற்காக புள்ளடி இடுவதற்குப் பதிலாக 1,2, 3 என இலக்கங்களைக் குறிப்பிட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும் புள்ளடியிட்டு ஒருவருக்கான விருப்பத்தை தெரிவித்திருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள்

sri_election.jpgஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் செயலகத்தில் இடம்பெற உள்ளது. எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காகக் கட்டுப்பணம் செலுத்த வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 23 வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். இதில் 18 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் 5 சுயேச்சை வேட்பாளர்களும் இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இம்முறையே கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 2005 தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு ராஜகிரிய தேர்தல் செயலக பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளதால் பொரளையில் இருந்து வெலிக்கடை பொலிஸ் நிலையம் வரையிலான வீதி மற்றும் டி. எஸ். சேனாநாயக்க சந்தி முதல் பாராளுமன்ற பாதையினூடாக வெலிக்கடை பொலிஸ் வரையிலான வீதி ஆகியவற்றில் இன்று காலை 9.00 மணி முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். இதேவேளை தேர்தல் செயலக பகுதியில் மேலதிக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக வேட்பாளர்கள் தமது பதாகைகள், சுவரொட்டிகள் என்பவற்றை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் சகல சுவரொட்டிகள் பதாகைகள் என்பன அகற்றப்பட உள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் செயலகம் கூறியது. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறித்த வேட்பாளருடன் மேலும் இருவருக்கு தேர்தல் செயலகத்துக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளருடன் மேலும் 10 விருந்தினர்களுக்கும் அங்கு வர அனுமதி கிடைக்கும்.

வேட்பு மனுக்கள் தொடர்பில் ஆட்சேபங்களை முன்வைக்க இன்று காலை 9.00 மணி முதல் 11.30 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சேபங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுகிறார். ஐ. தே. க.வும், ஜே. வி. பியும் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. புதிய ஜனநாயக முன்னணி சார்பாக சரத் பொன்சேகா போட்டியிடுகிறார்.

இது தவிர இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்ன, ஐ. தே. க மாற்று முன்னணி வேட்பாளராக சரத் கோங்கஹகே, ஐக்கிய சோசலிசக் கட்சி வேட்பாளராக சிறிதுங்க ஜயசூரிய, சோசலிச சமத்துவக் கட்சி சார்பாக விஜே டயஸ் அனைவரும் பிரஜைகள் அனைவரும் மன்னர்கள் கட்சி வேட்பாளராக எம். பி. தெமினி முல்ல, இலங்கை முற்போக்கு முன்னணி வேட்பாளராக ஜே. ஏ. பி. பீடர் நெல்சன் பெரேரா, புதிய சிஹல உருமய வேட்பாளராக சரத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி வேட்பாளராக அசல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி வேட்பாளராக ஜி. டி. பி. எஸ். ஏ. லியனகே, எமது தேசிய முன்னணி வேட்பாளராக கே. பி. ஆர். எல். பெரேரா, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக எம். சீ. எம். இஸ்மாயில், ருகுணு மக்கள் கட்சி சார்பாக அருண த சொய்சா, தேசிய முன்னணி சார்பாக சனத் பின்னதுவ, தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளராக சேனரத்ன சில்வா, ஜனசெத முன்னணி சார்பாக பத்தரமுள்ள சீலரத்ன தேரர், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக சன்ன ஜானக கமகேயும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

சுயேச்சையாக போட்டியிட 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

யாழ். மாவட்ட முன்னாள் எம்.பி., ஐ. எம். இலியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா, முன்னாள் ஐ. தே. க. எம்.பி, யு. பி. விஜேகோன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி, கே. சிவாஜிலிங்கம், டபிள்யு. வி. மஹிமன் ரஞ்சித் ஆகியோரே இவ்வாறு சுயேச்சையாக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

வேட்புமனுத் தாக்கலின் பின் கட்அவுட், போஸ்டர்கள் அகற்றும் நடவடிக்கை

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்அவுட்கள், பெனர்கள், போஸ்டர்கள் அனைத்தும் அகற்றப்படும் என சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபரும் சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளருமான நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

நாட்டிலுள்ள 432 பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரண்டு தொழிலாளர் வீதம் இணைக்க ப்பட்டு 864 தொழிலாளர்களின் உதவியுடன் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

தேர்தல் சட்டத்திற்கமைய வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து மேற்படி பெனர்கள், போஸ்டர்கள், கட்அவுட்கள் அகற்றப்படுதல் வேண்டும்.

மயோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டி

ballot-muthaffa.jpgஉயர் கல்வி பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட எம். எம். மயோன் முஸ்தபா தீர்மானித்து ள்ளார்.

சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச மக்களுக்கு தனது முடிவை அறிவிக்கும் கூட்டத்திலேயே மயோன் முஸ்தபா இந்த முடிவை தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு. தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சிவநேசதுரை சந்திரகாந்தன்

pilleyan_mahinda.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் மாற்றியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள அவர் மக்களை குழப்பும் வகையில் அவை செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டார். மேற்படி ஊடகங்கள் தங்களையும் குழப்பி மக்களையும் குழப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கு தமது கட்சி பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ் மக்கள் விடுதலை முன்னணி மாற்றிக் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கடந்த தினங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க வடக்கில் விசேட ஏற்பாடுகள்

vote.jpgஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் மீளக் குடியமர்த்தப்பட்ட மற்றும் நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏதுவாக விசேட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. இதற்கமைய 20 விசேட வாக்குச் சாவடிகளும் கொத்தணி வாக்குச் சாவடிகளும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார், முல்லைத்தீவு, வவு னியா மாவட்டங்களிலுள்ள வாக்கா ளர்களின் பெயர்ப்பட்டியல்களை அந் தந்த பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாக பார்வைக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட வுள்ளன. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களின் தேர்தல் நட வடிக்கைகள் குறித்து ஆராயவென நேற்று வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தலைமையில் விசேட கூட்டமொ ன்று நடைபெற்றது.

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்க ளுக்கு தற்காலிக ஆளடையாள அட்டையை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக ஆட்பதிவு திணைக்கள த்தின் அதிகாரிகள், தேர்தல் ஆணை யாளர் அலுவலக அதிகாரிகள், மாவ ட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர். துணுக்காய், மல்லாவி, ஜயபுரம், முழங்காவில் மற்றும் மன்னார் மாவட்டங்களில் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதி மக்களுக்கு சுமார் 20 வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற ஆலோசனையும் இக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படும் நிலையங்க ளுக்கு வெளியேயும், நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களுக்கு வாக்க ளிக்கும் விதத்தில் நிவாரணக் கிரா மங்களுக்கு வெளியேயும் கொத்தணி முறையிலான வாக்குச் சாவடிகள் அமைப்பது எனவும் முடிவு செய் யப்பட்டது. அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் அரச ஊழியர்களின் விபரங்களை சேகரிப்பது தொடர் பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தபால் மூல வாக் காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என தேர் தல் திணைக்களம் அறிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிக்க இருப்பவர்கள் முடியுமானவரை குறிப்பி ட்ட 17ஆம் திகதிக்கு முன்னதாக நேரகாலத்துடன் விண்ணப்பிக்குமாறு தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கவே ஐக்கிய தேசிய கட்சி – ஜே.வி.பி கூட்டு

dew.jpgஇலங்கை யின் ஜனநாயக விழுமியங்களை குழிதோண்டிப் புதைக்கவே ஐ.தே.க. – ஜே.வி.பி கூட்டு சரத் பொன்சேகாவைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான டியூ குணசேகர நேற்றுத் தெரிவித்தார். எந்த விதத்திலும் ஒத்துச் செல்ல முடியாத ஐ.தே.கவும், ஜே. வி. பியும் கூட்டுச் சேர்ந்திருப்பது ஜனநாயகத்தைப் பெற்றுத் தரவோ, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவோ அல்ல.

மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் வெளிநாட்டு சூழ்ச்சியாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஐ. ம. சு. முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டியூ குணசேகர தொடர்ந்தும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் முடிவுறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தொடக்கம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது வெளிநாடுகள் யுத்தத்தை நிறுத்தும்படி கடுமையாக அழுத்தம் கொடுத்தன. இருப்பினும் இந்த அழுத்தங்களுக்கு தலை சாய்க்காது எமது ஜனாதிபதி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினார். இந்த சமயத்தில் மூன்றாம் மண்டல நாடுகள் தான் எமக்கு பக்கபலமாக இருந்தன. மேற்குலக நாடுகள் எமக்கு உதவிகள் நல்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தல் வந்திருப்பதால் வோஷிங்டனின் இணக்கப்பாட்டுடன் சரத் பொன்சேகாவை எதிரணி அபேட்சகராக கொண்டு வந்துள்ளனர்.

இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் எதிர்கொள்ளுகின்ற மிக மோசமான அரசியல் சூழ்ச்சியே இது. வெளிநாட்டு சதியாளர்களின் தேவையை நிறைவேற்றவே ஐ. தே. க., ஜே. வி. பி. கூட்டு இந்த சூழ்ச்சியில் பங்காளியாகியுள்ளது. எதிரணி அபேட்சகர் இராணுவத்தில் 40 வருட காலம் சேவையாற்றியவர். அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அதனால் அவரது அரசியல் பிரவேசம் இந்நாட்டு ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாகும்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டத்தில் சரத் பொன்சேகா இராணுவத்திற்கு ஒரு இலட்சம் பேரைத் திரட்ட வேண்டும். முப்படைகளுக்கும் கட்டளை இடக்கூடிய அதிகாரம் தமக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இது அவரது உள்நோக்கத்தை நன்கு புலப்படுத்துகின்றது. இதனால் இந்நாட்டின் ஜனநாயக அரசியல் இராணுவ மயமாகக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பொன்சேகாவின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூற்று நகைப்புக்குரியது – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

msri-sens.jpgதாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.

சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர்  ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்