BRICS

BRICS

BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிப்பு..?

BRICS உறுப்புரிமைக்கான இலங்கை முன்வைத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

 

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட BRICS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துகொள்ளும் இலங்கையின் விருப்பத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், BRICS உறுப்பு நாடுகளில் உள்ள தரப்பினரிடம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 22, 24ஆம் திகதிகளில் ரஷ்யாவின் கசான் நகரில் BRICS உறுப்பு நாடுகளுடன் நடைபெற்ற மாநாட்டில் இலங்கைத் தூதுக்குழுவின் தலைவராக இருந்த வெளி விவகாரச் செயலர் அருணி விஜேவர்தன, இது தொடர்பில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.

 

புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள நாடுகளின் கோரிக்கைகளுக்கு BRICS உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

இலங்கை உட்பட பல நாடுகளின் BRICS உறுப்புரிமைக்கான எதிர்பார்க்கப்படும் கோரிக்கைகள், எதிர்காலத்தில் BRICS உறுப்பு நாடுகளால் பரிசீலிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அத்துடன், புதிய அபிவிருத்தி வங்கியில் (NDB) இணையும் இலங்கையின் எதிர்பார்ப்பு அதன் தலைவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இதேவேளை, BRICS அமைப்பில் இணைவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வரவேற்பதாக இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகமும் X வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளது.

 

இலங்கை உட்பட விண்ணப்பித்த பிற நாடுகளை உரிய காலத்தில் முழுமையான ஆலோசனை மற்றும் உடன்பாட்டுடன் BRICS பரிசீலிக்கும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து ரஷ்யா செல்லும் அனுர குமார தரப்பு !

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான குழு கசான் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு புதிய ஜனாதிபதி அநுரவும்  விருப்பத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த விஜயத்தின் மூலம் பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கசான் நகரில் எதிர்வரும் 22ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நடப்பு ஆண்டின் தலைமைத்துவத்தை வகிக்கும் இந்தியா  இலங்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த அழைப்புக்கு சாதகமாக பதிலளித்துள்ள வெளிவிவகார அமைச்சு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் அண்மைய கொழும்பு விஜயத்தின்போது, இலங்கையின் பிரிக்ஸ் உறுப்புரிமை அபிலாஷைகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட சந்திப்புகளின்போது கலந்துரையாடி இருந்தார்.

 

சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற முக்கிய உலகப் பொருளாதாரங்களை உள்ளடக்கிய அமைப்பில் இணைவதற்கான நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்திருந்த ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் தீர்மானத்தின் பிரகாரம் பிரிக்ஸ் அமைப்பில் இணையும் விருப்பத்தை ஜனாதிபதி அநுரவும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தார்.

இதற்கமைவாகவே இலங்கை பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 20ஆம் திகதி ரஷ்யாவிற்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் ஒரு முக்கிய அரசுகளுக்கிடையேயான அமைப்பாகவே பிரிக்ஸ் காணப்படுகிறது.

பிரிக்ஸ் அமைப்பு ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்காவை உள்ளடக்கியதாக இருந்த நிலையில் இதனை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய உறுப்பினர்களாக இலங்கை, ஈரான், எகிப்து, எதியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை இந்த ஆண்டில் இணைத்துக்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!

பாறாங்கல்லை தலையால் அடித்து உடைப்பது ஒன்றும் கெட்டித்தனமான காரியம் அல்ல. அப்படிச் செய்ய நினைப்பது முட்டாள்தனமானது. இந்த முட்டாள் தனத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் செய்து அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பதை நிரூபித்துச் சென்றனர். சாட்சிக் காரனின் காலில் வீழ்வதைக் காட்டிலும் சண்டைக்காரனின் காலில் வீழ்ந்து பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதே புத்திக் கூர்மையுடையவர்கள் செய்யக் கூடியது. இதில் நியாயம், நீதி, தர்மம் எல்லாம் எங்கட பக்கம் இருக்கு என்று கதை சொல்லிக் கொண்டிருக்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் அதனால் எந்தப் பிரயோசனமும் கிடையாது.

நாங்கள் இந்த ஹோமோ சப்பிபயன்ஸ் சப்பியன்ஸ் கள், எங்களுடைய முதாதையர்களை கொன்றொழித்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சார்ள்ஸ் டாவினின் ‘தக்கன பிழைக்கும்’ என்ற விதி இன்றைக்கும் மிகப்பொருத்தமானதே. சார்ள்ஸ் டார்வின் நியாயம் பிழைக்கும், நீதி பிழைக்கும், தர்மம் பிழைக்கும் என்றெல்லாம் ரீல் விடவில்லை. ‘செர்வைவல் ஒப் தி பிற்றஸ்ற்’ என்று தான் சொல்லி இருக்கின்றார். அந்தந்தச் சூழலில் தன்னை தக்கவைத்து இனவிருத்தி செய்யக் கூடிய இனங்களே தங்களை தக்க வைத்துக்கொள்ளும் என்பதே கூர்ப்புக் கொள்கை. இதனையே ‘ஆலமரமும் நாணல் புல்லும்’ கதையில் சிறு வயதில் படித்துக்கொண்டோம். அது தமிழர்களுக்கும் பொருந்தும் உக்ரேனியர்களுக்கும் பொருந்தும்.

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பின் பின்னணிக்கு வருவதற்கு முன் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பானது மிக மோசமானது. மிலேச்சத்தனமானது. அப்பாவி உக்ரைன் மக்களின் நாளாந்த வாழ்வியலைத் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பும் யுத்தமும் மிகப் பாரிய மனித அவலத்திற்கு இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. உக்ரைன் மக்களின் பக்கம் நீதி, நியாயம், தர்மம் எல்லாம் இருக்கின்றது. ஆனால் யுத்தம் தொடர்ந்தால் அவர்களைக் காப்பாற்ற எந்தக் கடவுளரும் வர மாட்டார்கள். உக்ரைனை உசுப்பி விடும் அமெரிக்கா – பிரித்தானியா உட்பட்ட நேட்டோ நாடுகளும் வரமாட்டார்கள். அவர்களால் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவையே நிறுத்த முடியவில்லை. தங்களுடைய எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில் ‘அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது’ போலாகிவிட்டது உக்ரைனுக்கு. இது ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல. இது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற யுத்தம். அதற்கு உக்ரைன் களப்பலியாகி உள்ளது.

பெப்பரவரி; 21: ரஷ்யாவின் ஆட்சித் தலைவர் விளாடிமீர் பூட்டின் மேற்குலகின் பின்னணியில் இருக்கும் உக்ரைனின் கிழக்குப் பிராந்திய பிரதேசங்களான டொனேற்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை தனிநாடாக அங்கீகரித்தார்.

பெப்பரவரி 22 ரஷ்ய மக்களுக்கு ஆற்றிய ஒரு மணிநேர நீண்ட தொலைக்காட்சி உரையில் டொனேற்ஸ்க் மக்கள் குடியரசு லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு ஆகியவற்றின் இறையான்மையை அங்கீகரிப்பதாக ரஷ்யத் தலைவர் அறிவிதார். அத்தோடு ரஷ்யாவுக்கு வெளியே நாட்டுப்படைகளை பயன்படுத்துவதற்கு ரஷ்ய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

பெப்ரவரி 23: உக்ரைன் நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தை அறிவித்தது.

பெப்ரவரி 24: ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்தன. பெப்ரவரி 16 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கும் என மேற்கு நாட்டு உளவு ஸ்தாபனங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருந்தன.அதற்கு ஒரு வாரம் களித்து ரஷ்யா தனது தாக்குதலை ஆரம்பித்தது. இதனை ஒரு விசேட இராணுவ நடவடிக்கையாக ரஷ்யா அறிவித்தது. உக்ரைன் மீது படையெடுப்பு அல்லது ஆக்கிரமிப்பு என்ற பதங்கள் தற்போது ரஷ்யாவில் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யா உக்ரை மீது படையெடுக்கும் என உக்ரைன் அரசோ உக்ரைன் மக்களோ எதிர்பார்க்கவில்லை. தங்களை மிரட்டுவதற்காகவே ரஷ்யா கடந்த எட்டு ஆண்டுகளாக தங்கள் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாகத் தெரிவித்து வந்தனர். ரஷ்யப் படைகள் உக்ரைனுள் நுழைவதற்கு சில தினங்கள் முன்பாகவும் உக்ரைனின் நாளாந்த வாழ்வு அவ்வளவு பதட்டத்துடன் காணப்படவில்லை. ஆனால் லண்டன், பாரிஸ், நியூயோர்க் நகரங்கள் மிகுந்த பதட்டத்துடனேயே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இந்நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சினைகளை சரிக்கட்டுவதற்கு அவர்களுக்கு உக்ரைன் மீது ரஷ்யப் படையெடுப்பு மிக வாய்ப்பானதாக அமைந்தது.

பிரித்தானிய பிரதமரின் வீட்டுக்கு வர்ணம் அடிக்க நிதியயை வழங்கியவருக்கு அரச ஒப்பந்தம் ஒன்று வழங்குவது பற்றியும் பேசப்பட்டு இருந்தது. அத்தோடு கோவிட் லொக் டவுன் காலத்தில் தனது உத்தியோக பூர்வ வாசஸ்தலமான நம்பர் ரென் டவுனிங் ஸ்ரீற்றில் 17 வரையான குடியும் கும்மாளமும் இடம்பெற்றிருந்தது. இதில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனும் கலந்துகொண்டிருந்தார். அதற்கு எதிரான விசாரணைகள் முடக்கி விடப்பட்டு பொறிஸ் ஜோன்சன் அம்பலப்பட்டு இருந்த சமயத்திலேயே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கப் போகின்றது என்ற துருப்புச் சீட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வீசி தன் இருப்பை தக்க வைத்துக்கொண்டார்.

அதே போல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனாலும் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றியை அவரால் தக்க வைக்க முடியாத நிலையில் இருந்தார். பொருளாதாரப் பிரச்சினைகள் அதனைத் தொடர்ந்து அவருக்கான அதரவும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் அடுத்த தேர்தலிலும் அவர் டொனால் ட்ரம்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் அவருக்கு இருந்தது. வழமையாக உள்நாட்டில் தங்கள் செல்வாக்குகள் சரியும் போது அதனை நிமிர்த்துவதற்கு அமெரிக்க, பிரித்தானிய தலைவர்களுக்கு ஒரு யுத்தம் தேவைப்படும். இத்தடவை இவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் பூட்டின் நல்ல வாய்ப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யாவுக்கு எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஜோ பைடனுக்கும் பொறிஸ் ஜோன்சனுக்கும் சுக்கிரன் உச்சத்தில்.

உலக இயக்கம் என்பது கள்ளன் – பொலிஸ் விளையாட்டுப் போன்று அவ்வளவு கருப்பு – வெள்ளை அளவுக்கு தெளிவான வேறுபாடுடையது அல்ல. இப்பொழுதெல்லாம் இந்த மேற்குலக ஆங்கில ஊடகங்களில் ரஷ்யாவை ‘பறையா ஸ்ரேற் – Pariah State’ என்ற அடைமொழியோடே அழைக்கின்றனர். ‘பறையா – Pariah’ என்பது தமிழில் இருந்து ஆங்கில மொழியால் தத்தெடுக்கப்பட்ட சொல். இந்தியாவில் தீண்டத்தகாதவர்களாகக் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சாதியயைக் குறிக்கின்ற இச்சொல்லையே இவர்கள் தங்களுக்கு எதிரானவர்களை கேவலப்படுத்தும் நோக்கத்தோடு பயன்படுத்துகின்றனர். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வெளியார் தீண்டத்தகாதோர் என்போரை குறிப்பிட்டு பயன்படுத்தப்படும் இச்சொல்லை தற்போது விளாடிமீர்பூட்டினுக்கும் ரஷ்ய அரசுக்கும் எதிராக மேற்குலகம் பிரச்சாரப்படுத்தி வருகின்றது. சாதியம் இன்னும் கொழுந்துவிட்டெரியும் தெற்காசியப் பிராந்தியத்தில் இவ்வாறான சாதிய அடைமொழிகள் குறிப்பிட்ட சமூகங்களின் மீதான அழுத்தங்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு மேலும் ஒடுக்குவதற்கே உதவியாக அமையும்.

இதுவரை யாரும் செய்யாத அநீதியை ரஷ்யா செய்துவிட்டது போன்று மேற்கு நாடுகளும் மேற்கு நாட்டு ஊடகங்களும் ஒப்பாரி வைக்கின்றன. உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முடிவுகளை மீறி தம் இஸ்டத்திற்கு எந்த நாட்டின் மீதும் படையெடுக்கலாம் எந்த நாட்டின் ஆட்சியையும் வீழ்த்தி தங்களுக்கு சாதகமான ஆட்சியை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தை உலகிற்கு வழங்கியதே அமெரிக்காவும் பிரித்தானியாவும் இவற்றினது ஜால்ரா கோஸ்டியும் தான். ஈராக், அப்கானிஸ்தான், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் இந்த மேற்கு நாடுகள் புரிந்த யுத்தக் குற்றங்கள் பல லட்சங்கள், கோடிகள். இவர்கள் தங்களது பிரச்சினை என்று வருகின்ற போது ஜனநாயகம் பற்றியோ மனித உரிமை பற்றியோ சுயாதீன ஊடகங்கள் பற்றியோ மூச்சுவிடுவதில்லை. ஈராக் யுத்தத்திற்கு எதிராக ஒரு மில்லியன் பிரித்தானியர்கள் வீதியில் இறங்கிப் போராடினர். மேற்குலக யுத்த வெறியர்களான ஜோர்ஜ் புஷ்சோ ரொனி பிளேயரோ அதற்கு செவிசாய்க்கவில்லை. இவர்களின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்திய எட்வேர்ட் சுனோடன், யூலியன் அசான்ஜ் ஆகியோரை பிரித்தானியாவும் அமெரிக்காவும் அவர்களுக்கு மரணத்தை வழங்கத் துடித்துக்கொண்டுள்ளனர். எதற்காக? குவான்டனாமோ பேயிலும் ஈராக்கிலும் சிறைக்கைதிகளை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்திய தகவல்களை அம்பலப்படுத்தியதற்காக.

ஆனால் இப்போது எந்தவொரு ஜனநாயக நாடும் இன்னொரு நாட்டின் மீது படையெடுக்குமா? மனித உரிமைகள் மீறப்படுகின்றது யுத்தக் குற்றங்கள் நிகழ்கின்றது, ஊடக சுதந்திரம் இல்லை என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் உக்ரேனியர்களின் கைகளில் ஆயதங்களைக் குவிக்கின்றனர். அதனை மேற்கு நாட்டு ஊடகங்கள் கொண்டாடுகின்றனர். சாதாரணர்களின் கைகளில் சக்தி வாய்ந்த ஆயதங்கள் வழங்கப்படுவதன் மூலம் இவ்வாயுதங்கள் தகாதவர்களின் காடையர்களின் கைகளையும் அடைந்துள்ளது. அங்கு களவு, கொள்ளை, தனிப்பட்ட பழிவாங்கல்களிலும் இவ்வாயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் சில வாரங்களில் உக்ரைன் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் வாரி வழங்கப்பட்ட இந்த ஆயதங்களும் மேற்குலகம் அங்கு தொடர்ச்சியாக விநியோகிக்கும் ஆயதங்களும் உக்ரைனின் எதிர்காலத்தை இருளாக்கும் என்பது மட்டும் உறுதியாகி வருகின்றது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை இவ்வாறு யுத்த மூலம் வன்முறையால் தீர்க்கப்பட முடியாதது. உக்ரைன் ரஷ்யாவோடு நல்லுறவாக இருந்த காலப்பகுதியில் மட்டுமே உக்ரைனால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடிந்தது. 50 மில்லியன் மக்களைக் கொண்ட உக்ரைனில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 வீதமாக உள்ளது. இளம்தலைமுறையினரால் முந்தைய தலைமுறையினரை பராமரிப்பதற்கான செலவை (வரியை) ஈட்ட முடியவில்லை. இளம் தலைமுறையினர் உக்ரைனை விட்டு வேகமாக வெளியேறி வருக்னிறனர். இவர்களது முதலாவது இலக்காக ரஷ்யாவே இருக்கின்றது. மேலும் உக்ரைனின் 17 வீதமானவர்கள் ரஷ்யர்கள்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பானது மிகத்தவறான அணுகுமுறையே. ஆனாலும் அந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மீது வைக்கின்ற எந்தவொரு அருகதையும் மேற்கு நாட்டு தலைமைகளுக்கு கிடையாது. இவர்கள் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வரும் அடாவடித்தனங்கள் விளாடிமீர்பூட்டினது அடாவடித்தனங்களிலும் பார்க்க எவ்விதத்திலும் குறைந்தது அல்ல. உண்மையில் சொல்லப் போனால் மேற்கு நாட்டு தலைமைகள் மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் அராஜகங்கள் விளாடிமீர்பூட்டினைக் காட்டிலும் மோசமானது. இந்த மேற்கு நாட்டு தலைமைகளின் பூரண ஆதரவுடனேயே இஸ்ரேல் பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கின்றனர். சவுதிய அராபிய யேர்மன் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டை சின்னாபின்னாமாக்கி வருகின்றது. பர்மிய அரசு ரொஹிஞ்சா மக்களைக் கொன்றொழித்த போது இந்த மேற்கு நாட்டு அரசுகள் எல்லாம் பர்மிய அரசோடு வியாபாரத்தில் ஈடுபட்டுத்தானே இருந்தனர். இப்போது உக்ரைன் மீது தாக்குதல் நடப்பதற்கு முன்னமே இந்த நேட்டோ அணிகள் உரு வந்தது போல் ஜிங்கு ஜிங்கு என்று ஆடுகிறார்கள்.

சோழியன் குடுமி சும்மா ஆடுமா? 1949 இல் 12 நாடுகள்: அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லண்ட், இத்தாலி, லக்ஸ்சம்பேர்க், நெதர்லாந், நோர்வே போரத்துக்கல் ஆகியன இணைந்து நேட்டோவை உருவாக்கின. 1997 இல் இந்த நேட்டோ விஸ்தரிப்பு ரஷ்யாவின் எல்லையை நெருங்கியது. ஹங்கேரி, செக் ரிபப்ளிக், போலந்த், பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவெனியா, ரொமேனியா, சுலொவேனியா, அல்பானியா, குரொவேசியா ஆகிய ரஷ்யாவின் எல்லை நாடுகள் அல்லது எல்லையை அண்மித்த நாடுகள் நேட்டோவோடு இணைக்கப்பட்டு நேட்டோ விஸ்தரிக்கப்பட்டது.

இந்நாடுகள் சுதந்திரமான இறைமையுள்ள நாடுகள் தான். தாங்கள் யாராடு இணையலாம் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்நாடுகளுக்கு உள்ளது என்பது உண்மையே. அப்படியானால் அமெரிக்காவுக்கு அருகில் இருக்கும் ரஷ்ய சார்பான கியூபாவில் ரஷ்யா ஏன் படைத்தளத்தை உருவாக்க முமயாது. ரஷ்யாவின் நட்பு நாடான லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் ரஷ்யா ஏன் தனது இராணுவத்தளத்தை நிறுவ முடியாது. நேட்டோ அணிகள் அதனை அனுமதிக்கத் தயாரா. இந்த விடயத்தில் சீனா மிகத் தெளிவாக அறிவித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புப் பற்றிய ரஷ்யாவின் விசனத்தில் நியாயம் இருப்பதை சீனா வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளது. நேட்டோவின் பொருளாதாரத் தடைகளை தாங்கள் பின்பற்றப் போவதில்லை என்பதோடு ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளை சீனா வலுப்படுத்தி உள்ளது. இந்தியாவும் தாங்கள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மேற்கு நாடுகளின் சர்வதேச ரவுடித்தனத்திற்கு ரஷ்ய – உக்ரைன் (நேட்டோ) மோதல் முடிவு கட்டும். இதுவரை சர்வதேச வர்த்தகம் டொலரிலேயே இடம்பெற்று வந்ததால் அமெரிக்கா யார் மீதும் பொருளாதார தடையைக் கொண்டுவந்து ஆட்டிப்படைக்கலாம் என நினைக்கின்றது. ஆனால் எதிர்காலத்தில் அதற்கு மாற்றீடாக சீனா தனது நாணயத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கும். அதன் முதல் எத்தனிப்பு ரஷ்யா – சீனா வர்த்தகமாக அமையும். BRICS – பிரிக்ஸ் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா நாடுகள் தங்கள் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதன் மூலமும் விஸ்தரிப்பதன் மூலமும் உலக சந்தையை இவர்களால் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இன்று மேற்கு நாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவுடனான தங்கள் உறவை நான் முந்தி நீ முந்தி என்று துண்டித்து வருகின்றன. இதுவொன்றும் உக்ரைன் மக்கள் மீதான அனுதாபத்தில் கிடையாது. எங்கே தங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் நிறுவனத்தின் பெயர் பாதிக்கப்பட்டால் பின் தங்களுடைய நிலைமை அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாகிவிடக்கூடாது என்ற ஒரு தற்காப்பு உத்தியே. புpரச்சினைகள் மெல்லத் தணிய கள்ளக் காதலியிடம் போவது போல் சத்தமில்லாமல் மீண்டும் போய் கடைவிரித்து விடுவார்கள். இந்நிறுவனங்களால் ரஷ்யாவுக்கு எவ்வளவு பெரிய நன்மைகள் கிடையாது. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் ரஷ்யாவின் நடுத்தர வர்க்கத்தை குஷிப்படுத்தும் பொருட்களையே விற்பனை செய்கின்றன. ஒரு வகையில் ரஷ்யாவின் செல்வத்தை இவர்கள் வெளியே கொண்டு செல்கின்றனர். ஆனால் இதற்கு மாற்றீடான பொருட்கள் ரஷ்யாவிலோ ஆசியாவிலோ உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ரஷ்யா எரிவாயுவை பெற்றோலை நிறுத்தினால் நேட்டோ அணி நாடுகளில் அடுப்பு எரிப்பதே போராட்டமாகும். இதுவரை மின்சாரத்திற்கும் எரிவாயுவிற்கும் காலாண்டுக்கு 300 பவுண்கள் செலுத்தி வந்தனான் இப்போது மாதத்திற்கு 300 பவுண்கள் செலுத்த வேண்டியுள்ளது. ஈராண்டுகளுக்கு முன் பெற்றோலுக்கு லீற்றருக்கு ஒரு பவுண் செலுத்தியது இன்னும் சில மாதங்களில் லீற்றருக்கு இரு பவுண்களாகிவிடும் அபாயம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ரஷ்யாவில் ஏற்பட்ட வறட்சியால் கோதுமை விலையேறி பாணிண் விலையேறியது. உலகின் பாண் கூடையாக கருதப்படுவது ரஷ்யாவும் உக்ரைனும். இவர்களே 30 வீதமான கோதுமையை உலகிற்கு வழங்குகின்றனர். ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்ததாக பெரிய நாடு உக்ரைன் அதுவும் இப்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
நேட்டோ அணிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் நாளை நெருங்கிக் கொண்டுள்ளனர். இன்றைய வரைக்கும் ஈரானோடும் வெனிசுவெலாவோடும் வம்பிளித்துக்கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது ஈரானிடமும் வெனிசுவெலாவிடமும் மடிப்பிச்சைக்கு போய் நிற்கப் போகின்றனர். பெற்றோல் பிச்சை.

மூக்குக்கு அணியும் மாக்ஸ், வைத்தியர்களுக்கான பாதுகாப்பு கவசம் இல்லாமல் தங்கள் சொந்த மக்களையே ஆயிரக்கணக்கில் மரணிக்க விட்டவர்கள் இன்றும் நூற்றுக்கணக்கில் மரணித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அக்கறையற்றவர்கள் லாபத்தை மட்டுமே சுவாசிக்க விரும்பும் இந்த முதலைகளின் நீலக்கண்ணீரில் மயங்காமல் உக்ரைன், ரஷ்யாவோடு உடன்பாட்டை எட்டுவது அல்லது சரணடைவதே அறிவுபூர்வமானது!