நீதியமைச்சர் அலி சப்ரி

நீதியமைச்சர் அலி சப்ரி

“ஐ.நா மனித உரிமை அமர்வில் நாங்கள் உண்மையை தெரிவிப்போம் .” – நீதியமைச்சர் அலி சப்ரி

“காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது..” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில்  “மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை அமர்விற்காக அரசாங்கம் எவ்வாறு தயாராகின்றது? அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார். மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

பதில்- பயங்கரவாத மோதலின் இறுதியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் -முக்கியமான விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். காயங்களை எவ்வாறு ஆற்றலாம். ஒருவருக்கு ஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு. சர்வதேச தரப்புதலையிடுவதற்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு நாங்கள் இவற்றை பயன்படுத்தவேண்டும்.
சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். காயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.

ஆகவே நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் மேலும் முன்னேறுவோம் என்பதை எங்களின் நிலைப்பாடு.
நாங்கள் உண்மையை தெரிவிப்போம்  – வடக்குகிழக்கில் பிரச்சினைகள் உள்ளன அவற்றிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன. பேண்தகு இலக்குகள் சாத்தியமாகியுள்ளன. ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரவுள்ளோம்.

நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டுவருகின்றோம்- நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியவில்லை.” என அவர் பதிலளித்துள்ளார்.

“பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.” – நீதியமைச்சர் அலி சப்ரி

பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் குழுக்களை அடையாளப்படுத்தி அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன.” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள போது ,
சமூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் திட்டங்களிற்கு எதிராகவும் சிலகுழுக்கள் தவறான தகவல்களை பரப்புகின்றன எனவும்  இந்த தவறான தகவல்கள் பொதுமக்களை பிழையாக வழிநடத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சு , கருத்து சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்வதை சகித்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ள அவர்,  இந்த குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கான சட்டசீர்திருத்தங்களை உருவாக்கிவருவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா,  சிங்கப்பூர்,  மலேசியா போன்ற நாடுகளில் இவ்வாறான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த சட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம் இலங்கையின் சூழமைவிற்கு பொருத்தமான சட்டமுறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுகிறார்” – நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள் கண்டனம் !

மரண நிர்வாகத்துறை செயற்பாடுகளில், நீதியமைச்சர் அலி சப்ரி நேரடியாகத் தலையிடுவதாகவும் அழுத்தம் கொடுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதிமன்ற வைத்திய நிறுவன வைத்தியர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில், எதிர்ப்பு  யோசனையையும் நிறைவேற்றி உள்ளதாக இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் தலைவர், நீதிமன்ற வைத்தியர் அசேல மென்டிஸின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கை நீதிமன்ற வைத்தியர்களால் முன்னெடுக்கப்படும் சுயாதீன மரண நிர்வாகச் செயற்பாடுகளில் தேவையற்ற  தலையீடு மற்றும், சுகாதார அமைச்சால் கொரோனா தொற்றாளர்களின் சடலங்களை அகற்றுவது குறித்து நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் தலைவருக்கு அழுத்தம் விடுக்கும் அமைச்சரின் செயற்பாட்டை, நீதிமன்ற வைத்திய நிறுவனத்தின் வைத்தியர்கள் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சர் அலி சப்ரியை அப்பதவியில் இருந்து உடனடியாகப் பதவி நீக்கி, கைதுசெய்ய வேண்டுமென உலபனே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். ‘ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இடமளிக்காது விட்டால், முஸ்லிம் இளைஞர்கள் கைகளில் ஆயுதங்களை எடுப்பர்’ என நீதியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இவரது இந்த அறிவிப்பானது பாரதூரமானது என்பதால், அமைச்சர் அலி சப்ரியை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்’ எனவும் சுமங்கள தேரர் கோரியுள்ளார்.

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” – நீதியமைச்சர் அலி சப்ரி

“கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பில் தற்போது கடும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள முஸ்லீம் சமூகத்தினர் ஜனசாக்கள் எரிப்பதை கண்டித்து தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலே இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“உலகில் இல்லாத ஒன்றை நாங்கள் கேட்கவில்லை. கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பது முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமான கோரிக்கையல்ல. உலகில் 195 நாடுகளில் தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கி இருக்கின்றது.

உலக சுகாதார ஸ்தாபனமும் அதனை அனுமதித்திருக்கின்றது. அதனடிப்படையிலேயே எந்த நிபந்தனையிலாவது அடக்கம் செய்ய கோருபவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை.

அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் வழங்கவேண்டும் என யாரும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவும் என தெரிவிப்பவர்கள் அதனை விஞ்ஞான அடிப்படையில் உறுதிப்படுத்தவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” – நீதியமைச்சர் அலி சப்ரி

“முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களின் ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் பேசும் போது,

உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம். இந்தவிடயத்தில் எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.  மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா ?என கேள்வி எழுப்பியுள்ளது.

தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது” எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீதியமைச்சர் ஊடகம் ஒன்றில் பேசும் போது “கொரோனாவால் இறந்து போகும் முஜ்லீம்களின் உடல்களை அரசு நிறுத்த வேணடும் என குறிப்பிட்டிருந்ததுடன் இது நிறுத்தப்படா விட்டால் முஸ்லீம் இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக மாற இடமுண்டு எனக்கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.