வேலுப்பிள்ளை பிரபாகரன்

வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கு ஏன் மூன்று வேறுபட்ட தினங்களில் நினைவேந்தல் !

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு இவ்வாண்டு மே 17, 18, 19 என வெவ்வேறு தினங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. 2009 மே 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்த செய்தியை 2009 மே 24 அன்று அதன் அன்றைய தலைவர் செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் அறிவித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் அடேல் பாலசிங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி இருந்தார். இச்செய்தியை அப்போதைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகமான ரிரின் தொலைக்காட்சியும் ஒளிபரப்பி இருந்தது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் 300 பில்லியன் டொலர் சொத்துக்களை வைத்திருந்தவர்கள் அதிலிருந்து ஆண்டுதோறும் 300 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிவந்தவர்கள் , தங்களிடம் உள்ள அசையும் அசையாத சொத்துக்கள் கேள்விக்கு உட்பட்டு விடும் என்பதால் வே பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்ற மாய விம்பத்தைக் கட்டினார்கள். இன்று ஈழத்தமிழ் சமூகத்தில் இருக்கின்ற தொழில் அதிபர்கள் என்று அறியப்படுகின்ற பெரும்பாலானவர்கள் உலகம் முழக்க கோடீஸ்வரர்களானது விடுதலைப் புலிகளின் பணத்தில் தான். இன்றும் தலைவர் வந்து கேட்டால் நாங்கள் கணக்குக் காட்டுவோம் எனச் சிலர் ரீல் விடுகின்றனர். பெரும்பாலனவர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் மறைவை அன்றே அறிவித்த போதும் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இன்று முப்பதிற்கும் மேற்பட்ட பிளவுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்குள் ஏற்பட்டுள்ளது. இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் நிகழ்ந்த மோசமான தவறாகவும் கருதப்படுகின்றது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த புலனாய்வுப் போராளி முல்லை மதி வருமாறு தெரிவிக்கின்றார்: “ப சிதம்பரத்தோடு கதைத்தபோது புலிகளையும் அதன் தலைமையையும் காப்பாற்றியிருக்க முடியும் அதற்கான அத்தனை வாய்ப்புக்களும் உள்ளதாகவே சிதம்பரம் சொன்னார். சிவசங்கர் மேனனும் அதையே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்த சிலரும் விடுதலைப்புலிகளை அழித்தே ஆகவேண்டும் என வெறிபிடித்த காங்கிரஸ் கட்சி கொள்கை வகுப்பாளர்கள் சிலரும் புலிகளை பரம விரோதிகளாக கருதிய இந்திய உளவுத்துறையின் ஒரு பகுதியினரும் விடுதலைப்புலிகளுக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் உருத்திரகுமாரன் போன்றவர்களும் குழப்பியடித்தனர்.

ஒரு படி கீழிறங்கி இனத்தை காப்பாற்ற விடாத சுயகொளரவம் தன்மானம் இறுதியில் நான் நீ என்ற வறட்டு வாதமாகி அழிவில் முடிந்தது என்பதே உண்மை. சோனியாவின் பெயரை அநியாயமாக பயன்படுத்துகிறார்கள். கருணாநிதியை விட சம்மந்தன் என்ற கொடியனே தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாட்டை முடக்கி வைத்திருந்தார்” எனக் குற்றம்சாட்டுகின்றார் முல்லை மதி.

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !

தலைவர் பிரபாகரனை கிட்லருக்கு நிகராக உவமித்த சட்டத்தரணி வைஷ்ணவியின் முட்டாள்தனம் !
தமிழர்களுடைய தலைவர் பெரியாரா? பிரபாகரனா? என்ற வாதமே குதர்க்கமானது. இருவருமே வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்த தலைவர்கள். பெரியார் தமிழ்நாட்டில்  சமூகத்தில் நிலவிய மூடத்தனங்களை கண்டித்து சமூக நீதிக்காக போராடிய தலைவர். மற்றையவர் இலங்கையில் தமிழ் மக்கள் தமது மரபுவழித் தாயகத்தில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய தலைவர்.
உலகமெங்கும் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களும் தமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் என ஏற்றுக் கொள்ளட்டும். இதற்கிடையில் பெரியார் எங்கே வந்தார். பெரியார் ஒரு சமூக நீதிப்போராளி. பிரபாகரன் ஒரு அரசியல்ப் போராளி. சீமான் போன்ற வங்குரோத்து, இனத் தூய்மை பேசும் வலதுசாரி பாசிச அரசியலை முன்னெடுக்கும் ஒரு போலியை அடையாளம் காண முடியாதளவிற்கு இலங்கையிலும் சரி புலத்திலும் சர் ஈழத்தமிழர்கள் அறிவிலிகளாக உள்ளனர் என்பது தான் வேதனை.
சட்டத்தரணி என்று கூறிக் கொள்ளும் வைஷ்ணவி சமீபத்தில் மெய்வெளி எனும் யுரீயூப் தளத்திற்கு கொடுத்த நேர்காணலில் அவர் உளறிய கருத்துக்கள் அபத்தம். “சட்டத்தின் முன் சகலரும் சமம்’’ என்ற அடிப்படையை கூட விளங்கிக் கொள்ளாத சட்டத்தரணியாக உள்ளார் என்பதே கவலைக்குரியதே.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறோ, உலக வரலாறோ சரியாகத் தெரியாத ஒரு சட்டத்தரணியாக வைஷ்ணவி விளங்குகிறார். ஈழத்து அரசியல் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் பற்றி உளறியதை விட ஜேர்மனியையும் கிட்லரையும் பற்றி உதிர்த்த கருத்துக்கள் மூடத்தனத்தின் உச்சம். கிட்லர் கொலகோஸ்ட் என்றழைக்கப்படும் 11 இலட்சம் யுதர்களை இனப்படுகொலை செய்த கொலையாளி. அவர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான  ரோமா மற்றும் சிந்தி (ஜிப்ஸிக்கள்) என அழைக்கப்படும் நாடோடி மக்கள், தன்னுடைய சொந்த இனமான ஜேர்மனிய இனத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள், ஆயிரக்கணக்கான போர்க்கைதிகள் என பலரையும் படுகொலை செய்த ஒரு சர்வாதிகாரி. கிட்லரை இன விடுதலைப் போராளி என தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டு பேசும் சட்டத்தரணி வைஷ்ணவி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் புறந்தள்ளப்பட வேண்டிய நபர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக கருத்துரைக்கும் மற்றும் வக்காலத்து வாங்கும் உரிமையை அந்த அமைப்பு யாரிடமும் கையளிக்க வில்லை. பாலியல் துஸ்பிரயோகி சீமானின் வளத்தளத்தை பின்பற்றும்
சேலை கட்டி, பூவும் பொட்டும் வைத்தால் தான் தமிழ் அடையாளத்தை பேணுவதாக வைஷ்ணவி காட்டிக் கொள்ள முற்பாடுகிறார். ஆடை மற்றும் ஆபரணம் அவரது தனிப்பட்ட உரிமை. ஆனால் பொதுவெளியில் ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனை கிட்லருக்கு நிகராக ஒப்பிட்டு சட்டத்தரணி பிரச்சாரம் செய்வதை ஈழத்தமிழர்கள் வன்மையாக கண்டிக்கின்றார்கள்.
ஜேர்மனியர்கள் கிட்லர் என்ற ஒரு சர்வாதிகாரியால் உலக சமுதாயத்தில் தலைகுனிந்து நின்றார்கள். கிட்லரின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு கோடிக்காண இழப்பீடுகள் கட்டினார்கள். தங்களுடைய சந்ததியினருக்கு கிட்லரின் காலத்தில் ஜேர்மனியில் நடந்த கொடூரங்களை பாடசாலைகளில் வரலாறாக சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடேல்ப்ஸ் கிட்லர் என்ற பெயரை வைப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது.
வைஷ்ணவிக்கு கிட்லர் தலைவராக இருக்கும் பெரியாரோ அல்லது பிரபாகரனோ தலைவராக இருக்க முடியாது. வைஷ்ணவி என்ற பெண்மணி ஒரு தொழில் முறை சட்டத்தரணி. ஈழத்தமிழர்களின் பிரதிநிதி இல்லை. அவர் தன்னுடைய தனிப்பட்ட விருப்புக்களை பொதுவெளியில் வெளியிடுவதற்கு உரிமை உண்டு. அதேசமயம் மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒரு நபர் ஒட்டுமொத்த இனம் சார்பில் தன்னைத்தானே பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு கருத்துக்களை முன்வைக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் தளபதி கிட்டு பெரியார் மற்றும் திராவிடம் குறித்த சொன்ன கருத்துக்களே இறுதியானவை. ஈழத்திற்கு சீமான் அழைக்கப்பட்ட போது பெரியார் பேரனாக வந்து சென்றார். சீமான் என்ற இயக்குநர் நாம் தமிழர் கட்சியாக பரிணமிக்கும் வரை கறுப்புச் சட்டை பெரியார் பேரனாகவே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியும். சீமான் முப்பாட்டன் முருக பக்தனாக அவதாரம் எடுத்த போது தேசியத் தலைவரும் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லை. ஆகவே வைஷ்ணவி சீமானை கூட தனது ஆதர்ஸ கதாநாயகனாக தலைவராக வரித்துக் கொள்ளட்டும்.
பெரியார் தலைவரா இல்லையா என சீமானுக்கு தேர்தலில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் புரிய வைப்பார்கள். இறுதியாக நடந்த ஈரோடு தேர்தலில் சீமான் கட்டுப்பணம் கூட திருப்ப எடுக்கவில்லை . குறைந்தபட்சம் வைஷ்ணவிக்கு தேர்தல் புரிந்தால் நல்லது.

துவாரகாவாக உயிர்த்தெழுந்தவர் கொல்லப்படும் அபாயம் ! புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வீரவணக்க அஞ்சலி !!

மே 18, 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்யும் வகையிலும், பிரபாகரனும் அவரது குடும்பமும் உயிரோடு இருக்கின்றார்கள் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் பிரபாகரனுக்கு வீர வணக்க அஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அஞ்சலி நிகழ்வு மக்களாலும் ஊடகங்களாலும் வரவேற்கப்பட்டால் துவராகாவாக மாறிய பெண் படுகொலை செய்யப்படுவார் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

வே பிரபாகரனின் இரத்த உறவான அவருடைய மூத்த சகோதரர் மனோகரன் வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இளவயதில் பிரபாகரன் இருந்த தோற்றத்திலேயே இருக்கும் மனோகரன் வேலுப்பிள்ளையின் மகன் கார்த்திக் மனோகரன் தனது சித்தப்பா வே பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கு அஞ்சலி செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களுக்கு பல்வேறு செவ்விகளை வழங்கிய காரத்திக் மனோகரன் ஈழத்தமிழ் மக்களுக்காக போராடிய தனது சிறிய தந்தையை அவமானப்படுத்தும் வகையிலும் மக்களிடம் பணத்தைக் கொள்ளையிடும் வகையிலும் கதைகளைப் பரப்பி வருவதால் இவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்கவே தாங்கள் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். கார்த்திக் மனோகரன் இந்த அஞ்சலி நிகழ்வை தான் தோன்றித்தனமாகச் செய்யவில்லை எனவும் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கும் அமையவே இந்த இறுதி அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே 18 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த செய்தியை தமிழ் ஊடகப் பரப்பில் தேசம்நெற்றே முதலில் உறுதிப்படுத்தி வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பில் தேசம் நெற் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயலாளராக இருந்த கே பி என்று அறியப்பட்ட குமரன் பத்மநாதனின் நேர்காணலையும் வெளியிட்டு இருந்தது. அவர் இச்செய்தியை சர்வதேச ஊடகங்களுக்கும் 48 மணி நேரங்களில் அறிவித்து இருந்தார். இச்செய்தி அன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான ரி.ரி.என் இலும் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அத்தொலைக்காட்சிக்கு பொறுப்பாக இருந்தவர் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் செயற்குழுவின் தலைவராக இருந்த எஸ் கருணைலிங்கம். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் செயற்பாட்டாளரான சுவிஸ் ரஞ்சனின் சகோதரர். இச்செய்தி வெளியிடப்பட்டதற்காக தங்களைப் புலிகளின் விசுவாசிகளாகக் காட்டிக்கொண்ட சிலர் அத்தொலைக்காட்சி நிறுவனத்தை தாக்கியும் இருந்தனர். அதன் பின் ரி.ரி.என்னும் பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கின்றார் என்று கும்பலோடு கோவிந்தாவாக ஜால்ரா அடித்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பதை முற்று முழுதாக உறுதிப்படுத்தினால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும் கொதித்தெழுவார்கள். பிரபாகரன் எப்படி இறந்தார்? இறுதி நேரத்தில் என்ன நடந்தது? என்ற கேள்விகளும் எழும். இலங்கை, இந்திய அரசுகள் மீது யுத்தக் குற்றங்களும் எழும் தமிழர்கள் மத்தியில் இந்தியா நெருங்க முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கும். இதற்காக பிரபாகரன் உயிரோடு தப்பித்துவிட்டார் என்ற வதந்தியை இந்திய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு கசிய விட்டனர். நெடுமாறன், காசி ஆனந்தன் போன்ற இந்திய உளவுப் பிரிவான ரோ வின் முகவர்கள் இதனைப் பரப்புவதில் முன்நிற்கின்றனர். இவர்கள் தான் இப்போது துவாரகா வந்துவிட்டார், பிரபாகரனும் வருகிறார். ஆனால் இம்முறை பிரபாகரன் இந்தியாவை எதிர்க்கமாட்டார் என்றெல்லாம் கட்டியம் கூறுகின்றார் காசி ஆனந்தன்.

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட புலிகளின் ஒரு பிரிவினர் தற்போது இந்திய உளவுத்துறையின் முகவர்களாக சுவிஸில் உள்ள பெண்ணை துவாரகாவாக மற்றியுள்ளனர். பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மக்கள் அவர் இனி வரமாட்டார் என்று நம்பினால் துவாரகா வேடம் போட்ட பெண் கொல்லப்பட்டு அவருடைய கதை முடிவுக்கு வந்துவிடும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் தற்போதைய வேடம் கலைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அம்பலப்படுத்தப்படுவார்கள் மேலும் இந்திய உளவுத்துறையும் அம்பலப்படுத்தப்படும் என்பதால் போலித் துவாரகா கொல்லப்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது நலன்களுக்காகத் தூண்டிவிட்டு தமிழ் – சிங்கள முரண்பாட்டை படுகொலைகளாக மாற்றியது இந்திய புலனாய்வுத்துறையான றோ. இந்திய புலனாய்வுத்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தமிழீழ விடுதலைப் புலிகள் விக்ரர் தலைமையில் அனுராதபுரம் படுகொலையை 1985இல் மேற்கொண்டனர். சிங்களக் கிராமங்கள் தாக்கியளிக்கப்பட்டதும் இதன் பின்னணியிலேயே. தாங்கள் சொன்னதைச் செய்ததைத் தொடர்ந்தே தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயதப் பயிற்சியை இந்தியா வழங்கியது. தமிழீழ விடுதலைப் போராட்டமே இந்திய நலன்களைப் பேணுவதற்கான போராட்டமாக மாறியது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய இந்தியா, 1987 இல் அமைதிப்படையாக இலங்கைக்குள் நூழைந்தது. புலிகளைக் குறைத்து மதிப்பிட்ட இந்தியாவும் இந்திய இராணுவமும் புலிகளிடம் வாங்கிக் கட்டியது.

அடிபட்டுக் கிடந்த இந்தியா தனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தது. பிரபாகரனிடம் எவ்வித அரசியல் பார்வையும் தெளிவும் இல்லாதது இந்தியாவுக்கு மிகச் சாதகமாக அமைந்தந்து. இலங்கை இராணுவத்தை குறைத்து மதிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் 2006இல் மாவிலாற்றை மூடி சண்டையை வலிந்து ஆரம்பித்து இலங்கை இராணுவத்திடம் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தனர். இதற்குப் பின்னணியில் இந்தியாவும் மேற்குலகமும் இணைந்து செயற்பட்டனர். ஒப்பிரேசன் பீக்கன் என்ற 2003இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்ட தாக்குதல் திட்டமே பின் மீள்திருத்தம் செய்யப்பட்டு 2006இல் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு அது முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

2008 பிற்பகுதிகளிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பிக்கொள்ள முடியாது என்ற நிலை உருவாகி விட்டது. விடுதலைப் புலிகள் சிறிய ரக மல்ரிபரல்கள் கொண்டு தாக்க இலங்கை இராணுவம் கனரக சக்தி வாய்ந்த மல்ரிபரல்களைக் கொண்டு வந்து புலிகளின் பாதுகாப்பு அரண்களைத் தகர்த்தது. ஒரு சில மணித்தியாலங்களே கட்டாய இராணுவப் பயிற்சி பெற்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விட்டில் புச்சிகளாக வன்னி மண்ணில் உயிரிழந்தனர். இந்த யுத்தம் தோல்வி அடையும் என்பதை 2008 முடிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். ஆனால் அவர்கள் புலிகள் அழிக்கப்பட்டால் தாங்கள் சுயாதீனமாக செயற்படலாம் என்பதால் இது பற்றி மௌனமாகவே இருந்தனர். அப்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்கே சிவாஜிலிங்கம் மட்டும் தான், இதனை தேசம்நெற் நேர்காணலூடாக 2009 ஜனவரியில் வெளிப்படுத்தினார். அதில் தமிழ் மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களுடைய ஆயதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து சரணடைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்று 2009 ஜனவரியில் வேண்டுகோள் விடுத்தனர். அச்சமயத்தில் பாரிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஆனால் பாரிய உயிரிழப்பொன்று ஏற்படப் போவதற்கான அறிகுறிகள் வெளித்தெரியத் தொடங்கிவிட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு அரசியல் பார்வையற்ற அரசியல் தெளிவற்ற ஒரு முட்டாள்தனமான இராணுவக் கட்டமைப்பாக இருந்தமையால்தான் சர்வதேசம் ‘உங்களை இப்படித்தான் தாக்கி அழிப்போம்’ என்று கால அட்டவணை போட்டு அவர்களுடைய கையில் திட்டத்தை ஒப்படைத்து விட்டு தாக்கி அழித்துள்ளனர். நிலைமை தங்களுக்கு சாதகமாகவில்லை என்பது தெரிந்திருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தை முட்டாள்தனமாகத் தொடர்ந்தனர். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மீண்டும் இந்திய அரசியல்வாதிகளை நம்பியதும் அவர்களுக்குப் பின்னிருந்த இந்திய புலனாய்வுத்துறையினரை கண்டுகொள்ளமல் இருந்ததும் தான். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குப் பிதில் பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் தமிழகத்தில் திமுகாவுக்குப் பதில் அம்மா ஜெயலலிதா அதிமுகா ஆட்சிக்கு வரும் என்றும் நம்பினர். அதனால் இந்தியத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் மே 16, 2009 வரை சரணடையாமல் யுத்தத்தை இழுத்துக் கொண்டிருந்தனர். இலங்கை அரசோ யுத்தத்தை ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏப்ரல் நடுப்பகுதியில் இந்தியத் தேர்தல் ஆரம்பிக்க முன்னரே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற இந்திய புலனாய்வுத்துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்கச் செயற்பட்டது.

இந்தப்பின்னணியில் நிகழ்த்தப்பட்டது தான் ஏப்ரலில் பிரபாகரன் இருந்த இடத்தை சுற்றிவளைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். இத்தாக்குதலிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் பிரபாகரனை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தனர். அச்சண்டையில் பிரபாகரன் உயிர் தப்பினார். அப்போது கூட அவர்கள் சரணடையும் முடிவை எடுத்திருந்தால் வன்னி யுத்தத்தில் 75 வீதமான உயிரிழப்பைத் தடுத்திருக்க முடியும். வைகோ, நெடுமாறன் போன்றவர்களின் கதைகளைக் கேட்டும் அசட்டுத்தனமான முட்டாள்தனமான நம்பிக்கையிலும் பாஜாகா வரும் ஜெயலலிதா அம்மா வருவார், அவர்கள் தங்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பினர். இறுதி யுத்தம் நாளுக்குநாள் இறுக இறுக குறுகிய நிலப்பரப்புக்குள் மக்களும் புலிகளும் தள்ளப்பட்டனர். இந்திய – இலங்கைப் புலனாய்வுத்துறையும் யுத்தத்தை இழுத்தடிக்காமல் முடிவுக்குக் கொண்டுவர என்ன விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர். ஏப்ரல் முதல் மே 18 வரையான ஆறு முதல் ஏழு வரையான வாரங்களிலேயே மிக மோசமான மனிதப் பேரவலம் நிகழ்ந்தது. இந்தப் பேரவலத்திற்குக் காரணம் பாஜாகா வும் ஜெயலலிதாவும் வந்து தங்களை மீட்பார்கள் என்ற நம்பிக்கையே.

மே 16 2009 தேர்தல் முடிவுகள் புலிகள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அவர்களுடைய எதிர்பார்ப்பில் மண் வீழ்ந்தது. அதனை அறிந்த சில மணி நேரங்களிலேயே தாங்கள் ஆயுதங்களை மௌனிக்கத் தயார் என்று தங்களுடைய தொடர்புகளுக்கு அறிவித்தனர். எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் நேரம் இருக்கவில்லை. வெறும் வாய்வார்த்தைகளை நம்பி சரணடைய வேண்டியதாயிற்று. குறைந்தது சில வாரங்களுக்கு முன் தங்கள் சரணடைவை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவித்து சரணடைந்திருந்தால் வரலாறு வேறு வதமாக அமைந்திருக்கும். சரணடைந்த முக்கிய தலைவர்கள், தளபதிகள், பிரபாகரன் குடும்பத்தினர் எவ்வித மனிதாபிமானமும் காட்டப்படாமல் படுகொலை செய்யப்பட்டனர். ஆட்டத்தை தொடக்கிய இந்தியா, அதனை முடித்தும் வைத்தது. இப்போது தனது அடுத்த ஆட்டத்திற்கு இந்தியா தயாராகிவிட்டது. ஆனால் நாம் இன்னமும் பாடம் கற்கவில்லை…

 

வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவை செயற்கை நுண்ணறிவின் (AI) ஊடாக வடிவமைத்துள்ளனர் – சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வி துவாரகாவை செயற்கை நுண்ணறிவின் (AI) ஊடாக வடிவமைத்துள்ளதாக சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள், இலங்கைக்கு அறிவித்துள்ளதாக டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தன்று, செயற்கை நுண்ணறிவின் ஊடாக வடிவமைக்கப்பட்ட துவாரகாவை, உயிருடன் இருப்பதை போன்று வெளிப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிய வருகின்றது.

மாவீரர் தினத்தன்று விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் சிறப்புரையாற்றுவது வழக்கம்.

இந்த காணொளியை பயன்படுத்தி நோர்வேயில் உள்ள சர்வதேச புலிகள் வலையமைப்பு வெளிநாடுகளில் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக நோர்வேயில் உள்ள மறைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறவினர்களின் சம்மதம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .

மேலும் நெடியவன் என்கிற பேரிம்பநாயகம், நோர்வேயில் இருந்து விடுதலைப் புலிகளை மீட்டெடுக்க பல தடவைகள் முயற்சித்த போதிலும் புலனாய்வு அமைப்புகள் அதனை முறியடிக்க முடிந்ததுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கினர் – மைத்திரிபால சிறிசேன

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிக்குகளே உருவாக்கியதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

1956 ஆம் ஆண்டு சுதந்திரக்கட்சியின் ஆட்சியில் சிங்கள மொழி அரசகரும மொழியாக்கப்பட்டது. இதற்கு வடக்கில் இருந்து எதிர்ப்புகள் வலுத்தன. சர்ச்சைகள் உருவாகின. அதன்பின்னர் தமிழ் மொழியும் அரச மொழியாக்கப்பட்டது.

பண்டாரநாயக்கா – செல்வநாயகம் (பண்டா – செல்வா) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது இன்று போலவே அன்றும் மகா சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பண்டாரநாயக்காவின் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இறுதியில் குறித்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார்.

மாறாக பண்டா – செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாக்கி இருக்க மாட்டார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

“தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிப்பிரச்சினைகளை தீர்க்கவே வேலுப்பிள்ளை பிரபாகரன் போராடினார்.” –  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச

“தமிழர் மத்தியில் காணப்பட்ட சாதிப்பிரச்சினைகளை தீர்க்கவே வேலுப்பிள்ளை பிரபாகரன் போராடினார்.” என   நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு தாம் அண்மையில் பயணம் செய்ததாகவும், இதன் போது அங்குள்ள மக்கள் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை தனிப்பட்ட ரீதியில் உணர்ந்து கொண்டதாகவும், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் மக்களும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வேறு நிலைப்பாடுகளில் இருக்கின்றனர்.  வடக்கில் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்ல. அவருக்கு முன் இருந்த சில தரப்பினரே அதனை ஆரம்பித்து வைத்தனர்.

அத்துடன், சிங்கள மக்களை கொலை செய்வதற்காக பிரபாகரன் பிறக்கவில்லை.  வடக்கில் காணப்பட்ட அதிகார பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே அவர் முன்வந்தார். வடக்கில் காணப்படும் சாதி பிரச்சினைகளே வளர்ந்து வரும் பிரச்சினையாகும்.  விஜயதாச ராஜபக்ச, அதனை இல்லாது செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

இதேவேளை, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை தாம் அறிந்திருந்தாலும், தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய செயற்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.