மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

அனுர தரப்பு பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் என்னை பாதுகாத்துக் கொள்வார்கள் – மகிந்த ராஜபக்ச

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

 

தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத்திற்கு வேறு வேலையில்லாமல் பல குற்றச்சாட்டு சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இவற்றினை செய்கின்றது.

 

பழைய கோப்புகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களை காலம் தாண்டி பயன்படுத்தி வரும் மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ​​அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் – மகிந்த ராஜபக்ச

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம்.ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள். இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்து வழங்கி எதிர்காலத்தில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

15 ஆவது இராணுவ வெற்றியை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மூன்று தசாப்தங்களாக இலங்கையை ஆக்கிரமித்திருந்த பிரிவினைவாத, பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 15 ஆண்டுகள் பூர்த்தியைடைந்துள்ளன.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு குழுவாக ஆரம்பமான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் பிரபல்யமான பயங்கரவாத அமைப்பாக எழுச்சிப் பெற்றது.

தற்கொலை மனித குண்டுதாரிகள் மற்றும் சிறுவர் படையணி என்பனவற்றை விடுதலை புலிகள் அமைப்பே உலகுக்கு அறிமுகம் செய்தது. தற்கொலை குண்டுகள் அடங்கிய சிறிய ரக படகுகள், இரவு நேரங்களில் தாக்குதல் நடத்த கூடிய இலகு விமானங்கள் உட்பட ஆயுதங்களை கொண்டு வரும் கப்பல்கள் என பலமான கட்டமைப்பில் புலிகள் அமைப்பு செயற்பட்டதை நினைவுகூற வேண்டும்.

இலங்கை மற்றும் இந்திய அரச தலைவர்கள் இருவர் உட்பட இலங்கையின் சிரேஷ்ட அரச தலைவர்கள் மற்றும் சிவில் மக்கள் உள்ளடங்களாக பலரை கொலை செய்த விடுதலை புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட பல்வேறு வழிகளில் அழைப்பு விடுத்தேன். சகல வழிகளை நிராகரித்து விடுதலைப் புலிகள் அமைப்பு தாக்குதலை தொடர்ந்ததால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் எதிர் தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள்.2009.05.18 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக இராணுவத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து 2009.05.19 ஆம் திகதி காலை வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

நான்காவது ஈழ போராட்டத்தை தோற்கடித்தது மாத்திரமல்ல விடுதலை புலிகள் அமைப்பில் பணயமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலட்சக்கணக்கான சிவில் பிரஜைகள் பாதுகாக்கப்பட்டார்கள்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அப்போதைய பாதுகாப்பு பாதுகாப்பு செயலாளர்,பாதுகாப்பு சபையின் பிரதானி,முப்படையின் தளபதிகள்,பொலிஸ்மா அதிபர்,சிவில் பாதுகாப்பு படையணியின் பிரதானிகள்,மற்றும் முப்படையினருக்கும்,நாட்டு மக்களுக்கும் முன்னாள் ஐந்தாவது நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி என்ற அடிப்படையில் கௌரவமளிக்கிறேன்.

யுத்தத்தின் கொடுமையான அனுபவங்கள் இல்லாத சூழலில் தற்போது வாழ்கிறோம். ஆகவே யுத்தம் பற்றி சிந்திக்க கூடாது என ஒருசிலர் குறிப்பிடுகிறார்கள்.இராணுவத்தின் வீரத்துக்கு உயரிய அந்தஸ்த்து வழங்கி நாட்டில் மீண்டும் யுத்தம் தோற்றம் பெறாத வகையில் நாட்டை நிர்வகிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் – பின்னணியில் ராஜபக்சக்கள் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக விரைவில் ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக, தற்போது அரசியல் ரீதியாக தோற்றுப்போயுள்ள ராஜபக்ச தரப்பினர் இதன் பின்னணியில் செயற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

 

ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை – மகிந்த ராஜபக்ச

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாமல் ராஜபக்ஷவுக்கு இன்னும் காலம் தேவை என, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று (07) , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்புகின்றேன். ஐக்கிய மக்கள் சக்தியினர் எந்த செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், எந்த பிரச்சினையும் இல்லை.

அவர்கள் 10 கூட்டணிகளை அமைத்தாலும் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்தனர் – நாடாளுமன்றத்தில் சாணக்கியன் குற்றச்சாட்டு!

மகிந்த ராஜபக்ஷவினர் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தேசிய ரீதியில் புகையிரத, அரச மற்றும் தனியார் பேரூந்து என ஒரு இணைந்த சேவையாக போக்குவரத்து திட்டமிடல் அமைய வேண்டும்.

 

மகிந்த ராஜபக்ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தேசிய கொள்கை இல்லாமையின் காரணமாக அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலை, அதிவேக புகையிரத போக்குவரத்து என்பன அம்பாந்தோட்டையில் அமைக்கப் பட்டமையினால் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு முறையான போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படவில்லை.

 

குருணாகல் மாவட்டத்தில் நாமல் ராஜபக்க்ஷ தேர்தலில் போட்டியிட்ட போதும் குருணாகல் மாவட்டத்தில் ஒரு அதிவேக நெடுஞ்சாலையினைக் கூட அமைக்கவில்லை.

 

மகிந்த ராஜபக்ஷவினர் எப்போதும் தமது மாவட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக 22 மில்லியன் மக்களின் வரிப்பணத்தினையும் வீணடித்து பல்வேறு அபிவிருத்திகளை அம்பாந்தோட்டையில் செய்துள்ளனர்.

 

தற்போது புகையிரத சேவைகளுக்கு மாத்திரமே பயண உத்தரவுச் சீட்டு (Warrant) வழங்கப்படுகின்றது. அதனை பேரூந்து சேவைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைககள் புனரமைக்கப்பட்டு அதில் பணி புரியும் ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக மாற்றுதல் வேண்டும். அத்துடன் இங்கு பணிபுரிந்து ஓய்வடைந்தவர்களுக்கும் உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படல் வேண்டும்” இவ்வாறு சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ கூட்டமைப்பினருக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது.” – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்யாமல், மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறை இழைத்து விட்டார் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும். இந்தக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டபோது, அவர்கள் முதன் முதலாக பிரபாகரன் முன்னிலையில் தான் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

 

உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ பெரிய தவறொன்றை இழைத்துவிட்டார். ஹிட்லர் இறந்தவுடன், அவரது நாஜி கட்சி இல்லாது போனது.பொல் போட் இறந்தபின்னர் அவரது காம்பூச்சியா கட்சி இல்லாமல் செய்யப்பட்டது.

சதாம் உசைன் இறந்தபோதும், முபாரக் இறந்தபோதும் அவர்களது அரசியல் கட்சிகள் இல்லாது செய்யப்பட்டன. ஆனால், எல்.ரி.ரி.ஈ. எனும் உலகிலேயே மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது அரசியல் கட்சியான ரி.என்.ஏ.வை நாம் தடை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு காண்பித்த இரக்கம் தான், இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு காரணமாக மாறியுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களின் குடியுரிமையை நீக்க நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அவசியம் – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பொருளாதார குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியும், நாடாளுமன்றின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

“நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதீப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலோ அல்லது மோசடியில் ஈடுபடுவதற்காகவோ நிதியை பயன்படுத்தினால் அதற்கு நிறைவேற்று அதிகாரம் பொறுப்புக்கூற வேண்டும்.

 

அந்தவகையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரம் கட்டுப்பட வேண்டும்.

 

எனவே, பொருளதார நெருக்கடிக்கு காரணமானர்கள் குறித்து தேவையேற்படின் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் உள்ளது.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறிழைத்துள்ளனர் என ஆணைக்குழு பரிந்துரைத்தால் அதனை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட நபர்களின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இல்லாது செய்ய முடியும்.

 

இதற்கான யோசனையை அமைச்சரவையின் அனுமதியுடன் நாடாளுமன்றித்திலும் முன்வைக்கலாம்.

 

அதனை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அவசியம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றேன் – சபையில் மகிந்த ராஜபக்ச

பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,

 

“கௌரவ பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதற்கு பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.

 

எனினும், குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக சேற்றின் மீது கை வைக்க தேவையா? அதனால், சேறு பூசுபவர்கள் கைகளில் சேறு உள்ளதை கூற விரும்புகிறேன்.

 

ஒருவருடைய உரிமையை அழிக்கப் பேசுபவர்கள் குறைந்தபட்சம் நாட்டு மக்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய செயற்பட்டிருக்க வேண்டும்

 

வரலாறு நெடுகிலும் மக்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தந்ததன் மூலம் எமது கடமையை நிறைவேற்றியுள்ளோம்.

 

எனவே, ஒழிக்க வேண்டும் என்று பேசுபவர்கள், ஒரு உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என் தெரிவித்தார்.

“புலிகளிடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பாதுகாத்ததும், துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான்” – விமலவீர திஸாநாயக்க

மகிந்தவின் புண்ணியத்தால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குகூட சுதந்திரமாக நடமாடமுடிகின்றது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

புலிகளும், ஜே.விபியினரும்தான் இந்நாட்டை சீரழித்தனர். ராஜபக்சக்கள்தான் இந்நாட்டை மீட்டெடுத்தனர். அபிவிருத்தியில் புரட்சி செய்தனர். எல்லா வீதிகளும் ‘காபட்’ இடப்பட்டு புனரமைக்கப்பட்டன. கிராமிய வீதிகள் புனரமைக்கப்பட்டன. அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்பட்டது. பாடசாலைகள் கட்டியெழுப்பட்டன. இப்படி ராஜபக்ச யுகத்தில்தான் நாட்டுக்கு பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றன. மஹிந்த ராஜபக்சவுக்கு முன் இருந்த தலைவர்கள் போரை முடிவுக்கு கொண்டுவரவில்லை.

 

எம்மை காப்பாற்றுவதற்கு எவரும் இருக்கவில்லை. கடவுளும் வரவில்லை.எமக்கு உயிர் தந்தது மஹிந்த ராஜபக்சதான். நாட்டை மீட்டெடுத்ததும் அவர்தான்.எனது கிராமத்தையும் பாதுகாத்து தந்தது மஹிந்ததான்.

அதனால் யார் என்ன கூறினாலும் நான் அவருக்கு சோரம்போவேன்.

தலதாமாளிகை தாக்கப்படும் போதும், எல்லை கிராமங்களில் தாக்குதல் நடக்கும்போதும் நாட்டை மீட்கயார் இருந்தது? அவ்வாறு மீட்ட மஹிந்த துரோகியா? எமக்கு மூச்சு தந்த ராஜபக்சக்கள் துரோகிகளா?

மரண பீதியுடன் வாழ்ந்தவர்களுக்கு உயிர் தந்த ராஜபக்சக்களை வீரர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் துரோகிகள் ஆக்கியுள்ளனர்.

 

போர் காலத்தில் இந்த வீரர்கள் எங்கிருந்தார்கள் என்றே தெரியவில்லை.ராஜபக்சக்களுக்கு நான் கடன்பட்டுள்ளேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோதும் நாட்டை மீட்டது ராஜபக்சக்கள்தான். கொரோனாவால் மக்கள் செத்து மடியும்போது மக்களை பாதுகாத்தது ராஜபக்சக்கள், இப்படியானவர்கள் துரோகிகளா? ராஜபக்சக்கள் இல்லாவிட்டால் நானும் ஈழத்தில்தான் வாழவேண்டி வந்திருக்கும்.

 

மஹிந்தவின் புண்ணியத்தால்தான் சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆணையிறவு, வவுனியா என எல்லா பகுதிகளிலும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனர். துப்பாக்கி ஏந்தி இருந்த வடக்கு சிறார்களுக்கு பேனை வழங்கியது மஹிந்த தான் என விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.