நாமல் ராஜபக்ச

நாமல் ராஜபக்ச

நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை ! நாமல் ராஜபக்ஷ 

நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை ! நாமல் ராஜபக்ஷ

 

பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறிவிட்டு வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக இளைஞர்களை கைதுசெய்ய பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பயன்படுத்துகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார்.

இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக விமர்சித்துள்ள அவர், இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். அரசாங்கம் அவர்களை ஏமாற்றியுள்ளது. எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

 

அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !

அச்சுறுத்தல்கள் அதிகமாகியுள்ளது – பாதுகாப்பு வழங்குமாறு கோருகின்றனர் பா.உ இராமநாதன் அர்ச்சுனாவும் நாமல் ராஜபக்சவும் !

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் செயற்படுவதற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே மாதிரியான கோரிக்கையை நாமல் ராஜபக்சவும் முன் வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் நாமல் ராஜபக்சவை குழிக்குள் அனுப்புவோம் என்று குறியதாக பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அதன் பொதுச் செயலாளர் சாகச காரியவாசம் தெரிவித்துள்ளார். அதனால் நாமல் ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பில் அர்ச்சுனா மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வலம்புரி ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தனது செயலாளர் தாக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நான் பொலிஸ் முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில் என்னுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியலில் நாடாளுமன்றம் செல்கிறார் நாமல்ராஜபக்ச !

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக நாமல் ராஜபக்ஷவை முன்மொழிய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமாரவின் பொறுப்பாகும் – நாமல் ராஜபக்ச

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பலர் முயற்சித்து வரும் சூழ்நிலையில், போரை முடிவுக்குக்கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவை பாதுகாக்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் பொறுப்பாகும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

இந்த நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும், தமது இலக்கை அடைவதற்கும் பலர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அதேபோல் உலகளவில் அடிப்படைவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிராதம் தலைதூக்கியுள்ளன.

இவற்றுக்கு எதிராகப் போராடி, போரை முடித்த தலைவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் கடப்பாடாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச்செய்து கொடுக்க வேண்டியதும் அரசின் பொறுப்பாகும். அதேவேளை, எமது அரசியல் முகாம் தான் இந்த நாட்டை அபிவிருத்தி செய்தது.

எனவே, நாட்டை வீழ்த்துவதற்குரிய குரோத அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை. உலகில் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்.

ராஜபக்சக்கள் சட்டவிரோதமாக எதையேனும் சேமித்து வைத்திருந்தால் அவற்றைக்கொண்டு வாருங்கள். அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அரசின் அறிவிப்பின் பெயரில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் பல குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – நாமல் ராஜபக்ச

எதிர்வரும் 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் மூலம் உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாப்பது போல்,கொழுந்து, விவசாயிகளின் மிளகு மற்றும் பால் ஆகியவற்றிற்கு நியாயமான மற்றும் நிலையான விலையை வழங்க நாங்கள் தெளிவாக பாடுபடுவோம் என்பதை நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

சிறு தேயிலை உரிமையாளர்களுக்கும் உர மானியம் வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஒரு திட்டத்துடன் வேலை செய்கிறோம்.

மேலும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன், எனது அன்பான தாய் தந்தையரே, அடுத்த 10 வருடங்களுக்குள் இலங்கையை ஆசியாவின் வளர்ந்த நாடாக மாற்றும் பொறுப்பை நிறைவேற்றுவோம்.

இக்கட்டான நேரத்தில், சவாலான காலக்கட்டத்தில், ஒரு குழுவுடன் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கை எடுத்தோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி மொட்டு சின்னத்திற்கு முன்னால் புள்ளிடியிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லுமாறு நான் உங்களை அழைக்கின்றேன்” என்றார்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் முன்னேற்றம் அடையும். மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

 

மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

 

கிழக்கு மாகாணம் எனது தந்தையின் காலத்திலேயே அதிகமான அபிவிருத்திகளை கண்டது தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகளைப் போன்று கிழக்கிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். எமது அரசாங்கத்தில் அதிவேக வீதிகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கொண்டுவரப்படும் என நான் உறுதியளிக்கின்றேன். இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்திகள் என்பன முன்னேற்றம் அடையும் இங்குள்ள விவசாயம் மீன்பிடி கைத்தொழில் என்பனவற்றிற்கு ஏற்றுமதி மூலம் உலக சந்தையில் தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 

எங்களுக்குத் தேவை இந்த நாட்டை அபிவிருத்தியுடைய நாட்டாக மாற்ற வேண்டும் என்பதே இங்குள்ள இளைஞர்களுக்கு பலமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

 

இங்குள்ள அரசியல்வாதிகள் இன மத ரீதியான பணிகளே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்படவுள்ள மாற்றத்தினை பற்றி பிழையான தகவல்கள் வழங்க முடியாது இவர்களுக்கான நல்ல ஒரு எதிர்காலத்தை என்னால் வழங்க முடியும் என உறுதி கூறுகின்றேன்.

 

இலங்கையிலுள்ள கலாச்சாரங்களை இங்குள்ள இளைஞர் யுவதிகளைப் பற்றி எவருமே சிந்திப்பதில்லை இலங்கையிலுள்ள கலாசாரங்களை பௌத்த கலாசாரத்துக்கு சமனாக கிழக்கு மாகாண கலாசாரங்களையும் என்னால் பாதுகாக்க முடியும். என உறுதி என உறுதி கூறுகின்றேன்.

 

வெளிநாடுகளுக்குச் செல்லும் இங்குள்ள இளைஞர்கள் ஏமாற்றப் படுகின்றனர். இதற்கான நிரந்தர தீர்வை என்னால் பெற்றுத் தர முடியும் கடந்த காலங்களில் மக்கள் கஷ்ட காலத்தை கடந்து வந்துள்ளதுடன் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களில் இனவாதம் மதவாதம் அதிகரிக்கின்றது. பிரிவினை உடைய அரசியலை நான் முன்னெடுப் பதில்லை நான் முடியுமா னவற்றை மட்டுமே கூறுவேன்.

 

இங்குள்ள உங்களுடைய திறமைகளை பாவித்து வெளிநாடுகளைப் போல் வியாபாரம் விவசாயம் என்பனவற்றில் முன்னேற்றமடைந்து தொழில்நுட்பத்துடன் கூறிய அறிவைப் பெற்று வீட்டுக்கு உதவுமாறு நான் அழைப்பு விடுகிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு புதிய தலைவர்கள் உருவாக வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

மட்டக்களப்பில் இருந்தும் தலைவர்கள் உருவாக வேண்டும் அதற்கு நான் உதவி செய்வேன். இது சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் உங்களிடம் வேண்டுகிறேன் . சிந்தனையுடைய இளைஞர்களை உங்களது எதிர்காலத்தை திட்டமிட அழைப்பு விடுக்கிறேன். என அவரது மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,கட்சி அமைப்பாளர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

சதித்திட்டம் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி கவிழ்க்கப்பட்டது – நாமல் ராஜபக்ச

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் சதித்திட்டம் ஊடாகவே வரிசை யுகம் ஏற்படுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிப்பேரணி சிலாபத்தில் இன்று இடம்பெற்றது.

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற பேரணியில் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பிரதேச மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த நாமல் ராஜபக்ஷ,

 

எந்தவொரு சவாலான சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டிக்கொடுத்ததில்லை. இளம் தலைமைத்துவமே இன்று இந்த நாட்டிற்கு தேவைப்படுகின்றது.

 

கோட்டாபய ஆட்சிக்காலத்தில் சதித்திட்டம் ஊடாகவே வரிசை யுகம் ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கமும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.

 

நாம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம். இந்த நாட்டின் தேசிய உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்போம். டிஜிட்டல் முறைமையினுடாக நாட்டின் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்.

 

நாட்டில் வரிசையுகம் ஏற்படுவதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரமுடியும்.

 

எமது அரசாங்கத்தில் முதல் 6 மாதங்களுக்குள் அரச சேவையினை டிஜிட்டல் மயப்படுத்துவோம் இதனூடாக மக்கள் இலகுவாக அரச சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

 

வரியினை குறைப்போம். அதேபோல் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே வரியினை நடைமுறைப்படுத்துவோம்.

 

விவசாயம் மீன்படி என அனைத்துதறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்துவோம் இன்று தேர்தல் மேடைகளில் பலர் சேறுபூசும் நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளனர். அதனால் எந்தவித பயனும் இல்லை” என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மேலும் தொிவித்தாா்.

நல்லூர் திருவிழா முடியும் வரை தேர்தல் பிரச்சாரம் யாழில் இல்லை – நாமல் ராஜபக்ச விளக்கம்!

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தேர்த்திருவிழா முடிவடையும் வரை தனது அரசியல் நடவடிக்கைகளிற்காக தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என நான் கருதுகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது- ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

குருணாகல் – கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற ரீதியில் நாங்கள் நாட்டுக்கு அபிவிருத்தி செய்துள்ளோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகரத்தை அபிவிருத்தி செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருமித்த பொருளாதார கொள்கையை நாங்கள் செயற்படுத்தினோம்.

 

மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது.

 

பிறிதொரு தரப்பினர் இராணுவத்தையும் கேலிக்கூத்தாக்கினார்கள். விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாத்த இராணுவத்தினர் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள். சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

 

உலக நாடுகளில் தற்போது இடம்பெறும் போரினால் சிவில் பிரஜைகள் கொல்லப்படுகிறார்கள். இதனை பற்றி எந்த நாடும் பேசுவதில்லை. நாங்கள் மனிதாபிமான கண்காணிப்புக்களை முன்னெடுத்தோம். தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

 

எமது அரசாங்கத்தின் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்போம். இராணுவத்தினர் இந்த நாட்டுக்கு செய்த சேவையை நாங்கள் நன்கு அறிவோம். ஆகவே அவர்களுக்கான புதிய நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்போம்.

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளுக்கமைய விவசாயத்துறையில் முன்னெடுத்த தவறான தீர்மானத்தால் இரண்டு போக விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய கொள்கையையே நான் செயற்படுத்துவேன்.

 

இறக்குமதி செய்து உணவளிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இல்லை. தேசிய உற்பத்திகளை சகல வழிகளிலும் மேம்படுத்த விசேட கொள்கை திட்டங்களை செயற்படுத்துவோம் என்றார்.

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது”- நாமல் ராஜபக்ச உறுதி !

“வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

இது குறித்து நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது” ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று, தேர்தல் நேரத்தில் ஆதாயம் பெறுவதற்காக நாங்கள் எங்கள் கொள்கைகளை மாற்றுவதில்லை.

 

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க முடியாது. வடக்கு கிழக்கையும் இணைக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாடு பிளவடையும் எனவே இந்த நாட்டை பிரிக்க நான் அனுமதிக்கமாட்டேன். வெளிப்படையாக அதனையே கூறுகிறேன்.

 

2015ம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி நிறுத்தப்பட்டது. ஆட்சியில் இருந்தது நல்லாட்சி அரசாங்கம்.

எனவே எங்கு நாட்டில் வளர்ச்சி தடைப்பட்டதோ அங்கிருந்து எனது பயணத்தை ஆரம்பிப்பேன். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது எமது பொறுப்பு” இவ்வாறு நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்