அரசியல் தீர்வு: எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ! தமிழரசுக் கட்சி முரண்பாடுகளை அடக்கி வாசித்தது !
நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் தாங்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுத் திட்டங்களையே முன்னெடுப்பதெனவும், உள்ளுராட்சித் தேர்தலில் முன்னர் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதெனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வழக்குகளை முடித்து வைப்பதெனவும் முடிவெடுக்கபட்டதாக கட்சியின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், வைத்தியர் ஸ்ரீநாத், சிறிநேசன், குகதாசன், கோடீஸ்வரன், ரவிகரன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், உறுப்பினர்கள் சயந்தன், பீற்றர் இளஞ்செழியன், யோகேஸ்வரன், சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய சந்திப்புக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ‘முன்வைத்த தீர்வுத் திட்டங்களை முன்கொண்டு செல்வோம்’ என தமிழரசுக் கட்சிப் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இதனை முன்னெடுத்துச் செல்ல ஏழு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இக்குழுவில் எம் ஏ சுமந்திரன், பா உ சிறிதரன் ஆகியோரும் உள்ளனர்.
கட்சிக்கு கட்டுப்படாது செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் மத்திய குழு கூட்ட முடிவில் இவைபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முரண்பாடுகளை அடக்கியே வாசித்தனர்.