சிவஞானம் சிறீதரன்

சிவஞானம் சிறீதரன்

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்
தமிழ்த்தேசிய அரசியலின் புதிய காவலனான எம்பி சிறிதரனின் அலுவலகம் மற்றும் கையாட்களின் காமக்களியாட்டங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன. சிறிதரனின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட வேழமாலிகிதனின் லீலைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் வாழும் கணவரின் அரசியல் தஞ்சத்திற்கு உதவியாக, கடிதம் கேட்டுச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பிரத்யேக கைத்தொலைபேசியிலிருந்து வட்ஸ்அப் ஊடாக படுக்கைக்கு அழைத்துள்ளார். வேழமாலிதனின் காம உரையாடல்கள் முகநூலில் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த வேழமாலிகிதன். அடியாட்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அஸிட் ஊற்றப்போவதாக மிரட்டியுள்ளார். சிறிதரன் எம்பியும் இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வேழமாலிதனின் கிளிநொச்சி பசுமைப் பூங்கா நிதி மோசடி, காணி அகரிப்பு, பாலியல் இலஞ்சம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ‘ஊழல் ஒழிப்பு வன்னி அணி’ என்ற முகநூல் கணக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட முகநூலை நடத்துவோரை தொடர்பு கொண்ட வேழமாலிதன். தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேழமாலிதனால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசம் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது மக்கள் வேழமாலிதன் பெண் பித்தர் என குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு அணி வன்னி முகநூலில் வேழமாலிதனும் அவரது கையாளும் மது போதையில் கைது செய்யப்பட்டு விடுதலையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வேழமாலிதன் மறுக்கிறார். சிறிதரனின் அரசியலுக்கு வேழமாலிதனால் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக சிறிதரன் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பா உ சிறிதரன் தன்னை தேசியத் தலைவரின் நிலையில் வைத்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். இவர் போர்த்தியுள்ள புலித்தோல் போர்த்த தேசியத்திற்குப் பின்னால் கள்ள மண் அகழ்வு, கள்ள மரம் கடத்துவது, கசிப்பு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற முடிச்சவிக்கிகள் மொள்ளமாரிகள் எல்லோரும் கூட்டிணைந்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்களை அதனை பராமரிக்கும் அமைப்புகளிடம் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிதி மற்றும் அரசியல் வியாபாரம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பா உ சிறிதரன் மீது வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிதரன் தனக்கு எதிரானவர்களுக்குத் துரோகிப்பட்டம் கட்டி தனது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மையில் உண்ணாவிரதம் இருந்த வனகுலராசாவை றோ ஏஜென்ட் என சிறிதரனின் ஊடகவியலாளர் பிரச்சாரம் செய்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் தற்போது முதற்தடவையாக சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசுக் கட்சிக் காரியாலயமும் ஒரு அந்தப்புரமாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தற்போது அம்பலமாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
https://www.facebook.com/share/v/12G4evzFruv/

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !.

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !

 

தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்தாவது, “எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற குழு கூட்டத்தின் திகதியை மாற்றிய அனுர அரசு – நன்றி கூறிய சிறீதரன் எம்.பி !

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.

26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.

தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?

எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.

ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.

மதுபானசாலைளுக்கு ஆதரவு வழங்கியதை நான் உறுதி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – சிறீதரன்

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

 

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

 

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

 

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

 

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

 

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு ஆகியோர் உள்ளனர் – சிறீதரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு செல்வது எனது வீட்டின் கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது. எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஏன் பொது வேட்பாளர் தேவை..? – சிவஞானம் சிறீதரன் விளக்கம் !

தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்துதான் அனைவரும் செயற்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கு பொது வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல.

வடக்கிலும் கிழக்கிலும் வாழுகின்ற தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகள் இந்த பொது வேட்பாளர் மூலம் உலகறியச் செய்யப்பட வேண்டும். தமிழர்கள் தங்களது பாரம்பரிய பூமியில் இறைமையோடு வாழ்ந்தவர்கள் அத்தோடு அவர்களுக்கு அவர்களது இறைமையை மீட்டுக்கொடுக்கும் வகையிலான சமஷ்டித் தீர்வினை இந்த பொது வேட்பாளர் முன்வைப்பார்.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான ஒருகளமாக நாங்கள் இந்த ஜனாதிபதி  தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கான ஆதரவைக் கேட்போம்.

எங்கள் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சர்வஜன வாக்கெடுப்பாகவே பொது வேட்பாளர் களமிறக்கப்படுவதைத் தமிழர்கள் பார்க்கின்றார்கள். தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக அல்ல துணை ஜனாதிபதியாக கூட தெரிவுசெய்யப்பட முடியாதென்பதை அறிந்தேதான் எல்லோரும் செயற்படுகின்றார்கள்.

இங்கு முக்கியமானது தமிழர்கள் தங்களது அபிலாஷைகளுக்கான அங்கீகாரத்தை இந்த பொது வேட்பாளர் மூலம் கோருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருட்டுத்தனமாக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் – யார் அனுமதி கொடுத்தது என சிறீதரன் கேள்வி!

யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் தினசரி சுண்ணக்கல் அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

நேற்று (18) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இதனை சிறீதரன் இதனைக் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்று மூடப்படமால் இருக்கின்றது.

ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன. இந்தநிலையில், தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடிய பார ஊர்திகளில் எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தினமும்10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் (கெண்டெயினர்களில்) கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியதா“ எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

இதேவேளை இதற்குப் பதிலளித்த புவிச் சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த மயூரன் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அநுரகுமார திஸாநாயக்கவின் பேச்சில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை – சிறீதரன் காட்டம் !

அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.சிறிதரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை (04) நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வட மாகாண மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, ‘எமக்கு வாக்களியுங்கள் என்றோ, 13 பிளஸ் தருகின்றோம் அல்லது சமஷ்டியை தருகின்றோம் – எமக்கு வாக்களியுங்கள் என்றோ கூறுவதற்காக நான் இங்கு வரிவல்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பிரதேச பேதங்களும், இன, மதபேதங்களுமின்றி நாம் அனைவரும் கூட்டு முயற்சியுடன் ஒன்றிணையவேண்டும். நாட்டை புதியதொரு பாதையில் கொண்டுசெல்லவேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிறுத்தி ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்’ என்று தெரிவித்தார்.

 

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்கவின் உரையில் தமிழர்களுக்கான நம்பிக்கை ஒளிக்கீற்று எதுவும் தென்படவில்லை எனவும், மாறாக, ஏனைய சிங்களத் தலைவர்களை விடவும் தமிழர் நலன்கள் தொடர்பான மிகக் குறைந்தளவிலான கரிசனையுடனேயே அவர் பேசியிருக்கின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

அதேபோன்று யுத்தம் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் சுமார் 40,000 இராணுவ வீரர்களை இணைத்தமை, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு, கிழக்கு இணைப்பை பிரிப்பதில் முன்னின்று செயற்பட்டமை, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதுகுறித்து குறைந்தபட்சம் அனுதாபம் கூட வெளியிடாமை போன்ற பல்வேறு பிரச்சினைக்குரிய விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்க தரப்பில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

அண்மைய காலங்களில் வட, கிழக்கு மாகாணங்களில் பௌத்த பிக்குகளின் பங்கேற்புடன் இடம்பெற்றுவரும் அத்துமீறல்கள் தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஒருமுறைகூட கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், இன மதவாதமற்ற, அனைத்து மக்களுக்குமான சிறந்த தலைவர் என்ற ரீதியில் அநுரகுமார திஸாநாயக்க முதலில் தன்னை முன்னிலைப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும், 13 ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி முறையிலான தீர்வு குறித்து எவ்வித உத்தரவாதத்தையும் வழங்குவதற்கு தான் வரவில்லை என்று கூறுபவருக்கு தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் வாக்களிப்பார்கள் என்று கேள்வி எழுப்பிய சிறிதரன், அநுரகுமார திஸாநாயக்க தமிழர்களிடத்தில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலேயே இன்னமும் தன்னை ஒரு சிறந்த தலைவனாக காண்பிக்கவில்லை என்றார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தெரிவில் குளறுபடி- ஒத்திவைக்கப்பட்ட தமிழரசு கட்சியின் மாநாடு !

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான பொதுச்சபை உறுப்பினர்கள் அப்பதவிக்கு மீள் தெரிவைச் செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், மற்றும் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தின் முதலாம் நாள் அமர்வு ஆகியன சனிக்கிழமை (27) திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இதன்போது முதலில் நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றது. அச்சயமத்தில் அரியநேத்திரன், ஸ்ரீநேசனை முன்மொழிந்தார். அதனையடுத்து குலநாயகம் தனக்கு அப்பதவியை வழங்குமாறு கோரினார். பின்னர் சுமந்திரன் தனக்கு சிரேஷ்ட துணைத்தலைவர் பதவியை வழங்குவதாக புதிய தலைவர் சிறீதரன் தெரிவித்துள்ளபோதும் தான் பொதுச்செயலாளர் பதவியையே விரும்புவதாக தெரிவித்தார்.

அதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக அப்பதவியை ஸ்ரீநேசனுக்கே வழங்க வேண்டும் என்று அரியநேத்திரன் மற்றும் யேகேஸ்வரன் வலியுறுத்தினார்கள். அச்சமயத்தின் கொழும்புக்கிளையின் உறுப்பினர் ஒருவர் மட்டக்களப்புக்கு அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், அதனை சாணக்கியனுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதன்பின்னர் சுமந்திரன்;, கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் தலைவர்களாக உள்ள சாணக்கியன், கலையரசன், குகதாசன் ஆகிய ஒருவருக்கு அப்பதவி வழங்குவது பொருத்தமானது என்றுரைத்தார்.

இதற்கிடையில் சிறீதரன் ஸ்ரீநேசனுடன் உரையாடி, ஒருவருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டவாறாக அப்பதவியை குகதாசனுக்கு வழங்குவதற்கு இணக்கப்பாட்டை எட்டினார்.

அதனடிப்படையில் பதவிநிலைகள் தெரிவு செய்யப்பட்டன. அதனடிப்படையில், பொதுச் செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும், துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம், ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதன் நாள் அமர்வு நடைபெற்றது.  இதன்போது, குகதாசனின் நியமனத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பாலான பொதுச்சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக, அரியநேத்திரன், கோடிஸ்வரன், யோகேஸ்வரன் போன்றவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு அமைவாக ஸ்ரீநேசனுக்கே அப்பதவி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். தொடர்ந்து ஸ்ரீநேசன், தான் பதவிக்காக போட்டியிட வேண்டும் என்ற மனநிலையில் இல்லாது விட்டாலும் தனது ஆதரவாளர்களும், பொதுச்சபை உறுப்பினர்களும் அப்பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதால் அதல் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

இதனையடுத்து பொதுச்செயலாளர் தெரிவுக்காக வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் அதில் ஸ்ரீநேசன் மற்றும் குகதாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் முடிவானது. தேர்தலை நடத்துமாறு மாவை.சோ.சேனாதிராஜா, சுமந்திரனை நியமித்தார்.

அச்சமயத்தில், சுமந்திரன், மத்திய குழு ஏற்கனவே நிருவாகம் ஒன்றை தெரிவு செய்துள்ளதால் தனியாக பொதுச்செயலாளரை தெரிவு செய்வதற்காக மட்டும் வாக்கெடுப்பை நடத்தமுடியாது. ஓட்டுமொத்தமாக மத்திய குழு அனுமதித்த நிருவாகத்தை அங்கீகரிப்பதா இல்லையா என்பதற்காகவே பொதுச்சபையில் வாக்கெடுப்பு நடத்த முடியும். அதில் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அதற்கு அமைவாக நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் புதிய தலைவர் சிறீதரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பீற்றர் இளைஞ்செழியன் வழிமொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும், எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக சுமந்திரன் அறிவித்ததோடு கூட்டம் நிறைவடைவதாகவும் அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பொதுச்சபை உறுப்பினர்கள் மிகக் கடுமையாக புதிய தலைவருடன் தர்க்கம் செய்தனர். புதிய பொதுச்செயலாளரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டனர். அதுமட்டுமன்றி, தமக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக ஸ்ரீநேசனையே நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்த நிலைமைகளை சுமூகமாக்குவதற்கு புதிய தலைவர் சிறீதரனும், சேனாதிராஜாவும் முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை புதிய தலைமையின் மீது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர்கள் நேரடியாகவே தெரிவித்தனர். இதனையடுத்து சேனாதிராஜா மாநாட்டை ஒத்திவைத்தார்.

அதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள, பொதுச்சபை உறுப்பினர்கள், பொதுச்செயலாளர் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது பொதுச்சபைக்கு வருகை தந்திருந்த 115 உறுப்பினர்கள் அரங்கிலிருந்து வெளியேறியிருந்தார்கள். அத்துடன் அரங்கிற்கு வருகை தந்திருந்த பொதுச்சபை உறுப்பினர்களின் ஆதரவாளர்களில் சிலரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், பொதுச்செயலாளர் தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறே கோரியபோதும் அது திசைதிருப்பப்பட்டு நிருவாகத்திற்கன அங்கீகரம் தொடர்பான வாக்கெடுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

ஆகவே இந்த முடிவினை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய தலைவர் ஸ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் பொதுச்செயலாளர் பதவிக்காக மீண்டும் பொதுச்சபையில் வாக்கெடுப்பு உரிய முறையில் வாக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்தச் செயற்பாடுகள் நடைபெறாது, தற்போது மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அந்த தெரிவுகளுடன் மாநாடு நடைபெற்றால் அதில் பங்கேற்கப்போவதுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வின்போது பதவிநிலைத் தெரிவுகள் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தக்கம் கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.