சரத் வீரசேகர

சரத் வீரசேகர

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

“யாழ் பல்கலையில் தேசியக் கொடியை இறக்கி கறுப்புக்கொடி ஏற்றியவர்கள் கைது செய்யப்பட வேண்டும்” மொட்டு பா உ சரத் வீரசேகர

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை கீழே இறக்கி கறுப்புக் கொடியை ஏற்றிய சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உரிய தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசியக் கொடியை கீழே இறக்கி அங்கு கறுப்புக்கொடியேற்றியமை நாட்டுக்கு மாத்திரமல்ல ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை மீட்க போராடிய இராணுவ வீரர்களுக்கு செய்யும் அகௌரவமாகும். வக்கிர குணம் உள்ளவர்களால் மாத்திரமே இவ்வாறு நடந்துகொள்ள முடியும்.

யாழ். பல்கலைக்கழகம் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே இவ்வாறு நடந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அனுமதி அளித்தமை தொடர்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்புக்கூற வேண்டும். விடயத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்றார்.

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர ! 

வடக்கில் இராணுவ குறைப்பு செய்வது தவறு – சரத் வீரசேகர !

தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தது முதல் தமிழர் பகுதிகளில் இராணுவத் தடைகளை முகாம்களை அகற்றி வருகிறது. மேலும் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களின் காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அட்மிரல் சரத்வீரசேகர , தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை. இந்திய எதிர்ப்புக் கொள்கையை கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுகிறது. தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுகின்றன. இந்த நாடு 30 வருடகால பிரிவினைவாத போராட்டத்தை எதிர்கொண்டது என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தான் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதே தவிர அந்த அமைப்பின் நோக்கம் அழியடையவில்லை என தெரிவித்துள்ள சரத் வீரசேகர, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொள்கையை கொண்டுள்ளவர்கள் இன்றும் உள்ளார்கள்கள். ஆகவே தேசிய பாதுகாப்பை அரசியல் தேவைகளுக்காக பலவீனப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே பல்லாயிர இராணுவத்தினர் உயிர் தியாகம் செய்தார்கள். ஆகவே சமஸ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்கி படையினரின் உயிர் தியாகத்தை மலினப்படுத்த இடமளிக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அட்மிரல் சரத் வீரசேகர, பணம் செலுத்தி படகில் வருபவர்கள் அகதிகளல்ல, இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களுடன் இணக்கமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள். பிற நாட்டு முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையில் இணக்கமாக செயற்படமாட்டார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

இனவாத கருத்துக்களை கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அதிகம் பேசி வருகின்றனர் – தென்னிந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளை பற்றியே பேசாத தமிழ்தேசிய தலைமைகளிடம் ரோஹிங்கியா அகதிகளை பற்றி பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது. இருந்தாலும் கூட மனித உரிமை அமைப்புக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் – இலங்கை மக்களும் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றகூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களை பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பொதுமக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது.

யுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழர்களின் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ.நா.சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.

அதேபோன்று இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் எந்த பிரேரணைகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.

இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கின்ற அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடியது மகிழ்வளிக்கிறது – சரத்வீரசேகர மகிழ்ச்சி!

தமிழர் தாயக பகுதிகளில் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை ஏந்தியவாறு பொதுமக்கள் சிலர் சுதந்திரத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

யாழ்ப்பாணத்தில் இன்று(4) இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

அதேபோல் இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.” என தெரிவித்தார்.

 

நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. – சரத் வீரசேகர

தேசிய ஒற்றுமையை, நல்லிணக்கத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகத்தை ஸ்தாபித்ததன் பின்னர் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் அதனையும் செய்ய வேண்டும். ஆகவே நாட்டின் ஒற்றையாட்சிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தும் எதற்கும் ஆதரவு வழங்க முடியாது. இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

 

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இந்த ஆணைக்குழு ஊடாக இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்ட முடியும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவ அதிகாரிகள் இன்று தண்டிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு சர்வதேச மட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாராளுமன்றத்தின் ஊடாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான சட்டமூலத்தில் தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு உருவாக்கப்பட்ட அரச கொள்கைகளை செயற்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டால் இந்த அலுவலகத்தின் ஊடாக அதனையும் செயற்படுத்த வேண்டும். 29 ஆயிரம் இராணுவத்தினர் இதற்காகவே உயிர் நீத்தார்கள்.

 

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் சூழ்ச்சி நிறைந்தது. எதிர்காலத்தில் இராணுவத்தினருக்கு மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிப்பேன் என்றார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற தேசிய ஒற்றுமைக்கும்,நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், தேசிய நீரளவை சட்டமூலம் என்பன மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெறுகிறது – சரத் வீரசேகர

நாட்டின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை சிங்கள மக்களிடமிருந்து பறிக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

அகில இலங்கை பௌத்த பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

கடந்த காலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் இருபத்தைந்தாயிரம் சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், இன்று அந்த மாகாணங்களில் ஒரு குடும்பம் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐம்பத்திரண்டு வீதமான தமிழ் மக்களில் வடக்கு, கிழக்கு வாழ்கின்றனர் எனத் தெரிவித்த அவர், சிங்கள மக்கள் பெரும் தேசமாக இருந்தும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிமைகளை இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

அந்த மாகாணங்களில் மூன்று மாவட்டங்களில் சிங்களப்பாடசாலைகள் இல்லை எனவும், இது ஒரு துரதிஷ்டமான நிலை என தெரிவித்த அவர், இந்த நிலைமையை எதிர்கொள்ள சிங்கள பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும்.” – எச்சரிக்கிறார் சரத் வீரசேகர !

விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்ட திவுல்பத்தான மக்கள் மீது மீண்டும் கை வைத்தால் தமிழ் – சிங்கள இன முரண்பாடு தோற்றம் பெறும் என சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் புலிகள் அமைப்பை தோற்கடித்ததையடுத்து, இன்று ஜெனிவாவில் போர்க்குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ளோம். இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளினாலேயே நாம் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். இந்த நாடுகள் அன்று எம்மை போர் நிறுத்தம் செய்யுமாறு அறிவித்தன. ஆனால், இன்று காஸா மீது போரைத் தொடருமாறு அமே நாடுகள்தான் தெரிவித்து வருகின்றன. இது உண்மையில் வெட்கத்துக்குரிய விடயமாகும்.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்ப் பிரிவினைவாதிகள், இன்றும் ஈழக்கனவுடன்தான் இருக்கிறார்கள். அந்த நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு இவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். நாம் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்.

இந்நிலையில், திவுல்பத்தான கிராமத்திலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டும் என இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஒன்றை தெரிவிக்க வேண்டும். இந்த விடயத்தில் தேவையில்லாமல் தலையிடாதீர்கள். யுத்த காலத்தின்போது புலிகளால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் அந்த கிராமத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து தான், அந்த விவசாயிகள் தங்களின் பூர்வீக நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இவர்களின் பெயர் பட்டியல் அனைத்தும் கிராம சேவகரிடம் உள்ளது. இந்த அப்பாவி மக்களை அங்கிருந்து வெளியேற்ற நினைப்பது தவறாகும்.

இது மீண்டும் தமிழ் – சிங்கள முரண்பாட்டுக்கு இடமளிக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பகுதி, நாட்டில் ஒதுக்கப்படவில்லை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவாகும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றுக்கு வரும் முன்னர் பிரபாகரனிடம்தான் பதவியேற்றார்கள். எனவே, நாட்டில் இல்லாத பிரச்சினையொன்றை ஏற்படுத்த வேண்டாம் என் இவர்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” – சரத் வீரசேகர

“நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை ஐரோப்பாவில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.” எனவும் “தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாது போன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்.டி.டி.ஈ. அமைப்பை நாம் பெரும்பாலும் அழித்துள்ளோம். ஆனால், நாம் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளோம். அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை. தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.

இதனால்தான், நாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

யுத்தத்திற்கு பின்னர் 12 ஆயிரத்து 422 புலி உறுப்பினர்களை நாம் புனர்வாழ்வளித்து, சமூக மயமாக்கியுள்ளோம். பயங்கரவாதத்தை நாம் கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், எமக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் இன்னமும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில்தான் மீண்டும், எல்.டி.டி.ஈ. அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து எமக்கு புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுங்கள் – சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் !

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

 

இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மேலும் நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பலவேறு கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.