யுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழர்களின் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடுவதாக ஐ.நா.சபையின் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளமை சாதாரண விடயமல்ல.

30 வருட கால யுத்தத்தின் போது இஸ்ரேல் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. புலிகளுக்கு எதிராக அமெரிக்கா எவ்வித பிரேரணைகளையும் கொண்டு வரவில்லை.

அதேபோன்று இலங்கை இராணுவத்துக்கு ஆதரவாகவும் எந்த பிரேரணைகளையும் அமெரிக்கா கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அரசியல் தீர்வு குறித்து ஆராயுமாறு அமெரிக்கா அழுத்தம் பிரயோகித்தது.

விடுதலைப்புலிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உயிரை தியாகம் செய்தார்கள்.

இந்த தியாகத்துக்கு தற்போது மதிப்பளிக்கப்படுகிறதா என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளியக பொறிமுறை நீடித்தால் இலங்கையில் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிப்பதற்கு முயற்சிக்கின்ற அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *