சஜித் பிரேமதாச

சஜித் பிரேமதாச

வட மாகாணத்தில் எவ்வித  அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை – யாழில் சஜித் பிரேமதாச!

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து பதினைந்து வருடங்கள் கடந்துள்ள போதும் வட மாகாணத்தில் எவ்வித  அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வட மாகாணத்திலுள்ள மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இங்கு அபிவிருந்திகள் இடம்பெறவில்லை என்பதை அவதானிக்க முடிகின்றது.

 

எனவே நாம் இங்கு அபிவிருத்திக்கு முன்னுரிமை வழங்கவுள்ளோம். தமிழ் மக்களை முன்னிலைப்படுத்திய, பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அதனை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

 

இதன் மூலம் வடக்கிலிலுள்ள கிராமங்களை கட்டியெழுப்ப முடியும். கிராமங்களை முன்னேற்றுவதனால் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு

மிகப்பெரிய பக்கபலம் கிடைக்கும்.

 

இதற்கு அறிவு சார்ந்த பொருளாதாரம், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு இன்று எழுந்துள்ளது.

 

யாழ்.மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சாதி, மதம், குலம், கோத்திரம், கட்சிப் பிரிவினைகளில் இருந்து விலகி, ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைய வேண்டும் – யாழில் சஜித் பிரேமதாச!

கடந்த காலத்திலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்றும், கடந்த காலத்தில் இனிப்பும் கசப்பும் இருப்பதாகவும், சாதி, மதம், குலம், கோத்திரம், கட்சிப் பிரிவினைகளில் இருந்தும் விலகி, ஒரு நாட்டு மக்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

மேலும், கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, அது இனிப்பாக இருந்தாலும் கசப்பாக இருந்தாலும் கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காமல், புதிய பயணத்தை மேற்கொள்ள ஒன்றிணையுமாறும், மற்ற அரசியல்வாதிகளில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதிர்க்கட்சியாக இருந்து நாட்டிற்காக உழைத்த தன்னை நம்புமாறும், இதுவரை மாற்றாந்தாய் அரவணைப்பைப் பெற்றுள்ள வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களுக்கான விடியலுக்கு ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் புதல்வனாக தான் வாக்குறுதி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (10) யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, அளவெட்டி அருணோதயம் வித்தியாலயத்துக்கு பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தின் 230 ஆவது கட்டத்தின் கீழ் 1,177,000 ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டே இவ்வாறு தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி வரலாற்றில் ஒரு புதிய பயணமும், புதிய புரட்சியும், திருப்புமுனையுடன் ஆரம்பிக்கப்படும் எனவும், உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தத் தேவையான பலத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

அத்துடன், யாழ். மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் கைத்தொழில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு பிரதேச செயலக எல்லையிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, யாழ். மாவட்டம் அபிவிருத்தி மையமாகவும் அறிவு மையமாகவும் மற்றும் அறிஞர்கள், புத்திஜீவிகள் மையமாகவும் மாற்றப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். – சஜித் பிரேமதாச

இஸ்ரேலின் கொலைகார அரச பயங்கரவாதம் பலஸ்தீன அப்பாவி மக்கள் மீது மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பிரதமர் நெததன்யாஹு பொறுப்புக்கூறவேண்டும்.

 

அதேநேரம் பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாட்டு தீர்வுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனின் தற்பாேதைய நிலை தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

கொலைகார அரசாக இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்களின் வாழ்வை முற்றாக அழித்து, அவர்களின் தாயகத்தை அழித்து, அரச பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி பலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு எதிராக இலங்கையர்களாகிய நாம் உலக மக்களோடு முன் நிற்போம்

 

உடனடியாக போர் நிறுத்த்திற்குச் சென்று பட்டினியால் வாடும் பலஸ்தீன மக்களின் வாழும் உரிமை எல்லாவற்றுக்கும் முதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று முழு உலகுமே கோரிக்கை விடுக்கிறது. இஸ்ரேல் அரசாங்கம் மருத்துவமனைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்துகிறது. பாடசாலைக்கு குண்டுத் தாக்குதல் நடத்துகிறது. சிவில் குடிமக்களை அப்பட்டமாக கொலை செய்து வருகிறது. இந்த கொலைகார இந்த அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றோம்.

 

இஸ்ரேலும் பலஸ்தீனும் சமாதானமாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என இதற்கு முன்னர் நாம் பேசும் போதெல்லாம் கூறினோம்.இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக பலமுறை பேச்சுவார்த்தைகளை நிராகரித்து, பலஸ்தீன தாயகத்தை அழிக்கும் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கின்றேன், இந்த கொலைகார பயங்கரவாதத்தை கைவிடுமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

 

மேலும் ஹிட்லர் என்ற கொலைகாரன் அன்று யூதர்களை படுகொலை செய்ததுபோன்று இன்று இஸ்ரேலை ஆட்சி செய்யும் படுகொலை அரசாங்கம் பலஸ்தீன அப்பாவி மக்களை படுகொலை செய்துவருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

 

இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் நாங்கள் நிபந்தனையின்றி வழங்கவேண்டு்ம்.

 

நெதன்யாகு அரசாங்கம் தொடர்ச்சியாக இடைவிடாது மேற்கொண்டு வரும் மிலேச்சத்தனமான, கீழ் தர செயலை, பயங்கரவாத நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை மாத்திரமல்ல, அவர்களது நாட்டுக்குள் வாழும் உரிமை அவர்களுக்குள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு, பலஸ்தீன், இஸ்ரேல் இரண்டு நாடு தீர்வாகும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

நமது ஆட்சியில் விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, விவசாயிகள் நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பொன்று இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம், பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை தமது ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

விவாதம் செய்ய நான் தயார் – திகதிகளை குறித்து சஜித்பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பிய அனுர குமார திசாநாயக்க !

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி நேற்று(22) அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது. அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு வகையில் விவாதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கவில்லையாயின் அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதத்திற்கான திகதி இதுவரையில் நிர்ணயிக்கப்படாமையின் காரணமாக மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் குப்பைகள் இலங்கைக்கு ஏன் வந்தன..? – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சஜித் பிரேமதாச!

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான கப்பல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குறித்த கப்பல் தொடர்பாக இன்று கவனம் செலுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அமெரிக்காவில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த சிங்கப்பூர் கப்பலொன்று அண்மையில் அமெரிக்கா போல்டீமோர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

 

இந்த கப்பலில் 764 கொள்கலன்களில் பாரிய கழிவுத்தொகை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் காணப்பட்ட 56 கொள்கலன்களில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

 

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக கடற்பரப்புக்களில் இறக்குமதி – ஏற்றுமதி மற்றும் பரிமாற்றங்களின் போது மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

இது மிகவும் மோசமான நிலையாகும். அமெரிக்காவின் போல்டீமோர் பகுதியில் குறித்த கப்பல் விபத்துக்குள்ளானதாலேயே இந்த கப்பல் இலங்கை நோக்கி பயணிப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இல்லையெனில் எமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் திருத்தங்களை செய்வோம் – சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை தற்போது மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான  அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளுமென அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டை, நிதியத்தின் பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது தான் அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது காணப்படும் பிரச்சனைகளுக்கான நேரடி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியுள்ளது.

இதன்படி, தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமென அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஏனைய அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டாலும் தமது கட்சி நிச்சயம் மேற்கொள்ளுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பை சில அரசியல் கட்சிகள் புறக்கணித்திருந்ததாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெறுமதி சேர் VAT வரிகாரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் – சஜித் பிரேமதாச

புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத குடும்பங்கள் காரணமாக தற்கொலை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் அவலத்தை மேலும் கூட்டி வருவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய VAT வரியை அமுல்படுத்துவது அத்தகைய நடவடிக்கையாகும் என்றார்.

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கு VAT வரியை அதிகரிப்பது மாத்திரம் அல்ல என சுட்டிக்காட்டிய அவர், நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீள்குடியேற்றுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதே மற்றுமொரு வழியாகும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் திருடர்களை நம்பி ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை பெற்றுக் கொண்டமையினால் இதனைச் செய்ய முடியாதுள்ளது.

திருடர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் செயற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கம்பஹாவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

பல கோடி கடன் பெற்றவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுகிறது – சஜித் பிரேமதாச விசனம் !

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்று , கடனை செலுத்தாத 150 பேருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மனித உடல்களை அடக்கம் செய்வதற்கு வரி அறவிடுதல் எந்தளவுக்கு நியாயமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் உள்ள  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டை தோற்கடித்துள்ளோம். வற் வரியில் புதிதாக இணைக்கப்படும் 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலை  சபைக்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தினோம்.

வற் வரி சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு அதிக அக்கறை கொண்ட அரசாங்கம்  வரி தொடர்பான தகவல்களை சபைக்கு சமர்ப்பிக்கவில்லை. 97 பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான பட்டியலையும் சமர்ப்பிக்கவில்லை.

வற் வரி அதிகரிப்பதை காட்டிலும் அதனை செயற்படுத்துவதற்கு ஏதுவாக அமைய காரணிகள் தொடர்பில் ஆராய வேண்டும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் குறுகிய காலத்துக்குள் 600 பில்லியன் ரூபா முதல் 700 பில்லியன் ரூபா வரையிலான வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.

வரி வருமானம் இழப்பை தொடர்ந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் புத்திஜீவிகள் நாட்டை விட்டு நாளாந்தம் வெளியேறுகிறார்கள். பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டு மக்கள் மீது சுமையையும் அரசாங்கம் திணித்துள்ளது.

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதார படுகொலையாளிகள் என்று  உயர்நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ, கோட்டபய ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, அஜித் நிவார்ட் கப்ரால்,டப்ள்யூ.டி லக்ஷமன்.எஸ்.ஆர்.ஆட்டிகல,பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளவர்களின் குடியுரிமையை பறித்து,அவர்கள் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டும். இதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம்.

அரச வங்கிகளிடமிருந்து பல கோடி ரூபா கடன் பெற்ற 150 பேரின் பெயர் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறு  நிதியமைச்சரிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தேன். ஆனால் இதுவரை அது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள  மக்களை அடக்கம் செய்வதற்கும் வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எந்தளவுக்கு நியாயமானது என்றார்.

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

வடக்கு- கிழக்கு மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

உலகத்துக்கு நல்லிணக்கம் தொடர்பாக எடுத்துக்கூறாமல் நாட்டிலும் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

 

இதேநேரம் இவ் வருடத்தின் பெப்ரவரி மாதத்திற்குள் வடக்கு கிழக்கில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கடந்த வருடம் ஜனாதிபதி தெரிவித்திருந்தமையும் சுட்டிக்காயிருந்தார்.

 

வடக்கு- கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களும் ஏனைய பகுதி வாழும் மக்களும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.