கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா ஊரடங்குகளால் சுமார் 100கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு.

கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக  ஐக்கிய நாடுகள்சபை  தெரிவித்துள்ளது.

“வரலாற்றில் இல்லாதவகையில் கல்வியில் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. 160க்கும் அதிகமான நாடுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதன் காரணமாக 100 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐக்கிய நாடுகள்சபை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா  வைரஸ் ஐந்து மாதங்களைக் கடந்து 180க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் பணியில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தின் முதல் சுற்றுப் பரிசோதனை முடிவுகள் வெற்றி அடைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இத்துடன் ஐக்கிய அமீரகம், பிரிட்டன் மட்டுமல்லாது அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள்  கொரோனாவுக்குத் தடுப்பூசி மருந்தைக் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

கொரோனாதடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாகவும், ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.79 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் வியாபித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவலால் வல்லரசு நாடான அமெரிக்காவே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் எஞ்சியுள்ளதால், கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

இதனால், மனித குலத்திற்கு இன்னும் பெரும் சவாலாகவே கொரோனா வைரஸ் விளங்கி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  1,79,99,273  -ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  6,87,807- ஆக உள்ளது.  கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,13,18,851- ஆக உள்ளது.