கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயணத் தடை மேலும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

முடிவின்றி தொடரும் கொரோனா இறப்புக்கள் – நேற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் !

2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது இன்று வரை உலக நாடுகளை முழுமையாக உலுக்கி வருகிறது.

இந்நிலையில் உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர்.

அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக உயர்ந்தது. புதிதாக 6.37 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதில் 10.52 கோடி பேர் குணம் அடைந்துள்ளனர். 2.26 கோடி பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 2807 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலும் தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு நேற்று 1000 பேர் பலியாகி உள்ளனர்.

11.19 கோடியைக் கடந்த உலக கொரோனாத் தொற்று நிலவரம் !

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு வருடம் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.21 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93 ஆயிரத்து 900-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இலங்கையிலும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் – முடக்கப்படுமா இலங்கை ? – நாளை முடிவு !

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிரித்தானியாவில் பரவும் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்மை முழுமையாக முடக்குவதா என நாளை ஆராயப்படவுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசினை தடுப்பதற்கான தேசிய நடவடிக்கை நிலையம் நாளை இது குறித்து ஆராயவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளாவியரீதியிலான முடக்கம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் அஜித்ரோகண நாளை இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயியல் பிரிவு நிலைமயை அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

“புதிய வகை கொரோனாவையும் எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளது” – புதிய ஆய்வில் உறுதி !

கொரோனா தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது புதிய வகை கொரோனா பரவ ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய வகை கொரோனாவை எதிர்க்கும் செயல்திறனுள்வையாக காணப்படுமா..? என்பது பலருடைய சந்தேகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் புதிய மாறுபாடு கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ளும் சக்தி அஸ்ட்ராஸெனெகா தடுப்பு மருந்துக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

புதிய கொரோனா தொற்றுக்கு எதிராக 74 புள்ளி 6 சதவீத செயல் திறனும், சாதாரண தொற்றுக்கு எதிராக 84 புள்ளி 1 சதவீத செயல்திறனும் ஒக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பூசிக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் தென்னாபிரிக்காவில் காணப்படும் புதிய கொரோனா பரவலுக்கு எதிராக அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி முழுவீச்சில் செயற்படுமா என்று தெளிவான தரவுகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே உருமாறிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயற்திறனை அதிகரிப்பது குறித்து, தயாரிப்பு நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளதாக, பிரித்தானியாவின் தடுப்பூசி வெளியீட்டுக்கு பொறுப்பான அமைச்சர் நதிம் ஸஹாவி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிக்க உதவிகளை வழங்க தயார்” – ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை இலங்கையில் தயாரிப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க முடியும் என ரஷ்யா, இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா தூதவர் அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளதாக கொரோனா ஒழிப்பு, ஆரம்ப சுகாதாரம் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய ஔடத கூட்டுத்தாபனம் தற்போது ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 மில்லியன் பைஸர் பயோ என்டெக் கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்தை கடந்த உயிர்ப்பலி – கொரோனாவுடன் போராடும் இங்கிலாந்து !

இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இங்கிலாந்து தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 36,89,746 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 16.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜூலை 17-ந்திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சியின் போது வௌவாலிடம் கடி வாங்கிய வுகான் விஞ்ஞானி – கொரோனாவிற்கான காரணத்தை தேடி பயணிக்கும் குழுவின் தேடலில் அதிர்ச்சி !

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் வௌவால் மற்றும் பாம்பில் இருந்து உருவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரஸ் செயற்கையாக உருவானதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் சீனாவின் வுகான் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஆய்வில் வைரஸ் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான வுகான் நகரில் உள்ள ஒரு குகையில் கடந்த 2017-ம் ஆண்டு வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த விஞ்ஞானி வௌவாலிடம் கடி வாங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக டெய்லி மெயில் மற்றும் டெய்லி ஸ்டார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

வுகான் வைராலஜி நிறுவனத்தில் பணியாற்றிவரும் சீனாவில் ’வௌவால் பெண்மணி’ என்று அழைக்கப்படும் ஷிங் ஷன்லி தனது குழுவுடன் வுகானில் உள்ள ஒரு குகைப்பகுதிக்கு 2017-ம் ஆண்டு சென்றுள்ளார். சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிக்காக அவர்கள் வௌவாலை பிடித்து அதில் பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த வைரஸ் ஆராய்ச்சிளர் சியூ ஜியி என்ற அந்த குகையில் பிடித்த ஒரு வௌவாலில் இருந்து பரிசோதனை மாதிரிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்தது இந்தியா !

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்திய பிரதமர் மோடி இன்று ஆரம்பித்து வைத்ததையடுத்து, நாடு முழுவதும் 3,006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், இந்த தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 9-ஆம் திகதி உயர்மட்ட குழுவினருடன் ஆய்வு செய்தார். அதன் பின், ஜனவரி 16-ஆம் திகதி (இன்று) முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.

முதல்கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்கள பணியாளர்கள் என சுமார் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். அடுத்ததாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்கு உட்பட்ட நோயாளிகள் என சுமார் 27 கோடி பேருக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, உலகிலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா இன்று தொடங்கியது. இந்த மாபெரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்தார்.

நாடு முழுவதும் உள்ள 3,006 மையங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் தினமும் 100 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை படிப்படியாக மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.