உயர் தரத்திற்கான தனியார் வகுப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனியார் வகுப்பு ஆசிரியர்கள் அமைப்புடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
65 மில்லியன் ரூபா வருமானம் பெறும் அளவிற்கு தனியார் கல்வி நடவடிக்கைகள் வியாபாரமாகியுள்ளது. எவ்வாறாயினும், தனியார் வகுப்புகளை ஒழுங்குபடுத்தும் முறையொன்று காணப்படவில்லை. தனியார் வகுப்புகளை நடத்துபவர்களின் கல்வித் தகைமை, அவர்களுக்கு உள்ள உளத்தகைமை, கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொடர்பான விபரங்கள், துறைசார் அறிவு என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
4000-இற்கும் அதிகமான தனியார் வகுப்புகளை நடத்துபவர்கள் இலங்கையில் உள்ளதாகவும், அவர்களுக்கான அமைப்புகள் காணப்படுவதாகவும் அவர்களுடன் கலந்துரையாடி தனியார் வகுப்புகளை ஒழுங்குபடுத்தும் முறையொன்றை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார் வகுப்புகள் நடத்தப்படும் இடங்களின் வசதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு, சுகாதார வசதிகள், தளபாட வசதிகள் உள்ளிட்டவை தொடர்பிலும் கண்காணிக்கப்படவுள்ளது.