“நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம்.” என புலம்பெயர் இலங்கையர்களுடனான சந்திப்பின் போது ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று நடைபெற்றது.
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரித்தானிய வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரித்தானிய வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் பேசிய அவர்,
எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்திற்கு உள்ள பிரச்சினைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக் கொள்வார்கள்.
இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளை பேணி வருகிறோம். எங்கள் உறவு நீண்ட காலமாக தொடர்கிறது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணியென எதுவாக இருந்தாலும், நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவை தொடர்ந்து பேணவே விரும்புகிறோம். எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம். நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும்.
நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால் அதற்கு பங்களித்தவர்களாக இருப்போம்.
அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும். வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயல்படுவதாகும். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களை கண்காணிப்புக் குழுக்களுக்கு முன்வைத்துள்ளோம்.
பாராளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கிறோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது. கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும். கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கில் நிலவும் காணிப்பிரச்சினை, காணாமற்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு அரசியலமைப்பை திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.
வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனை தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள்.
இங்கு வாழும் சுமார் 500,000 இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சு அதைச் செயல்படுத்தி வருகிறது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும்.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம்.அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் என்று ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.