சுகாதாரத் துவாய்கள் (Sanitary napkins) ஆடம்பரப் பொருட்களாகக் கருதப்படுவதால், அவற்றுக்கு 42% வரி விதிக்கப்படுவதாகவும், வற் சேர்க்கப்படும் போது, அது சுமார் 45% எனவும் பாராளுமன்ற உறுப்பினர்நாடாளுமன்றில் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் பெண்களின் சுகாதாரம் தொடர்பான அபாயகரமான நிலைமையும் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் சுகாதார துவாய்களுக்கு 42% வரி விதிக்கப்பட்டது. அனைத்து வரிகளையும் சேர்த்தால், அது சுமார் 42% ஆகும். வற் இன்னும் கொஞ்சம் அதிகமாக 15% ஆகும்போது, 42உடன் 3ஐ சேர்த்து 45 ஆகிவிடும்.
பாடசாலைகளில் படிக்கும் மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், பெண்களின் ஆரோக்கியத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது ஓர் ஆடம்பரப் பொருளின் வகைக்குள் வந்துள்ளது. எனவே, இதை ஆடம்பர பொருட்கள் பிரிவில் இருந்து நீக்கி, அதன் மீதான வரியை நீக்க பரிந்துரைக்கிறேன். அப்படிச் செய்தால், எமது நாட்டில் உண்மையில் இரண்டு வகைகள்தான் உற்பத்தியாகின்றன. மற்றவை வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது மிக முக்கியமானது.
அந்த வரிகள் தொடர்பாக ஏதாவது ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்றார்.
சுகாதார துவாய்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் பிரேமநாத் டோலவத்த, ரோகினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இலங்கையில் சமீபகாலமாக எழுந்துள்ள எரியும் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.
“இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் ‘PAD-MAN’ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது இலங்கையிலுள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் இது எங்கள் கலாசார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படவில்லை, ”என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அண்மையில் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய எம்.பி.தொலவத்த, பெண் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியாததால் அவர்கள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பது கவலையளிக்கிறது. “இது நான் சமீபத்தில் டெய்லி மிரரில் படித்த ஒரு எரியும் பிரச்சினை” என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.