தமிழ் – சிங்களப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலையில் மொத்தம் 165 பேர் இரத்தக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 47 வீதம் உயர்ந்துள்ளது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தலைமை நர்சிங் பயிற்றுவிப்பாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா தெரிவித்தார்.
அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
சண்டைகள் காரணமாக 21 பேரும், உடல் ரீதியான தாக்குதல் தொடர்பாக 19 பேரும் காயமடைந்துள்ளனர். ஏனையோர் வீதி விபத்துக்கள் மற்றும் பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாகக் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு புத்தாண்டில் 85 நோயாளிகள் மட்டுமே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
புத்தாண்டு பருவத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பண்டிகைக் காலங்களில் அதிகமாக மது அருந்துவதைத் தவிர்க்கவும், விபத்துக்குள்ளாகும் சம்பவங்களைக் குறைக்கவும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.