“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.” என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அங்குணுபெலஸ்ஸ சிறைச்சாலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பிறந்துள்ள சித்திரை புத்தாண்டு ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சிறந்ததாக அமைய வாழ்த்துவதற்காக அவரை பார்வையிட வந்தோம். அவருக்காக எதிர்வரும் நாட்டில் ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு அமையவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நீதி கிடைப்பதற்கு தொடர்ந்தும் நாம் முன்னின்று செயற்படுவோம். ரஞ்சன் ராமநாயக்க என்ற மனிதாபிமானம் மிக்க நபர் இந்த நாட்டின் சொத்தாவார். நாட்டு மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார்.
மக்கள் அதிகம் நேசிக்கும் அரசியல் தலைவரான அவருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.