“தமிழர்களே நம்பிக்கையை இழக்காதீர்கள் . இறுதிவரை போராடியேனும் உரிமையை வென்றெடுப்போம்.” – புத்தாண்டு வாழ்த்தில் இரா.சம்பந்தன் !

“தமிழர்களே நம்பிக்கையை இழக்காதீர்கள் . இறுதிவரை போராடியேனும் உரிமையை வென்றெடுப்போம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது.  நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல.

தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை.

உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *