“சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர். அவருக்கான பாதுகாப்பு மீள வழங்கப்பட வேண்டும்” – நாடாளுமன்றில் சரத்பொன்சேகா !

பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனை தானே நிறுத்தியதாக அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் “அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10.02.2021) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரது உயிர்பாதுகாப்பை கருத்திற்கொண்டே விசேட பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அவர் பாதயாத்திரை சென்றதை அடிப்படையாகக் கொண்டு அவரது பாதுகாப்பை நீக்குவது ஒழுக்கமான செயலல்ல. அதனால் அவருக்கு இருந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினார்.

அதனைத் தொடந்து எழுந்த சரத்பொன்சேகா தெரிவிக்கையில்,

நீதிமன்ற உத்தரவை மீறி பேரணி நடத்தியதாக தெரிவித்தும் பயங்கரவாதிகளுக்காக முன்னின்று செயற்பட்டாரென்ற காரணத்தையும் அடிப்படையாகக் கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

பேரணியை தடைசெய்யக்கோரி பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கவில்லையென்றே நினைக்கிறேன்.

மாறாக தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து அவரது பாதுகாப்பை நீக்குவதாக இருந்தால், எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்? பிள்ளையானை சுற்றி இராணுவத்தினர் இருப்பதை காணும்போது எமக்கு வெட்கமாக உள்ளது.

சுமந்திரன் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்.

அதனால் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு சுமந்திரனின் பாதுகாப்பை நீக்குவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *