“கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும்” – தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் .

“கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும்’ என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாண சபையால் 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைவாகக் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொ. ஐங்கர நேசன் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த ஊடகச் செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கும் மரங்களுக்கும் இடையேயிருந்த பண்பாட்டுப் பந்தம் மிகவும் உணர்வு பூர்வமானது. மூதாதித் தமிழர்கள் மரங்களை இறையாக வழிபட்டார்கள் . உருவ வழிபாடு ஆரம்பித்ததும் மரங்களை இறைக்கு நிழற்
குடைகளாக்கி வலம் வந்தார்கள். மரங்களைக் குலக் குறிகளாக்கிக் கொண்டாடினார்கள். போர்க்களத்தில் பூமாலைகள் அணிந்தே எதிரிகளுடன் பொருத்தினார்கள். மங்கையர்கள் மரங்களைக் காதலர்களாக உருவகித்து நாணி நின்றார்கள்.

மறைந்த உறவினர்களின் நினைவுகளை மரங்களில் ஏற்றிக் கைதொழுதார்கள். ஒரு மரத்தை அழித்துத்தான் என் உயிரைக் காப்பாற்ற வேண்டுமெனில் மரம் வாழட்டும். நான் சாகிறேன்’ என்ற சங்கப் புலவனின் வாரிசுகளான நாமோ, இன்று எவ்விதக் கருணையும் இன்றி மரக் கொலைகளைச் செய்து
வருகிறோம்.

அறிவியல் வளர்ச்சி மரங்களுடன் நாம் கொண்டிருந்த பண்பாட்டு உறவைப் புறமொதுக்கியுள்ளது. அறிவியல் எப்போதும் அபிவிருத்தியின் பக்கம் சார்ந்ததாகவே இயங்கும். அபிவிருத்தி தன் பாதைக்குக் குறுக்காக நிற்கும் எதனையும், அது மனிதர்களாக இருந்தாலும் அழிப்பதற்குத்
தயங்காது.

இதனாலேயே வீதி அகலிப்பின்போதும், தொலைத்தொடர்பு வழித்தடங்கள், மின்வழித்தடங்களை அமைக்கும் போதும் மாற்றுவழி பற்றிச் சிந்திக்காது மரங்களைக் குற்றுயிரும் குலையுயிருமாகச் சாய்த்து வருகிறோம்.

உலகம் பூமி சூடேறிக் கொண்டிருப்பதால் படுபாதகமான காலநிலை மாற்றங்களை இன்று எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இன்னொரு புறம் வைரசுக்கள் விகாரிகளாகித் தாக்குவதால் கொரோனா, சார்ஸ் போன்ற கொடிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இப்பேரிடர்கள் யாவும் காடுகளை அழித்ததால், இயற்கையைச் சிதைத்ததால் ஏற்பட்டதன் விளைவுகளே என அறிவியல் மெய்ப்பித்ததன் பின்னர், இப்போது காடு வளர்ப்பும் மரங்களின் நடுகையும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இம் முயற்சிகள் தனியே அறிவியல் அணுகுமுறையுடன் மாத்திரம் அமையாது, பண்பாட்டுப் பிரக்ஞையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மரநடுகையை மேற்கொள்வதற்குக் கார் என்ற மழையின் பெயரைத் தன்பெயராகக் கொண்ட கார்த்திகை மிகப் பொருத்தமான மாதம்.

அறிவியல் ரீதியான காரணத்துக்கும் அப்பால் தமிழர் வாழ்வியலில்
கார்த்திகை பண்பாட்டு முக்கியத்துவம் பெற்ற ஓர் மாதமுமாகும். வீடுகளில் விளக்கேற்றி வழிபடும் தீபத்திருநாளையும் இறந்த மறவர்களின் நினைவுகளை நெஞ்சிருத்தி நெக்குருகும் நாட்களையும் இம்மாதம் தன்னகத்தே கொண்டுள்ளது.

மரங்கள் மனிதர்கள் உயிர் வாழுவதற்குத் தேவையான பிராண வாயுவைத் தரும் கரிப்பிடிக்கும் காற்றைச் சுத்திகரிக்கும் வெம்மை தணிவிக்க மழையைத் தரும் என்று கற்றுத்தருகின்ற அறிவியலும், வெட்டு மரங்களாகக்கை நிறையக் காசு தரும் என்று போதிக்கும் பொருளியலும் மரங்களுக்கும் எங்களுக்கும் இடையே காலங்காலமாக நிலவி வந்த பண்பாட்டு உறவைத் துண்டித்துவிட்டன. மரங்களுடனான பண்பாட்டு உறவே மரங்கள் மீதான பற்றுதலை வளர்க்கும். இழந்துவிட்ட இந்தப் பண்பாட்டு உறவை மீட்டுருவாக்கும் ஓர் தமிழ்த்தேசியச் செயற்பாடே கார்த்திகை மாத மரநடுகை ஆகும்.

தேசியம் என்பது ஒரு இனத்தின் வாழ்புலம், மொழி, வரலாறு, பண்பாடு, நம்பிக்கைகள் ஆகியன பின்னிப்பிணைந்த ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில் கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச் செய்யும் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *