“தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். பௌத்த மகா சங்க சபையினர், பொது மக்கள் எதிர்பார்த்த விசேட விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்” என சீயம் நிகாய பௌத்த பீடத்தின் அஸ்கிரி தரப்பு ஆவண அதிகாரி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
20ஆவது திருத்தம் தொடர்பில் கண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர்,
பௌத்த மகா சங்க சபையினர், பொது மக்கள் எதிர்பார்த்த விசேட விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். பிரதமர் நியமித்த குழுவின் பரிந்துரைகளிலும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களில் இது தொடர்பாக கூறப்பட்டிருந்தது. துரிதமாக புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாட்டின் பௌத்த சங்க சபையின் குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம். பௌத்த பிக்குகளின் இந்த அர்ப்பணிப்பு தொடர்பாக விசேட கவனத்தை செலுத்தி மிக விரைவில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம்.
பௌத்த பிக்குமார் வழிநடத்திய அரசாங்கம் எதிர்பார்த்தபடி செயற்படவில்லை என்றால், எதிர்காலத்தில பிக்குமார் மீது குற்றம் சுமத்தப்படலாம். ஏதோ ஒரு பாதிப்பான நிலைமை காணப்படுகிறது. எனவே அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்தி புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனவும் மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.