“இரட்டைப் பிரஜாவுரிமை நாற்றம் என்றவர்கள், ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியதன் பின் அந்த நாற்றத்தை புசித்துப் பார்ப்பதற்கான முடிவினை எடுத்துவிட்டனர்“ – பாராளுமன்றத்தில் நளின்பண்டார ஆவேசம் !

“அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் சீனப்பிரஜைகளும் இலங்கை பாராளுமன்றத்தில் பிரவேசிப்பதற்கான வாய்ப்புக்களை அரசாங்கம் செய்துகொடுத்து வருவதாக  குற்றஞ்சாட்டி பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார , அமெரிக்காவின் தேசியக் கொடியையும் உயர்த்தி எதிர்ப்பை தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கூச்சலில் ஈடுபட்டனர். இந்த கூச்சலையும் பொருட்படுத்தாமல் நளின் பண்டார, அமெரிக்கத் தேசியக் கொடியையும், கறுப்பு நிறத்திலான முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டு சபையில் கருத்து வெளியிட்டார்.

பாராளுமன்றில்  தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பசில் ராஜபக்ச அமெரிக்கப் பிரஜை என்பதால் அவர் அந்நாட்டு சட்டத்தின் படி அமெரிக்கக் கொடிக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட நபர்களை சபைக்குள் உள்வாங்கவே புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொடிக்கு முன்பாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்களுக்காகவே அரசியலமைப்புத் திருத்தமும் செய்யப்படுகின்றது.

சர்வாதிகார நாடுகளுக்கு எதிரான கருத்துடையவர்கள் இன்று பூனைக் குட்டிகளாகிவிட்டனர். சிங்கங்களைப் போல கர்ச்சித்தவர்கள் 20ஆவது திருத்தத்திலுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை நாற்றம் என்றவர்கள், ஜனாதிபதியின் அழைப்புக்கு மத்தியில் நேற்று இரவு பேச்சு நடத்தியதன் பின் அந்த நாற்றத்தை புசித்துப் பார்ப்பதற்கான முடிவினை எடுத்துவிட்டனர்.

அந்த சிங்கங்கள் இன்று நரிகளாகவும், நாய்களாகவும் மாறிவிட்டனர். ஐக்கிய நாடுகளுக்கு எதிராக போராடியவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடியவர்கள் எங்கே? பசில் ராஜபக்சவின் பெயரை உச்சரிக்கும் போது இந்த சிங்கங்கள் பூனைக் குட்டிகளாகிவிட்டன. ஜனாதிபதியே அமெரிக்கப் பிரஜாவுரிமையை இழந்துவிட்டார். இவர்கள் ஏன் வைத்திருக்கின்றார்கள்? மகாநாயக்க தேரர்கள் உட்பட சர்வமதத் தலைவர்களும் இதற்கெதிராக கருத்து வெளியிட்ட நிலையிலும் அதனைக்கூட அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

அமெரிக்கர்கள் மாத்திரமன்றி சீனர்களும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கலாம். இனிவரும் நாடாளுமன்றத்தில் சீனர்களைப் போன்ற இப்படிப்பட்ட நபர்களும் வரலாம். ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திற்குள் சீனர்களும், அமெரிக்கர்களும் வரத் தேவையான வசதிகளையே அரசாங்கம் செய்துகொடுக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *