நாளையதினம் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையின் 09 வது நாடாளுமன்றம் கிட்டத்தட்ட 11 வீதம் இளைஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் 09 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 54 உறுப்பினர்கள் 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, பட்டாலி சம்பிக்க ரணவக்க, பழணி திகம்பரம், மனோ கணேசன் ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.
69 வயதான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 37 உறுப்பினர்கள் 61 மற்றும் 70 வயதிற்குட்பட்டவர்களாவர்.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் சாமல் ராஜபக்ஷ உட்பட ஒன்பது உறுப்பினர்கள் 71 மற்றும் 80 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
மேலும் 81-90 வயதுக்கு இடைப்பட்ட வாசுதேவ நானாயக்கார, சி.வி.விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன் ஆகிய மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிக வயதுடையவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.