யாழ் மாநாகர சபைக்கும் போக்குவரத்தை கண்காணிக்க CCTV கெமராக்கள் வரவுள்ளது ! 4000 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை !
கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கெமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில், வாகன விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு, அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள CCTV கெமராக்கள் மூலம் வாகன விதிமீறல்களைக் கண்டறியும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின் அவ்வப்பகுதி நகர சபைகளாலும் மாநகர சபைகளாலும் தத்தம் பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவ்வப் பிரதேசங்களுக்கான நிதிமூலமாகவும் அமையும்.
இதன் அடிப்படையில் மாநாகரசபையும் வீதிப் போக்குவரத்து மற்றும் நகரின் பாதுகாப்பைக் கண்காணிக்க சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட வாய்ப்புள்ளது. கள்ளமண் ஏற்றுவது, கனியவளங்களைக் களவாடுவதைத் தடுப்பதிலும் இக்கமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கனவே யாழ் மாநகரசபை குப்பைகளைப் அதற்கான இடங்களில் போடாமல் வேறு பிரதேசங்களில் கொட்டுபவர்களைக் கண்டறிய சிசிரிவி கமராக்கள் மயன்படுத்தப்படுவது பற்றி செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உரிய முறையில் உரிமை மாற்றப்படாத 241 வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனம் விற்பனை செய்யப்படும்போது, உரிமை மாற்றம் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்த ஆண்டின் கடந்த காலப்பகுதியில் 724 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களால் 764 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 1,535 கடுமையான விபத்துக்களும், 2,699 சிறிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.