“எமது மகன் வருவான் என காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கு அம்மாக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் “ அமைச்சர்கள்

“எமது மகன் வருவான் என காத்திருந்த வடக்கு, கிழக்கு, தெற்கு அம்மாக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்போம் “ அமைச்சர்கள்

 

பட்டலந்த படுகொலைக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் இடம்பெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் நீதி பெற்றுக்கொடுப்போம் என்கின்றனர் என்பிபி அமைச்சர்கள்.
இலங்கை வரலாற்றில் பின் கதவால் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க விரைவில் பட்டலந்த படுகொலை விவகாரத்தில் தண்டனை பெறுவார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் சூளுரைத்தார். அதேநேரம் நாட்டின் கரும்புள்ளியாக இருக்கும் கறுப்பு யூலைப் படுகொலைகள் தொடர்பிலும் நாடளாவிய ரீதியில் இருந்த வதை முகாம்கள் தொடர்பிலும் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்கிறார் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சம்பந்தமான பாராளுமன்ற முதல் நாள் அமர்வான நேற்றைய தினமே அமைச்சர் சபையில் இவ்வாறு தெரிவித்தார். அல்ஜசீரா நேர்காணலால் தான் பட்டலந்த விவகாரம் பேசுபொருளானது என்பதை மறுத்த அமைச்சர், எங்களிடம் அரசியல் முகாமைத்துவம் இருக்கிறது. இந்த நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து மீட்கவே எமது சகோதர மற்றும் சகோதரிகள் உயிர்த் தியாகம் செய்தனர். சாமானிய மக்களுக்கும் நீதி வழங்கும் நாடாக எமது நாட்டை மாற்றவே முயற்ச்சித்தோம். அதனாலேயே கடந்த 35 ஆண்டுகளில் நாம் சிறு ஆயுதங்களை கூட தூக்கவில்லை.

இருந்தபோதும் 1994 ஆண்டுக்கு பின்னர் தேர்தலில் போட்டியிட்ட எமது 8 சகோதரர்களை கொலை செய்தனர். எனினும் நாம் ஒரு உண்டிவில்லையேனும் கையில் எடுக்கவில்லை. பயத்தால் நாம் ஆயுதம் எடுக்கவில்லை என கருத வேண்டாம். அது வெறும் கிட்டார் இல்லை. ஆயுதத்தின் பலம் எமக்கு தெரியும். அதனை கையில் எடுத்தால் பின்னர் கீழே வைக்க முடியாது.

தேவையேற்படின் வெளிநாட்டு நிபுணர்களை கொண்டு வந்தேனும் பட்டலந்த பிரதான கொலையாளிகளான ரணில் விக்கிரமசிங்க போன்றோர் மீது விசாரணைகள் நடத்தப்படும். நீதிமன்றத்தினூடாக தண்டனை பெற்று கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் பட்டலந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி குழு ஒன்றை நியமிப்பார் எனவும் கூறினார்.

இலங்கையில் காலத்திற்கு காலம் நடந்த அனைத்து இனக் கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் மற்றும் வதை முகாம்களுக்கும் பொறுப்பாகவிருந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரின் ஆட்சியாளர்கள் என நேரடியாக அமைச்சர் சந்திரசேகரும் பிமல் ரத்தநாயக்கவும் குற்றம் சாட்டினர். அந்தவகையில் ரணில் விக்கிரமசிங்க தான் பட்டலந்த கொலையின் பிரதான சூத்திரதாரி என நேரடியாக குற்றம் சாட்டினர். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நேற்றைய பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான விவாதத்தைப் பொறுத்தவரை ரணில் விக்கிரமசிங்க கம்பி எண்ணப் போவது உறுதியாகியுள்ளது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *