தமிழ் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வேண்டும் – அமைச்சர் சந்திரசேகர் ! முதுகெலும்பற்ற தமிழ் தேசியம் மௌனம் !
இந்திய அரசின் நிதி பங்காளிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது திருவள்ளுவர் கலாச்சாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை , குறித்த நிகழ்வின் திரையில் தமிழ்மொழி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டமை என பல விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் தமிழுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். திருவள்ளுவர் கலாச்சார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாச்சார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து எனவும் நிச்சயமாக அது தொடர்பில் கலந்துரையாடி இனிவரும் காலங்களில் தவறுகள் இடம்பெறா வண்ணம் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
யாழில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றப்பட்ட பின்னணியில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இருக்குமோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஆனால் இவ்விடயம் தொடர்பில் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் மௌனம் காத்தனர். யாழ் மண்ணில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டது தொடர்பில் அவர்கள் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. தங்கள் எஜமானர்களான இந்தியத் தூதரக அதிகாரிகள் மனம் கோணக்கூடாது என அவர்கள் மௌனம் காக்கின்றனர். இது விடயத்தில் சமூக வலைத்தளங்களும் பொங்கி எழுந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய பாரம்பரிய ஊடகங்கள் இதுபற்றி எதுவும் தெரியாதது போல் அடக்கி வாசித்தனர்.
யாழ் மண்ணில் இந்திய தூதரக அதிகாரிகள் ஏதேச்சையாக தாங்கள் நினைத்தபடி நடக்கத் தலைப்படுகின்றனர். அப்பிரதேச மக்களோடு மக்கள் பிரதிநிதிகளோடு கலந்துரையாடாமல் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளனர். அமைச்சரைக்கூட எழும்பி இடம்மாறியிருக்க நிர்ப்பந்தித்துள்ளனர். இந்நிலைமைகளுக்குக் காரணம் முதகெலும்பற்ற தமிழ் தேசியவாதிகள் கொடுத்த இடமே.