அரசாங்கத்திடம் வேலையில்லை ஆனால் வேலைகேட்டுப் போராட்டம் ! தனியார் நிறுவனங்களில் வேலையிருக்கு ஆனால் விண்ணப்பிக்கிறார்கள் இல்லை ! 

அரசாங்கத்திடம் வேலையில்லை ஆனால் வேலைகேட்டுப் போராட்டம் ! தனியார் நிறுவனங்களில் வேலையிருக்கு ஆனால் விண்ணப்பிக்கிறார்கள் இல்லை !

யாழ்ப்பாணத்தில் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தால் நேற்றையதினமும் தமக்கு அரசாங்க வேலை வழங்குமாறு கோரிய போராட்டம் ஒன்று வடக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் 14 லட்சமாக தேவைக்கு மிக அதிகமாக உள்ள அரச பணியாளர்களை ஏழு லட்சமாக குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. ஆனால் தனியார் துறையில் பல வேலைகளுக்கு வெற்றிடங்கள் உள்ளது. ஆனால் அதற்கு யாரும் விண்ணப்பிக்கின்றார்களில்லை.

அரசவேலைகளைப் பெற்றால் வேலை செய்யாமலேயே சம்பளம் எடுக்கலாம் என்ற மனப்பாங்கு சிலரிடம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே அரசாங்க வேலை தான் வேண்டும் என முயற்சிக்கின்றனர் என்ற கருத்துப்பட ஆளநர் நா வேதநாயகன் அண்மைய நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த வேலையற்றவர்களின் போராட்டங்கள் தற்போது நகைச்சுவையாகும் அளவுக்கு அவர்களது நடவடிக்கைகள் அமைந்துள்ளது.

அரசாங்கம் வெற்றிடங்களை நிரப்பும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளாது, இதன்பொழுது கருத்து தெரிவித்த வட மாகாண பட்டதாரிகள் சங்க தலைவர், வடக்கில் பல்வேறு திணைக்களங்களில் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வேலைவாய்ப்புக்கள் எமது பட்டதாரிகளுக்கு வழங்கப்படவேண்டும். இதேவேளை இன்று இந்த கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம். எமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை உருவாக்கிய – கொண்டிருக்கக்கூடிய அரசினதே ஆகும் என தெரிவித்தார்.

இதன் போது வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள், வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து குறித்த சிலரை ஆளுநர் பேசுவதற்கு அழைத்தார்.

வேலையில்லாப் பட்டதாரிகள் பெரும்பாலும் சான்றிதழ்களுக்காக கலைப்பாடங்களைக் கற்றவர்களாகவே உள்ளனர். ஏனைய துறைசார்ந்த பாடங்களைக் கற்றவர்கள் வேலையில்லாமல் யாரும் இல்லை. துறைசார்ந்த திறமையானவர்கள் இல்லாததால் தெற்கிலிருந்து அவர்களை வேலைக்கு அழைத்து வரவேண்டியதைச் சுட்டிக்காட்டியிருந்த ஆளுநர் வேதநாயகன், வேலைக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

போராட்டக்காரர்களைச் சந்தித்த ஆளுநர் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். கலைப்பீடப் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் அவரது பதில் திருப்தியானதாக இல்லை என்றும் ஆளுநரைச் சந்தித்த பட்டதாரிகள் தெரிவித்தனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *