நாட்டின் அரிசி மாபியாக்களுக்கு வடக்கிலும் சவால்: நெல் அறுவடைக்கு முன் விலை நிர்ணயம்! கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவுத் திட்டம்!
நெல் அறுவடைக்கு முன்னதாக நெல் மற்றும் அரிசிக்கான நிர்ணய விலையை அறிவிக்குமாறு அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகக் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரா நெல், அரிசி மாபியாக்களுக்கு எதிராக ஒரு அரிசிப் போரை ஆரம்பித்து உள்ளார். இந்நிலையில் ஆளுநரின் தலைமையில் நெல் சந்தைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை டிசம்பர் 24 இல் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அதேபோன்று அரிசி ஆலை உரிமையாளர்கள், வடக்கில் விளையும் நெல்லில் பெரும் பகுதியைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அதிகரித்த கடன் வழங்கலுக்கு வங்கிகளுடன் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் 3 லட்சம் மெட்ரிக் தொன் நெல் விளையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதில்; ஆகக் குறைந்தது 30 ஆயிரம் மெட்ரிக் தொன்னையாவது நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் வடக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாகக் கொள்வனவு செய்வது தொடர்பான யோசனையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் கலாநிதி அகிலன் கதிர்காமர் முன்வைத்தார். வடமாகாணம் நெல் விளையும் பூமியாக இருந்தாலும் இதுவரை நெல் காயவிடுதல், களஞ்சியப்படுத்தல் வசதிகள் இங்கு இல்லை என்பதும் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அறுவடை செய்தவுடனேயே குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளதையும் விவசாய அமைப்புகள் சுட்டிக்காட்டி இருந்தன.
வடக்கின் 5 மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட அதன் பிரதிநிதிகள், விவசாயிகள் நெல் அறுவடை முடிந்தவுடனேயே கொடுப்பனவை எதிர்பார்ப்பார்கள் என்பதைக் குறிப்பிட்டார்கள். அத்துடன் இடைத்தரகர்கள் மூலமே பிரச்சினைகள் உருவாகுவதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபையோ, கூட்டுறவு சங்கங்களோ ஈர நெல்லை கொள்வனவு செய்ய முன்வரவேண்டும் எனவும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர். நெல் கொள்வனவுக்கான அறிவுறுத்தல் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்கங்கள் வசம் உள்ள நெல் உலர விடும் தளங்களை தயார்படுத்த பணித்துள்ளதாகவும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவித்தார். அத்துடன் நெல்கொள்வனவுக்கு சங்கங்களுக்கு முற்கொடுப்பனவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலர் தெரிவித்தார்.
அரசாங்கம் உள்ளூர் நெல் உற்பத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அரிசி இறக்குமதியின் போது ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி விதித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யும் அரிசியின் விலையை கிலோவுக்கு 220 ரூபாய்க்கு விற்கப் பணித்துள்ளது. இதன் மூலம் உள்;ர் உற்பத்தியாளர்களையும் காப்பாற்றி அரிசியின் விலையை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்காமல் தடுத்து மக்களையும் காப்பாற்றியுள்ளது.