யாழில் மற்றுமொரு வாள் வெட்டு: காடையர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தயக்கம் ஏன் ?
யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் சாரதி மற்றும் நடத்துனர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் டிசம்பர் 24 இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள சிற்றுண்டிச்சாலைக்குள் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ். காரைநகர் சாலைகளை சேர்ந்த சாரதியும், நடத்துனருமே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹெல்மெட் அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வந்த மூன்று பேரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் டிசம்பர் முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற குடும்பஸ்தர் மரணமடைந்திருந்தார். குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடந்த 8 ஆம் திகதி வவுனியா பொலிசார் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பலோ என அறியப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ரிக்ரொக்கில் பெண்களை இழிவுபடுத்திய பேர்வழி ஓகஸ்டில் வவுனியாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தார். மற்றுமொரு ரிக்ரொக் பிரபல்யம் பிரான்ஸைச் சேர்ந்த ராசன் என்பவர் சுயேட்சையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் வடக்கில் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் நடைபெறும் சில வன்முறைச் செயற்பாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது.
வன்முறைக் குழக்களின் வாள் வெட்டுக்கள் இதுவரை நின்றபாடாக இல்லை. வடக்கு ஆளுநர் பொலீஸ் பிரிவினருடன் இதுபற்றி உரையாடி அழுத்தங்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேசிய மக்கள் சக்தியுடைய அரசில் பாதாளக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அரசு சூளுரைத்திருந்தது. அந்த வகையில் வடக்கில் உள்ள ஆவா குழு போன்ற வன்முறைக்கும்பல்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சன்னா என்று அறியப்பட்ட நல்லநாதன் பிரசன்னா கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளமை தெரிந்ததே.