தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதை தடுங்கள் – ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அவசர கடிதம்!
தோட்டங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் முயற்சியை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இரத்தினபுரி, எகலியகொடை மற்றும் சன்டர்லேன்ட் தோட்டத்தில் வசிக்கும் ஏழை மக்களை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முயற்சிக்கின்றது. தோட்டங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்கள் வெளியேற்றப்படக் கூடாது. புதிய காணி உரிமை வழங்கும் முன் அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் தடை உத்தரவை அறிவிக்க வேண்டும். “மொடர்ன் ஸ்லேவரி (modern slavery)” என்று அடையாளம் காணப்பட்டுள்ள தற்போதைய அமைப்பை முற்றிலும் மாற்ற வேண்டும் என அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை முதற் தடவையாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து மலையகத் தமிழரான சுந்தரலிங்கம் பிரதீப் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தோட்ட மற்றும் சமூகக் கட்டுமான பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மலையகத் தமிழர்களுக்கு காணிகளை வழங்கி வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீவிர முயற்சிகளை அரசு எடுத்து வருவதை பிரதி அமைச்சர் பிரதீப் சுட்டிக்காட்டியிருந்தார்.