வறிய போராளிக் குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு !
பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஜனவரி முதல் மார்ச் வரை ‘நிலையற்றவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபாவும் ‘பாதிப்புக்குட்பட்டவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும் அஸ்வெசும கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பால் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்கள் பெரிதும் பயனடைவர். குறிப்பாக தமிழ்ப் பகுதிகளிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போரில் அங்கவீனமடைந்துள்ளவர்கள், முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு இது நன்மை கொடுக்கும். ‘வறியவர்கள்’ என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 9,60,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபாவும் ‘மிகவும் வறியவர்கள்’ என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 4,80, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 4,10, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 8,20, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன.
இது பற்றிக் கருத்து வெளியிட்ட போராளிகளான மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட ஒளிரும் வாழ்வு அமைப்பின் முக்கியஸ்தர் அனஸ்லி, “தேசிய மக்கள் சக்தி அரசு சரியான திசையில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆனால் குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் விடயத்தில் இந்த அதிகரிப்பு மிகச் சொற்பம்” எனத் தெரிவித்தார். “மாற்றுத் திறனாளிகளுடைய நிலை வானவில் போன்று பல நிலைப்பட்டது. இவர்களுடைய நிலையை ஆராய்ந்து அதற்கமைவாக விசேட திட்டங்களின் கீழ் அவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள், அவர்களுக்கு உதவியாளர்கள், மற்றும் தேவயான உபகரணங்கள் வழங்க புலம்பெயர்ந்த தமிழர்களும் அரசும் முன்வரவேண்டும்” என்றும் அனஸ்லி தெரிவித்தார்.