யேசு பிறந்த நாளில் குடிபோதையில் டிப்பரையோட்டி சிறுமியை பலியெடுத்த விபத்து !
கிளிநொச்சியில் நேற்று டிப்பர் மோதி 2வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். தாய், தந்தை மற்றும் 7 வயது மகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாய் ஆபத்தான நிலையில் யாழ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனை முன்பாக நேற்று புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. மதுபோதையிலிருந்த டிப்பர் வாகன சாரதி மோட்டார் சைக்கிளில் குடும்பமாக வந்தவர்களை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என தெரிய வருகின்றது. சராசரியாக நாளொன்றுக்கு 7 பேர் இலங்கையின் வீதிகளில் கொல்லப்படுகின்றார்கள். தென்னாசியாவில் இலங்கையின் வீதிகள் உயிராபத்தானவையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 24ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 25ஆம் திகதி காலை 6மணி வரையான 24 மணி நேர காலப் பகுதியில் நாட்டின் எப்பாகத்திலும் பாரிய விபத்து சம்பவங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என பொலிஸ் திணைக்களம் அறிவித்திருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டு அடுத்த 90 நிமிடத்தில் இவ்விபத்து ஒரு குழந்தையின் உயிரைப் பறித்தது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 251 சாரதிகள் உட்பட, வீதி சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 8,747 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் இவ்வாறு விதிமீறல்களுக்கு உட்படும் வேளையில் சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்திருந்தது.