தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. – மனோ கணேசன்

“யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில்  நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும்.

இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம்.

அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன.

சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள்.

இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு.

இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *